Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவும்,யோபுவும் நம் முன்மாதிரிகளா! | குழந்தைஇயேசு பாபு
பொதுக்காலத்தின் 26 ஆம் திங்கள் - I. யோபு: 1:6-22; II. திபா: 17:1-3,6-7; III. லூக்: 9:46-50
ஓர் ஊரில் ஒரு தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்கள், ஊர் மக்களே வியக்கும் அளவுக்கு, இறைநம்பிக்கைக் கொண்டவர்களாகவும், ஆன்மீகக் காரியங்களில் முழு ஈடுபாட்டோடு பங்கேற்பவர்களாகவும்வாழ்ந்து வந்தனர். குழந்தைச் செல்வங்களோடு,பெரும் பொருட்செல்வத்தையும் கொடுத்து கடவுள் இவர்களை ஆசிர்வதித்தார். அனைவரும் இவர்களைக் கண்டு வியந்தனர். ஒரு முறை வியாபாரத்தில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டதால், சொத்துக்களை விற்கும் சூழல் ஏற்பட்டது. எனவே பல்வேறு வகையிலும் பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளானார்கள். இருந்தபோதிலும், அவர்கள் இறைநம்பிக்கையோடும்விசுவாசத்தோடும் நல்லதொரு கிறிஸ்தவக் குடும்பமாக வாழ்ந்து வாழ்ந்தனர்.
இவற்றையெல்லாம் கண்ட, அருகில் வாழ்ந்த நபர் ஒருவர் "இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும், உங்களால் எவ்வாறு இறை நம்பிக்கையோடு, சாட்சிய வாழ்வு வாழ முடிகின்றது?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "திருவிவிலியத்தில் யோபு வாழ்வின் மதிப்பீட்டை எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். அவரின் நற்பண்புகள் துன்பத்தின் மத்தியிலும் எவ்வாறு இறை நம்பிக்கையோடு இருப்பது என்பதை வாழ்ந்தும்,வழிகாட்டியும் சென்றுள்ளார். அதுபோலவே, நம் ஆண்டவர் இயேசுவும் துன்பத்தின் வழியாகத்தான் இறைமாட்சியை நமக்கு வழங்கியுள்ளார். அவர்கள் அருளிய வழியைப் பின்பற்றுவதால் மட்டுமே துன்பத்திலும் தன்னம்பிக்கையோடு, தடுமாறாலும்,தடம் மாறாமலும் எங்களால் வாழ முடிகிறது" என்று கூறினார். இறுதியில் அவர்களின் தன்னம்பிக்கையும், இறை நம்பிக்கையோடு கூடிய ஜெபமும் அவர்கள் இழந்தவற்றிற்கு மேலாகவே அனைத்தையும் பெற்றுக்கொள்ளும்படி இறைவன் அருளினார்.
நம்முடைய கிறிஸ்தவ வாழ்வும் இப்படிப்பட்ட மனநிலையைக் கொண்டு தான் இருக்க வேண்டும். "யோபு" எனும் பெயருக்கு 'வெறுக்கப்படுபவர்' அல்லது 'வதைக்கபடுபவர்' என பொருள். அவரின் பெயருக்கேற்றவாறு தன் வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவித்தார். ஆனால் எத்தகைய சூழலிலும் கடவுளை மறக்கவில்லை, மறுதலிக்கவுமில்லை. எல்லாவற்றையும் இழந்தாலும், இறை நம்பிக்கையில் இறுதிவரை நிலைத்திருந்தார்.
யோபு புத்தகம் துன்பத்தைப் பற்றிய இறையியலை நமக்கு வழங்குகின்றது. யோபின் காலம்வரை துன்பம் என்றாலே 'கடவுளின் சாபம்' என்று இஸ்ரேல் மக்கள் நம்பினர். ஆனால், துன்பத்தின் வழியாகத்தான் உண்மையான வாழ்வை அடையலாம் என்பதை யோபுவின் வழியாக கடவுள் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார். சாத்தானுக்கு யோபுவை சோதிக்க முழு சுதந்திரம் கொடுத்த இறைவன், யோபுவை அழிக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை. இதன் வழியாக யோபுவின் இறைநம்பிக்கைக்கு, இறைவன் அருளிய ஆசீர்வாதங்களை அறியலாம்.
