எளிமையும் தாழ்ச்சியும்! | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு


Simplicity and Humility - Cross

 

இன்றைய வாசகங்கள் (18.08.2020) - பொதுக்காலத்தின் 20 ஆம் செவ்வாய் - I. எசே. 28:1-10; II. இ.ச. 32:26-27,28,30,35cd-36; III. மத். 19:23-30 

இன்றைய வழிபாடு நம்மை எளிமையும் தாழ்ச்சியும் கொண்டு வாழ அழைக்கிறது. செல்வம் நமக்கு தேவை தான் இன்றைய வியாபார உலகில் பணம் இல்லாமல் வாழ்வது என்பது மிகக் கடினமான காரியம்தான். கையில் பணம் இன்றி ஒரு நாளை ஏன் ஒரு பொழுதை கழிப்பது என்பது பலருக்கு அசாதாரண சூழ்நிலையாகவே இருக்கின்றது இவ்வுலகில். கால் வயிற்று கஞ்சிக்கு கூட கஷ்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் உழைக்கும் மக்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். மறுபுறமோ தன் செல்வத்தை எவ்வாறு செலவழிப்பது என்று தெரியாமல் இஷ்டத்திற்கு செலவழிக்கும் பணக்கார முதலைகளும் இருக்கிறார்கள். தனக்கு இருப்பது போதாது என்று ஏழை மக்கள் வயிற்றில் அடித்து அதிகம் அதிகமாக சம்பாதிக்கும் மனிதர்களையும் நாம் இந்த சமூகத்தில் பார்க்கத்தான் செய்கின்றோம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு "செல்வர்கள் விண்ணரசில் நுழைவது மிக மிகக் கடினம்" என்று கூறுகிறார். 

செல்வம் ஒருவருக்கு கண்டிப்பாக தேவைதான். ஆனால் இந்த உலகில் செல்வமே கடவுளாக மாறி போய்விடுகிறது . ஒரு கவிஞன் அழகாக கூறுவான் "கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன். கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்" என்று. அளவுக்கு அதிகமான செல்வம் நம்மை செல்வத்திற்கு அடிமையாக்கி விடுகிறது என்பதுதான் அதன் பொருள். அத்தகைய செல்வம் மனிதர்களை அதிக பேராசைக்கு இட்டுச்செல்கிறது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற ஒரு கர்வத்தை தூண்டுகிறது. காசு தான் எனக்கு கடவுள். அதிகம் காசு இருப்பதால் நான் பிறருக்கு கடவுள் என்ற ஆணவத்தை கொடுக்கிறது. ஆனால் செல்வமும் செருக்கும் ஒருவரை கீழே தள்ளிவிடும் என்பது உண்மை. 

செல்வமே சேர்க்கக் கூடாது என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, நமக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும் கடவுளுக்கும் சக மனிதருக்கும் முன்பு எளிமையோடு தாழ்ச்சியும் மரியாதையும் உடையவர்களாய் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். 

ஒரு வசதி படைத்த தொழிலதிபர் வாழ்ந்து வந்தார். நல்ல திறமைசாலி. அதிகம் படித்தவர். உழைப்பாளி. தன்னுடைய திறமையாலும் உழைப்பாலும் அதிக செல்வத்தை ஈட்டி வந்தார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதிக செல்வத்திற்கு சொந்தக்காரரானவுடன் அவருடைய இயல்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனது. சக மனிதரை மதிக்கவில்லை. பிறரை விட தான் பெரிய அறிவாளி என்று மார்தட்டிக் கொண்டார். அதுகூட பரவாயில்லை கடவுள் நம்பிக்கையும் கொஞ்ச கொஞ்சமாக குறைய தொடங்கியது. ஒருநாள் திடீரென அவருடைய வியாபாரத்தில் பெரிய அளவு நஷ்டம் ஏற்பட்டது. கடன் தொல்லைக்கு ஆளானார். முன்பு அவரை மதித்தவர் எல்லாம் இப்பொழுது அவரை இகழத் தொடங்கினர். ஒருவரும் அவரை மதிக்கவில்லை. முன்பு தான் யாரையும் அவர் மதிக்காத காரணத்தால் இப்போது யாரிடமும் உதவி கேட்கக்கூட தயங்கினார். அப்பொழுதுதான் அவர் உணர்ந்தார் செல்வமும் செருக்கும் மனிதனை குழிக்குள் தள்ளும் என்று. 

இதையே நம் அன்னை மரியாள் கடவுள், "செல்வரை வெறும் கையராய் அனுப்புகின்றார், மனதிலே செருக்குற்றரை சிதறடிக்கின்றார்" என்று பாட கேட்கிறோம். இன்றைய முதல் வாசகத்திலும் இறைவாக்கினர் எசேக்கியேல் மூலமாக "நான் தான் கடவுள் என்று நீ சொல்லி கொள்கின்றாய். ஆனால் மற்ற மனிதர்கள் கையால் சாகும்போது நான்தான் கடவுள் என்று உன்னால் சொல் முடியுமா?" என்று கூறி செருக்கு என்பது நமது மனதில் இருக்கக் கூடாது என்பதை தெளிவாக விளக்கிக் காட்டுகின்றார். ஆம் பல சமயங்களில் நாமும் திறமைகளையும் செல்வங்களையும் வைத்துக்கொண்டு நாம் தான் பெரியவர் என்றும் மற்றவரை மதிக்காமலும் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் அந்த நிலை நிரந்தரமாக இருக்கப் போவதில்லை என்பதையே இன்றைய வழிபாடு நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

எனவே நாம் எத்தகைய திறமைசாலியாகவும் அறிவாளியாகவும் செல்வந்தராகவவும் இருந்தாலும், கடவுள் முன் நம்மை தாழ்த்துவோம் எளிமையாக இருப்போம். இருப்பதை வைத்து நிறைவு காண்போம். இருப்பதை பிறருக்கும் கொடுப்போம். பின்பு நாம் விண்ணரசின் சொந்தக்காரர்களாக மாறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னும் தேவைப்பட்டால் கடவுள் பணிக்காக நாம் பிடித்து வைத்திருக்கின்ற தேவையற்ற செல்வங்களையெல்லாம் துறக்க கற்றுக்கொள்வோம். நமக்குத் தேவையானவற்றை அவர் நூறு மடங்காக நிச்சயம் தருவார் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம். 

இறைவேண்டல் 

ஏழைகளின் செல்வமாகிய கடவுளே! எங்களுக்கு நீர் தந்த செல்வத்தால் நாங்கள் மனதில் செருக்குக் கொள்ளாமல் எல்லாம் நீர் தந்தது என்ற நன்றியோடு வாழவும், உமது அழைப்பை ஏற்றவர்களாய் தேவையற்ற செல்வங்களையெல்லாம் விட்டுவிடவும் அருள்தாரும். இதனால் நாங்கள் விண்ணரசின் சொந்தக்காரர்களாக வாழ எங்களுக்கு உம்முடைய அருளை நிறைவாகத் தரும். மேலும் ஏழைகளையும் எளியவர்களையும் துன்பப்படுத்தி அதிக பொருள் சேர்க்கும் பணக்காரர்கள், மனந்திரும்பி உமக்கும் சக மனிதருக்கும் மதிப்புக் கொடுத்து பகிர்ந்து வாழும் நல்ல உள்ளங்களாக மாற உமதருள் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 1 =