Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கேத்தரீனா செச்சினீ
யார் இவர் - அன்னை கேத்தரீனா செச்சினீ இத்தாலி நாட்டில் வெனீஸ் நகரில் 1877 மே 24 இல் பிறந்தார். அவர்களின் இளமை பருவம் பற்றிய குறிப்பு அதிகம் இல்லை. இவர் புனித கியாகோமோ தெல் ஓரியோ ஆலயத்தில் 1978 ஜுன் 3 இல் திருமுழுக்குப் பெற்றார். புனிதர்கள் ஜெரமியா யனெ லூசியா ஆலயத்தில் 1885 மே 25 இல் உறுதிபூசுதல் பெற்றார்.
மிகவும் உணர்ச்சிமிக்கவராக எல்லாராலும் அறியப்படுகிறார் இருப்பினும் அவள் ஆர்வமிக்க, கலகலப்பான, நகைசுவையுள்ள பெண்ணாக இருந்திருக்கிறார்.
தனது பத்தாவது வயதில் அதாவது அவருடைய தொடக்கப்பள்ளியை நிறைவுசெய்தபோது, திராட்சை இரச வியாபாரியான அவருடைய தந்தைக்கு வரவு செலவு கணக்குப் பார்க்க உதவினார்.
ஏழைகள்மீது ஒரு தனிப்பட்ட இரக்கம் கொண்டிருந்தார். தெருவில் இருக்கும் அவருடைய பங்கைச் சார்ந்த சிறுவர்களுக்கு உதவினார். சில வேளைகளில் வீட்டிற்கு அழைத்துவந்து உணவு உடை கொடுத்தார்.
இந்த பிறரன்பு பண்பு இறைவனின் இரக்கத்தால் அவரில் வளர ஆரம்பித்தது. அது அவரை எப்பொழுதாவது வெளிப்படும் இரக்கத்தை தாண்டி, அவருடைய முழு சக்தியையும் கொண்டு இறையாட்சி பணியை உலகெங்கும்; வாழும் உண்மையான ஏழைகளுக்கு எடுத்துசெல்ல வேண்டுமென தூண்டியது. உண்மையான ஏழை என்பதற்கு இறைவனை இன்னும் அறியாதவர்களே என்று புதிய பொருள் கொடுத்தார்.
1905 ஆம் ஆண்டு தேமினிக்கன் சபையைச் சார்ந்த அருள்பணியாளர் ஜியோகோண்டோ பியோ லோர்க்னா அவர்களை தன்னுடைய ஆன்மீகக் குருவாக ஏற்றுக்கொண்டார். ஏறக்குறைய 25 ஆண்டுகள் அதாவது அவர் இறக்கும்வரை கேத்தரின் இயேசுவின் சிலுவையையும் நற்கருணையையும் அன்புசெய்ய வழிகாட்டினார்.
நற்கருணை வழி நற்செய்தி அறிவிப்புக் கொள்கைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தபின், 1948 அக்டோபர் 17 ஆம் தேதி தன்னுடைய ஆவியை கடவுளிடம் ஒப்படைத்தார். தன்னுடைய சபையின் சட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதியிருந்தது அவரில் நிறைவுற்றது: நம்முடைய மண்ணுலக வாழ்வின் இறுதியில் சாவின் விளிம்பில் இயேசு வெளிப்படுத்தியதுபோல நம்முடைய இதயமும் வெளிப்படுத்தும் ஓர் அன்பின் வார்த்தை – எல்லாம் நிறைவேறிவிட்டது.
அவருக்கு அப்படியென்ன சிறப்பு?
உண்மையான மனிதனை சந்திப்பதுபோல கேத்தரீனா நற்கருணையில் பிரசன்னமாயிருக்கும் இயேசுவைச் சந்தித்தார். நற்கருணையில் கடவுள் நிர்மூலமாக்கப்பட்டு, மறைந்திருக்கிறார். அவருக்கு மட்டுமே நம் வாழ்வை மாற்றக்கூடிய சக்தி இருக்கிறது என்பதனை அறிந்திருந்தார்.
நற்கருணை பெற்றபின்பு அவர் சரியானவராக இருக்கவும், கடவுளோடு ஒன்றித்திருக்கவும் ஒரு அழுத்தாமான விரும்பம் அவரில் வளரத் தொடங்கியது. அவர் நற்கருணையைத் தியானிக்கும்போது அவருடைய உண்மையான சுயத்தையும், ஒன்றுமில்லாமையையும் உணரமுடிந்தது. அதே வேளையில் தொலைதூரத்தில் தேவையில் இருப்பவர்களை கண்டுணரக்கூடிய சக்தியையும் அவருக்குக் கொடுத்தது.
