Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஆண்டவர் இயேசு உலகனைத்தின் மீட்பர்! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
ஆண்டவரின் காட்சிப் பெருவிழா மறையுரை
I: எசா: 60: 1-6
II : திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13
III: எபே: 3: 2-3, 5-6
IV: லூக்: 2: 1-12
ஒருமுறை ஒரு கன்னியர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் பிற சமயத்தைத் தழுவிய சகோதரி வெகுநேரமாக அமர்ந்து இறைவேண்டல் செய்து கொண்டிருந்தார். அப்போது அதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு சகோதரி உங்கள் சமயத்தில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டல்லவா! ஆயினும் நீங்கள் இவ்வாறு வந்து செபிப்பது எனக்கு மிகுந்த வியப்பாக உள்ளது எனக் கேட்டார். அதற்கு அந்த பிற சமய சகோதரி "சிஸ்டர் நீங்கள் சொல்வது உண்மைதான். ஆயினும் இங்கு வரும் போதெல்லாம் நான் கோவிலில் சற்று நேரம் அமர்ந்து செபிப்பேன். அத்தருணம் எனக்கு மிகப்பெரிய ஆறுதலாகவும் மனதிற்கு அமைதியாகவும் இருக்கும்"என்று கூறிவிட்டுச் சென்றார்.
அன்பு சகோதர சகோதரிகளே இன்று நாம் ஆண்டவரின் திருக்காட்சித் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்னவெனில் நம் ஆண்டவர் உலகனைத்திற்கும் மீட்பு தருகிறார். அனைவரையும் அரவணைக்கிறார் என்பதே.
விண்மீனின் எழுதலைக் கண்டு கீழ்திசை ஞானிகள் இயேசுவைத் தேடி வந்ததாக நாம் வாசிக்கிறோம். இந்த கீழ்த்திசை என்பது கிழக்கு திசையைக் குறிக்கிறது. அதாவது Western countries. இதிலிருந்து அந்த ஞானிகள் யூதர்கள் அல்ல என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. தாங்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்று எண்ணிக்கொண்டு தங்களுக்கு மட்டுமே மீட்பு என்ற நம்பிக்கையில் பிறரை தமக்குக் கீழ் எண்ணிய யூதர்களுக்கு இந்நிகழ்வு மிகப்பெரிய சவுக்கடி என்றே சொல்லலாம். ஏனெனில் ஆண்டவர் தான் அனைவருக்குமானவன் என்ற தன் பாரபட்சமில்லாத அன்பை இந்நிகழ்வின் மூலம் நமக்கு தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.
உலகனைத்தையும் படைத்த ஆண்டவர் பாரபட்சமும் வேறுபாடும் காட்டவில்லை. ஆனால் நாமோ சாதி மதம் இனம் நிறம் பார்த்து ஆண்டவரின் பிறப்பிற்கான அர்த்தத்தை சீர்குலைத்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையை மாற்றினால் மட்டுமே நமக்கு இது உண்மையான திருக்காட்சித் திருவிழா. இல்லையென்றால் வருடம்தோறும் நாம் நினைவுகூறுகின்ற
ஒரு நாள்.
2023 ஆம் ஆண்டு திருஅவையில் நடைபெறப் போகும் மாமன்றத்திற்காக இப்போதே பல தயாரிப்புகளை திருஅவை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. இம்மாமன்றத்தின் முக்கிய நோக்கமே அனைவரும் இணைந்து பயணிப்பது. திருஅவைத் தலைவர்கள், இறைமக்கள், நம்மிடமிருந்து பிரிந்து சென்ற சபை சகோதர சகோதரிகள், பிற சமயத்தார், இயன்றவர் இயலாதோர், முதியவர், சிறுவர்,மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் இணைந்து இறையாட்சியை அமைக்க புறப்பட வேண்டும் என இயேசுவின் பிரிதிநிதியாய் நின்று திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு அழைப்பு விடுக்கிறார். புற இனத்தவரை ஒதுக்காமல் தன் மாட்சியை வெளிப்படுத்திய ஆண்டவரைக் கொண்டாடும் இந்நாளில், திரு அவை நமக்கு விடுத்துள்ள அழைப்பையும் ஏற்று இணைந்து பயணிக்க க் கற்றுக்கொள்வோம். ஏனெனில் நம் ஆண்டவர் உலகனைத்திற்கும் மீட்பர்.
இறைவேண்டல்
அன்பே இறைவா! அனைவருக்கும் உமது மீட்பை வழங்கக் காத்திருக்கிறீர். நாங்களும் உம்மைப்போல அனைவரோடும் இணைந்து பயனித்து உம் மாட்சியைக் கண்டு வணங்க அருள்தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment