Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஜுன் பீகா
யார் இவர்: 1859 டிசம்பர் 2 இல் பிரான்ஸ் நாட்டில் கவுண்டன்செஸ் என்ற இடத்தில் பிறந்தார். அவருடைய தாய் ஸ்டெபானி காட்டின் குணத்திலும் அன்பிலும் சிறந்தவராக இருந்தார். தாய்க்கும் மகளுக்கும் இடையே பிரிக்கமுடியாத உணர்வும் உயர் சிந்தனைகளும் இருந்தது. ஜுனுடைய உடல்நிலை காரணமாக அவருக்கு படிப்பு எல்லாம் வீட்டிலேயே கொடுக்கப்பட்டது. சொல்லப்போனால் அது மற்ற பள்ளி மாணவர்களைவிட சிறந்ததாக இருந்தது. ஆனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குரிய சுகந்திரம், விளையாட்டு, நட்பு போன்றவை அவருக்குக் கிடைக்கவில்லை.
ஜுனுடைய குழந்தைப் பருவத்தில் தான் நற்செய்தி அறிவிப்புப் பணி ஒத்துழைப்பு நவீன முறையில் தொடர்புபடுத்தப்படும் அளவுக்கு முழுவதும் வளர்ந்திருந்தது. அதற்கு மிகவும் முக்கியப் பங்கு வகித்தது பாரிஸ் வெளிநாட்டு நற்செய்தி அறிவிப்பு சபை. இது வடஅமெரிக்கா, கிழக்கு ஆசிய நாடுகளில் தமது முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் கொடுத்தது. ஏற்கனவே பவுலின் ஜாரிகட் அவர்கள் 1822 ஆம் ஆண்டு லியனில் நற்செய்தி அறிவிப்புப் பணியகத்தை உருவாக்கி அதனை மக்களுக்கு எடுத்துச் சென்றார்கள்.
நற்செய்தி அறிவிப்புப் பணிகளில் உள்ள அனுபவத்தையும், பிரச்சனைகளையும் ஐரோப்பிய மக்களுக்கும் அதாவது நற்செய்தி அறிவிப்பு நிறுவனத்தின் வரையறைகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் தொகுத்து Annals of Propagation of Faith என்னும் பெயரில் புத்தகமாக மக்களுக்குக் கொடுத்தனர். அதன் வழியாக பழங்குடி (மண்ணுக்குரிய) மக்களுக்கு (Indigenous) நற்செய்தி அறிவிப்பதிலுள்ள பிரச்சனைகளை அனைவரும் புரிந்துகொண்டனர். இதை வாசித்த ஜுனும் அவருடைய தாய் ஸ்டெபானியும் இதற்கு உதவுவதென முடிவுசெய்தார்கள்.
அதே நேரத்தில் நற்செய்தி அறிவிப்புப் பணியகங்களில் வெளிநாட்டு அருள்பணியாளர்கள் வெளியேற்றப்படுவதும், ஏற்றுக்கொள்ளப்படாத நிலையும் உருவாகிக்கொண்டிருந்ததால் அந்தந்த மண்ணைச் சார்ந்தவர்களை அருள்பணியாளர்களாக உருவாக்குவதில் ஆர்வம் காட்டவேண்டும் என உணர்ந்தார்கள்.
எந்த அரசில் தலையீடுமில்லாத ஒரு உள்தலைமைத்துவத்தையும், அதிகார அமைப்பு முறையும் உருவாக்கவேண்டும். அதன் வழியாக உள்ளநாட்டில் ஆலயங்கள் கட்டுவதும், அருள்பணியாளர்களை உருவாக்குவதும் அவசிய தேவையாக உணர்ந்தனர். 1845 இல் இருந்து உள்நாட்டு அருள்பணியாளர்களிடம் தலைமைப் பொறுப்பினை (1845) ஒப்படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சபைகளையும் நிறுவனங்களையும் உருவாக்கும் நிறுவனர்களுக்கு ஏற்படும் தனிமையும் கைவிடப்பட்ட நிலையும் இவருக்கும் ஏற்பட்டது. அவருடைய தாய் ஸ்டெபானி 1903 ஜனவரி 5 ஆம் நாள் இறந்தார். ஜுன் தன்னுடைய வேதனையையும் தன்னை பின்பற்றிய, ஆதரவு அளித்தவர்களின் அன்பையும் கடவுளுக்கு ஒப்படைத்தார்.