கிறிஸ்துவோடு அவர் கொண்டிருந்த ஒன்றிப்பு அவர் உள்ளத்தில் நற்செய்தி அறிவிப்பிற்கான அழைப்பை உருவாக்கியது. அது அவளிடம் அன்பிற்கான வெளிப்பாடாக மாறியது. எந்த அளவிற்கென்றால் ஆன்மாக்களுக்கான கிறிஸ்துவின் தாகத்தை இவர் அவரில் உணர்ந்தார்.
ஆன்மாக்களுக்காக நான் பெரும் தாகம் கொண்டுள்ளேன். இயேசுவே, அத்தகைய ஆன்மாக்களை என்னிடம் கொடும். நான் அவர்களை உம்முடைய தூய்மையான அழகான பாதத்தில் கொண்டுவந்து சேர்கிறேன் என எழுதுகிறார் (செப்டம்பர் 16, 1912).
நானும் இயேசுவின் சிலுவைப் பாடுகளையும், நற்கருணை பிரசன்னத்தையும் தியானித்து, அதன் அன்பின் ஏக்கத்தைப் பகிர்ந்துகொள்ள, இயேசு துன்பத்தின் வழியாக தனது அன்பை வெளிப்படுத்தி ஆன்மாக்களை மீட்டதுபோல, நானும் செய்ய ஆவலாய் இருக்கிறேன் என்கிறார். இவ்வாறு என் சகோதர சகோதரிக்காக பலியாக கொடுக்க விரும்புகிறேன்.
புனித அமல அன்னையின் திருவிழா அன்று கேத்தரீன் தன்னையே ஆண்டவரின் இரக்கமிகுந்த அன்பில் ஒப்படைத்தார். அவரில் ஒரே பெரிய விசயமாக வந்த அவருடைய பல ஆசைகளையும், உள்ளுணர்வுகளையும் கொண்ட பயணத்தின் தொகுப்பு இது: என்னில் ஒரு மாபெரும் விருப்பத்தை உணர்கிறேன். என் கடவுளே! நான் உம்முடைய அன்பின் திருத்தூதராக விரும்புகிறேன். பிறரன்பின் மறைசாட்சியாக விரும்புகிறேன். என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் உமது அன்பை உலகறியச் செய்யவும். உமது மாட்சிக்காகவும், ஆன்மாக்களின் நலனுக்காவும் செலவழிக்க விரும்புகிறேன்.
நற்கருணை பிரசன்னத்தினால் உந்தப்பட்டு அவர் பல்வேறு நற்செய்தி அறிவிப்பு பணியினை மேற்கொண்டார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
முதலாவது, 1915 ஆம் ஆண்டு திருத்தூதுப் பக்கம் என்னும் பெயரில் ஒன்றை வெளியிட்டார். அதில் ஒரு மாதத்திற்கான ஒவ்வொரு நாளுக்குரிய செபமும், நற்செய்தி அறிவிப்பிற்காக ஒவ்வொருவரின் கடுமையான உழைப்பு, நற்செய்தி அறிவிப்பு பணிக்கான இறையழைத்தல், நற்செய்தி அறிவிப்பு பணிசெய்பவர்களின் ஆன்மீக, பொருளாதார தேவைகள் மற்றும் இயேசுவை இன்னும் அறியாதவர்களின் மனமாற்றம் ஆகிய அனைத்தையும் இறைவனிடம் ஒப்புக்கொடுக்கும் செபமும் உள்ளடக்கியது.
இரண்டாவது, ஒரு மணிநேர ஆராதனை. அதில் உலகம் அனைத்திலும் நடைபெறும் நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக நற்கருணை பிரசன்னத்தில் செபிக்குமாறு அனைவரையும் அழைத்தார்.
மூன்றாவது, அவருடைய சியன்னா நகர் புனித கேத்தரீன் நற்செய்திப் ஒன்றிப்பு - இது தனிப்பட்ட வார்த்தைபாட்டினால் இணைக்கப்பட்ட பெண்கள் குழு. அவர்கள் ஒவ்வொரு மாதமும் சந்தித்து நற்செய்தி அறிவிப்பிற்காக சில மணிநேரங்கள் வேலைசெய்தார்கள், நற்செய்தி அறிவிப்பு பணி செய்பவர்களுக்காக செபித்தார்கள். இவர்களுக்கு வழிகாட்ட ஒரு குருவாணவர் இவர்களுடன் பயணித்தார்.
பணியும் செபமும் அடங்கிய அவருடைய இரட்டை இயக்கம் நற்செய்தி அறிவிப்பு ஆய்வகம் என்ற அமைப்பை உருவாக்கினார். அது பின்னர் மறைமாவட்ட நற்செய்தி அறிவிப்பு ஆய்வகமாக மாறியது. பணியும் செபமும் மட்டுமே நம்முடைய இலக்கின் உச்ச வினையை அடைய உதவும் என்று கூறுகிறார். இதையே நம்பிக்கையற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார்.
