பகிர்வே நிறைவு! | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு


Sharing

இன்றைய வாசகங்கள் (17.08.2020) - பொதுக்காலத்தின் 20 ஆம் திங்கள் - I. எசே. 24:15-24; II. இ.ச. 32:18-19,20,21; III. மத். 19:16-22 

உங்கள் விண்ணகத் தந்தை
நிறைவுள்ளவராய் இருப்பதைப் போல நீங்களும்
நிறைவுள்ளவராய் இருங்கள். மத்தேயு 6:48 

நிறைவு என்பது என்ன? தேவைக்கு அதிகமாக பணமும் பொருளும் படிப்பறிவும் வசதியும் உடையும் சொத்துக்களும் இருப்பதா? அல்லது மன மகிழ்வும் அன்பும் சகோதரத்துவமும் பாசமும் பகிர்தலும் இரக்கமும் கொண்டு வாழ்வதா? இன்றைய வழிபாடு நம்மை நிறைவு உள்ளவர்களாக வாழ அழைக்கிறது. 

ஒரு பள்ளி மாணவர், சிறந்த அறிவாளி, நன்கு படிக்கக் கூடியவர் பணக்கார வீட்டுப் பிள்ளை .அவருக்கு எதுவுமே குறைவில்லை பள்ளியில் அவருக்கு நல்ல பெயர். வகுப்பில் எப்போதும் முதலிடம் தான். பணக்கார வீட்டுப் பிள்ளை. ஆசிரியர்கள் அவனை எப்பொழுதுமே மெச்சுவார்கள். ஆனால் அவனுக்கு நண்பர்கள் வட்டாரம் மிக மிகக் குறைவு. காரணம் இல்லை என்று வருபவர்களுக்கு கை நீளாது. படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு தன்னுடைய அறிவை பகிர்ந்து கொள்ளக்கூடிய எண்ணம் அவருக்கு கிடையாது .நான் தான் எப்பொழுதும் முதல் இடம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தலைதூக்கி இருந்தது.ஆனால் அதே பள்ளியில் மற்றொரு மாணவரும் இருந்தார். பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளை அல்ல. ஆனாலும் தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளக் கூடிய நல்ல மனநிலை அந்த மாணவருக்கு இருந்தது. குறிப்பாக தன்னுடைய அறிவையும் திறமையையும் பின்தங்கிய மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு எப்பொழுதுமே மகிழ்ச்சி இருந்தது. நட்பு வட்டாரங்கள் சுற்றி இருந்தன. மனதில் நிறைவு இருந்தது. 

இதைப் போன்ற அனுபவங்கள் நம் வாழ்விலும் இருந்திருக்கும். நாமும் பலரை இதேபோன்ற மனநிலையுடன் பார்த்திருப்போம். இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை இருப்பதை பிறருக்கு பகிர்ந்து கொடுக்க கூடிய மக்களாக வாழ அழைப்பு விடுக்கிறது. நாம் அருமையான ஒரு பாடல் பாடுவது உண்டு .கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை. வாங்குவதற்கு கைகள் நீள்வதைவிட கொடுப்பதற்கு கைகள்நீள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டிருப்போம். 

இன்றைய நற்செய்தியில் நாம் காணும் இளைஞர் நேர்மையாளர் .யூத மக்களுக்கு மிக முக்கியமானது சட்டங்களை சரிவர கடைபிடிப்பது தான். அவர் எல்லா சட்டங்களையும் குறிப்பாக மோசே வழியாக கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகளை மிகச்சரியாக சிறுவயது முதல் கடைப்பிடித்து வந்திருக்கிறார். கட்டளைகளைக் கடைப்பிடித்தால் போதும் நாம் நிலை வாழ்வு பெறலாம் என்ற எண்ணம் எல்லாம் யூதருக்கும் இருந்தது போல அந்த இளைஞருக்கும் இருந்தது.ஆனாலும் ஏதோ ஒரு குறை மனதில் இருந்தது. அதை தெளிவுபடுத்த இயேசுவிடம் நிலைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர் கேட்டபோது ஒரு புதிய வழியை இயேசு காட்டுகின்றார். மிகுந்த செல்வம் உடையவரை, உனக்கு உள்ளதை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு என்ற ஒரு புதிய வழியை இயேசு கூறுகிறார். இளைஞரின் முகம் வாடியது. இத்தனை காலம் செல்வச்செழிப்பில் நிறைவு காண முயற்சி செய்த அவரை திடீரென செல்வத்தை விடச் சொன்னால் முகம் வாட தானே செய்யும். 