தன்னுடைய நோயினால் 1934 ஏப்ரல் 28 இல் இறைவனடி சேர்ந்தார். குருமாணவர்களையும் மண்ணைச் சார்ந்த தலைவர்களை உருவாக்குவதில் தகுதிவாய்ந்த அதிகாரம் இந்த சபையக்கு இருப்பதாக திருத்தந்தை 15 ஆம் ஆசீர்வாதப்பர் தன்னுடைய மேக்சிமம் இல்லூடு என்னும் மடலில் குறிப்பிட்டார். 1922 மே 3 அன்று திருத்தந்தை 11 ஆம் பத்திநாதர் இதை திருத்தந்தையின் ஆணையமாக அறிவித்தார்.
அவருக்கு அப்படியென்ன சிறப்பு?
1889 ஜுன் 1 ஆம் தேதி நாகசாகி ஆயர்; பாரிஸ் நற்செய்தி அறிவிப்புப் பணி சபை ஒரு கடிதம் எழுதினார். அதில் அங்கு போதிய பொருளாதார வசதியின்மையால் நல்ல குருமாணவர்களைக்கூட அவர்கள் வீடுகளுக்கு அனுப்பவேண்டிய நிலை நிலவுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதை அறிந்த ஜுன் பிகார்ட் உள்நாட்டு குருமாணவர்களை உருவாக்குவதற்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார். எனவே குருமாணவர்களைப் படிக்கவைப்பதற்கு உதவுவது என்பது தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பாக உணர்ந்து, அதற்காக நிதி திரட்டுவதில் முனைந்தனர்.
இவ்வாறு புனித திருத்தூதர் பேதுரு சபை உருவாவதற்கு இவை காரணமாயின. தொடக்கத்தில் இந்த சபை குருமாணவர்களுக்கு உதவித்தொகையும், ஆலயங்களைப் புதுப்பிக்க உதவிகளும் செய்தன. பின்னர் பிகார்ட் அகில உலக திருஅவைக்கும் குருக்கள் தேவை. எனவே உலகிலுள்ள நற்செய்தி அறிவிப்பு நாடுகளின் குருமாணவர்கள் அனைவருக்கும் உதவவேண்டும் என முடிவுசெய்தார்.
அதற்கான வழிமுறைகளை உருவாக்கினார்:
1. தொடர் உதவியாளர்களை உருவாக்குவது.
2. ஒரு குருமாணவரைத் தத்தெடுப்பது.
3. செபம், ஒறுத்தல் மற்றும் வேலை வழியாக உதவுவது.
இதன் நிலைப்புதன்மை இரண்டு மூலக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதனை உணர்ந்திருந்தார்.
1. இறையருள் 2. திருத்தந்தையின் ஆசீர்:
கடவுளின் அருளை அவருடைய ஒவ்வொரு முயற்சியிலும் உணர்ந்தார்.
திருத்தந்தை 8 ஆம் லியோ அவர்கள் தனது அத் எக்ஸ்ட்ரிமஸ் ஒரியன்டிஸ் என்னும் மடல் வழியாக உள்நாட்டினரை குருத்துவத்திற்கு பயிற்றுவிப்பதன் உடனடித் தேவையையும், அதற்கு எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பதனையும் குறிப்பிட்டிருந்தார்.
சில இடங்களில் நற்செய்தி அறிவிப்புப் பணியாளர்கள் நற்செய்தி அறிவிப்புப் பணியகத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாட்டினைப் பின்பற்றவில்லையென்றால் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே உள்நாட்டுக் குருக்களை உருவாக்குவது உடனடித் தேவையானது.
புனித திருத்தூதர் பேதுரு நிறுவனமானது அதற்கான போதுமான நிதி திரட்டியபோது திருத்தந்தையின் அங்கிகாரத்திற்காகக் காத்திருந்தது. 1895 இல் அதற்கான அதிகாரப்பூர்வமான அங்கிகாரம் கிடைத்தது. திருத்தந்தையின் நற்செய்தி அறிவிப்புப் நிறுவனமும் அதற்கு முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தது.
கடைசியாக ஜுன் இயேசுவிடம் “இயேசுவே நான் உமது அன்பில் என்னையே நான் முழுமையாக இழக்கும்வரை நீர் என்னுடன் பயணத்தோழராகப் பயணியும் என கெஞ்சிக்கேட்கின்றேன்” என வேண்டினார்.
நாம் என்ன செய்யலாம்:
நாமும் நம்முடைய குழந்தைகளை நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு அனுப்ப இயலவில்லையென்றாலும், குருமாணவர்களை பயிற்றுவிக்க, பணிக்கும் தாராளமாக உதவலாமே.
மேலும் கூடுதல் தகவல்களை: www.tamil.rvasia.org என்னும் இணையதள முகவரியில் காணலாம்.
Add new comment