இறுதியாக, மாசில்லாக் குழந்தைகளின் சின்ன திருதூதர்கள் என்னும் நிறுவனத்தையும் உருவாக்கினார். அங்கே நற்செய்தி அறிவிப்புப் பணிக்காகச் செபித்தார்கள்.
இறைவனின் திருவுளத்தை அறிந்துகொள்ள பல ஆண்டுகள் சிந்தனையாலும் செபத்தாலும், சில குருக்களின் வழிகாட்டுதலாலும் தன்னை தயாரித்தபின்னர் 1912 ஆம் ஆண்டு ஒரு துறவற சபையை ஆரம்பிக்கவேண்டும் என்னும் எண்ணம் அவருக்கு கேசல் தி காட்ஜியோ என்னும் இடத்தில் உதயமானது. அந்த சபையானது அகில உலக நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கவேண்டும் எனவும் எண்ணினார்.
போரின் பேரழிவின் காரணமாக கேத்தரீன் 1918 இல் நவேரா என்னுமிடத்தில் தஞ்சம் புகுந்தார். அங்குள்ள சாந்தா மரியா தெலி கிராசியா ஆலயத்தில் திருபாடுகள் (Passionist) சபையைச் சார்ந்த அருள்பணியாளர் லூயிசியை சந்தித்து தன்னுடைய ஒப்புறவு அருள்அடையாளத்தில் பங்குகொண்டார். அவரிடம் சபை தொடங்குவதற்கான அனைத்து திட்டங்களையும் சொல்லவில்லை என்றாலும், தந்தை லூயிசி கேத்தரீனை உற்சாகப்படுத்தினார். சபை தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளிலும் தந்தை லூயிசி கேத்தரீனுடன் உடன்பயணித்தார்.
கேத்தரீன் ஆன்மீக ரீதியாக இணைந்திருந்த சகோதரிகளுடன் வெனிஸ் நகர கர்தினால் பியட்ரோ லா ஃபோன்டைன் அவர்களைச் சந்தித்து அவருடைய ஆசியை வேண்டினார். 1922 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் கர்தினால் ஒரு பக்த சபையாக ஆரம்பிப்பதற்கான ஆணையில் கையெழுத்திட்டார். முதல் முதலில் 1923, மே 30 இல் கேத்தரினும் இரு சகோதரிகளும் இணைந்து தங்கள் குழும வாழ்வைத் தொடங்கினர். 1923-1933 வரை அவர்கள் தங்களை செபத்திலும், ஒறுத்தலிலும் ஈடுபடுத்தி வாழ்ந்தார்கள்.
பல தடைகளைக் கடந்து சபையின் சட்டங்கள், விதிமுறைகள் உருவாக்கப்பட்டதுபின், 1933 ஏப்ரல் 10 ஆம் நாள் திவ்ய நற்கருணையின் நற்செய்தி அறிவிப்பு பணியாளர்கள் தோற்றுவிக்கப்பட்டது. எந்த நற்செய்திப் பணியாக இருந்தாலும் அதில் செபமும் தியாகவும், அர்ப்பணமும் இருக்கவேண்டும் என்று கூறுகிறார்.
அவர்களுடைய பணியாளது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் நல்வாழ்வுக்காக என்ற இலக்கோடு, கத்தோலிக்க நற்செய்தி அறிவிப்புப் பணியின் ஆன்மீக, பொருளாதார தேவைக்காக கடவுளின் துணையை நாடினார்கள். அதே வேலையில் நற்செய்தி அறிவிப்புப் பற்றிய சிந்தனையை எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என முனைந்தார்கள். கேத்தரீனுடைய வாழ்வும் ஆன்மீகமும் நற்கருணை ஆண்டவரிடம் மையம்கொண்டிருந்தது.
இப்பணியானது பாடுகள் இல்லாமல் நடைபெறாது என்பதனை அறிந்திருந்தார். அவர் நோயினால் தொடந்து பாதிக்கப்பட்டபோதும், மற்றவர்கள் தவறாக புரிந்துகொண்டபோதும் வருகின்ற சிலுவையை ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை. இரவு நேரங்களில்கூட நற்கருணை பேழையின் முன் அமர்ந்து அதிக நேரம் செபிப்பதில் அவர் சக்தியும் ஆற்றலும் பெற்றார்.
நாம் என்ன செய்ய முடியும்!
நற்கருணை ஆண்டவரில் நம்மை முழுமையாகக் கரைத்து, வாழ்வின் சாவால்களைச் சந்திக்க தேவையான சக்தியையும் ஆற்றலையும் பெற்று, பிறருக்கும் அவற்றைக் கற்றுக்கொடுக்கவேண்டும்.
மேலும் கூடுதல் தகவல்களை: www.tamil.rvasia.org என்னும் இணையதள முகவரியில் காணலாம். #veritastamil #rvapastoralcare
Add new comment