நம்முடைய அன்றாட வாழ்விலே நமக்குள் பலவிதமான கேள்விகள் எழலாம். "நேர்மையாளர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்? அநியாயம் செய்பவர்கள் ஏன் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்? பல நேரங்களில், பல இடங்களில் உண்மை ஊமையாகி,பொய்மை ஆட்சிபுரிவது ஏன்? கடவுள் நல்லவர்களுக்கு பல சோதனைகளைக் கொடுத்தாலும் இறுதியில் கைவிடாமல் பன்மடங்கு ஆசிர்வாதத்தைக் கொடுப்பார். ஆனால் தீமை செய்பவர்களைக் கடவுள் மகிழ்ச்சியோடு வாழ விட்டாலும் இறுதியில் மனமாறா விடில் கடவுளால் கைவிடப்படுவோம் என்ற ஆழமான சிந்தனையை சிந்திக்க இன்றைய வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன. நம்முடைய வாழ்விலே எத்தகைய சூழலிலும் உண்மையோடும் நேர்மையோடும் தூய்மையோடும் இறை மதிப்பீட்டிற்கு சான்று பகரும் பொழுது நிச்சயமாக துன்பத்தின் மத்தியிலும் நம் வாழ்வில் வசந்தத்தைக் காணமுடியும்.
இன்றைய நற்செய்தி வாசகமும் உண்மையான சீடத்துவம் எது என்பதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது. இயேசுவின் போதனைகளைக் கேட்ட சீடர்களும் கூட, இயேசுவை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. இயேசுவின் சீடர்கள் தங்களின் பலவீனமான மனநிலையை வெளிப்படுத்துகின்றனர்தங்களுக்குள்ளேயே 'யார் பெரியவர்?' என்கின்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் இயேசுவோ "இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார் " என்று கூறியுள்ளார். இதன் இறையியல் பின்னணி என்னவென்றால் 'சிறியவர்' என்பது 'தாழ்ச்சியான மனநிலையில் உள்ளவர்கள்' ஆவர். தாழ்ச்சியான உள்ளத்தோடு பிறருக்குத் தொண்டு செய்யும் பொழுது நிச்சயமாக நாம் பல இன்னல்களுக்கு உட்படுவோம். ஆனால் இயேசுவை ஏற்றுக் கொள்வதன் வழியாக மனத்துணிவை பெறும்பொழுது, அந்த இன்னல்கள் தவிடுபொடியாகின்றன. இந்த மண்ணுலகத்தில் சிறியவராகவோ அல்லது துன்பப்படுபவர்களாகவோ காணப்பட்டாலும் நாம் விண்ணகத்தில் மிகப்பெரியவராகக் கடவுளால் உயர்த்தப்படுவோம்.
நம் தொடக்கக் கால கிறிஸ்தவர்கள் நம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியின் பொருட்டு மிகவும் துன்பப்பட்டார்கள். இரத்தம் சிந்திப் படுகொலை செய்யப்பட்டார்கள். இருந்தபோதிலும் நற்செய்தி மதிப்பீட்டிற்காகத் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்தார்கள். மறைச்சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்தாக மாறியது.
திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்களாக மாறியுள்ள நாம் யோபுவைப் போலவும், நம் ஆண்டவர் இயேசுவைப் போலவும், மறைசாட்சிகளாக இரத்தம் சிந்தி மரித்த தொடக்ககாலக் கிறிஸ்தவர்களை போலவும் துன்பத்தின் வழியாக இறைமாட்சி காண்போம். இறைநம்பிக்கையில் தளராமல் சான்று பகரக்கூடிய வாழ்வு வாழ முயற்சி செய்வோம். அப்பொழுது நாம் சான்று பகிரக்கூடிய கிறிஸ்தவ வாழ்வை வாழ முடியும். "மண்ணில் சிலுவையை தாங்காதவர் விண்ணில் மகிமையும் முடிதாங்குவதில்லை" என்று புனித சார்லஸ் கூறியுள்ளார். எனவே இயேசுவின் நற்செய்தி பணியில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் துணிவோடு விண்ணகத்தில் நிறைவான மகிழ்வைப் பெற முன்வருவோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
துன்பத்தின் வழியாக இறைமாட்சி கண்ட எம் இயேசுவே! எங்களுடைய அன்றாட வாழ்விலே எத்தகைய துன்பங்கள்,துயரங்கள் வந்தாலும் அவற்றைக் கண்டு மனம் தளராமல் துணிவோடு நற்செய்தி மதிப்பீட்டுக்குச் சான்று பகரத் தேவையான அருளையும் ஆசீரையும் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Comments
Superb
Superb
Add new comment