இன்று நமக்கு ஒரு கேள்வி. நாம் எவற்றில் நிறைவு காண முற்படுகிறோம் ?எவை எல்லாம் நமக்கு மட்டும்தான் என்று ஆக்கிரமித்துக் கொள்ள ஆசைப்படுகிறோம்? ஆராய்ந்து பார்த்தால் அது நம்முடைய சேமிப்பாக இருக்கலாம். அழகாக இருக்கலாம். திறமையாக இருக்கலாம் .அன்பாக இருக்கலாம் .நேரமாக இருக்கலாம். வேலையாக இருக்கலாம். இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். எவ்வளவுதான் நேர்த்தியாக நம் கடமைகளையெல்லாம் செய்து எல்லவற்றையும் தன்னகத்தே நாம் வைத்துக் கொண்டாலும், இல்லாதவர்களுக்கு அவற்றை பகிராத போது அதில் நிச்சயமாக நிறைவு இல்லை என்பதை இன்றைய நற்செய்தி மூலமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு தெளிவாக விளக்குகிறார். 

இனிமை என்று நினைப்பவை எல்லாம் எப்பொழுதும் நமக்கு இனிமையாக இருப்பதில்லை .ஒரு காலத்தில் அதன் இனிமை குறையத்தான் செய்யும். இவற்றால் நாம் நிறைவை அனுபவிக்கிறோம் என்று கருதுபவை எல்லாம் ஒரு காலத்தில் நமக்கு ஒன்றும் இல்லை என்று தோன்றும். அதுதான் வாழ்க்கை. இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியேல் இறைவாக்கினர் மூலமாக கடவுள் கூறுகிறார் "மானிடா உன் கண்களுக்கு இன்பம் தருவதை உன்னிடமிருந்து ஒரு நொடியில் எடுத்து விடப் போகிறேன்" என்று. எனவே வாழ்கின்ற நாளில் நமக்கு இருப்பவற்றை இல்லாதவரோடு பகிர்ந்து நிறைவை காண முயற்சி செய்வோம்.

பணத்திலும் பொருளிலும் அறிவிலும் திறமையிலும் நிறைவை காண முயல்வதை விட்டுவிட்டு உண்மையான பகிர்தலில் நிறைவை காண முற்படுவோம். அதுவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு கூறிய வழி. அந்த வாழ்வுக்காக, அத்தகைய நிறை வாழ்வுக்காக இறைவனிடம் ஜெபிப்போம்.

இறைவேண்டல் 

தன்னையே முழுமையாக இழந்த இறைவா கட்டளைகளைக் அடிப்பதிலும் கடமையைச் செய்வதிலும் எங்கள் செல்வங்களை நாங்கள் மட்டுமே வைத்து அனுபவித்துக்கொண்டு நிறைவு காண்பதிலும் எங்கள் வாழ்க்கையை செலவிடுகிறோம். இத்தகைய ஒரு மனநிலையை மாற்றி எங்களுக்கு இருப்பதை இல்லாதவர்களுக்கு பகிர்ந்து , அதன் மூலம் முழுமையான நிறைவை அடைய எங்களுக்கு அருள்தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Comments

Elegant

Add new comment

1 + 4 =