சமூக வலைதளங்களுக்குள் நாமும் நம் தலைமுறையும் 

காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. வாழ்வின் வழிமுறைகளும், கலாச்சாரமும், விழுமியங்களும் சமரசம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதுவரை கேள்விக்குட்படுத்தபடாத சில நல்ல பழக்கங்களும், கெட்டப் பழக்கங்களும் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. இதன் ஆரம்பம் என்னவென்றால் சமூக வலைதளங்களும் அதன்வழி செய்திபரவாலக்கமும்தான். ஆக, சமூக வலைதளங்கள் சமூக மாற்றத்திற்கும் சமூக ஏமாற்றத்திற்கும் வழிவகை செய்கின்றன. இவை அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தும் இரும் பெரும் பருவத்தினர் குழந்தைகளும், இளைஞர்களுமே. 

உயரிய நோக்கத்திற்காக மக்களை ஒன்றுதிரட்டி போராடக்கூடிய மனநிலையை ஏற்படுத்தியதில் சமூக வலைதளங்கள் ஆற்றிவரும் மாபெரும் பங்கினை நாம் அனைவரும் அறிவோம். குறைந்தபட்சம், நாட்டில் சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் நாம் தெரிந்துகொள்ளக்கூடிய நிலைக்கும் நாம் உயர்ந்திருக்கி;ன்றோம். 

மறந்துபோன, மறக்கடிக்கப்பட்ட பல உறவுகளை தேடிக் கண்டுபிடித்திருக்கின்றோம். உலகம் நம் கையில்தான் என்று சொல்லி உலகின் எந்த மூலையில் நம்மவர் இருந்தாலும் அவர்களைப் பார்த்துக்கொண்டேப் பேசுவதற்கான ஒரு அமைவிடத்தை அமைத்திருக்கின்றோம். 

எங்கெல்லாம் புதிய தொழில் முறைகளும், புதிய வாய்ப்புகளும் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் நாம் எளிதில் இலவசமாக தெரிந்துகொள்வதற்கான ஒரு அமைப்பை பெற்றிருக்கின்றோம். புதிய சாதனையாளர்களையும், அங்கிகரிக்கபடாத ஞானிகளையும், படைப்பாளிகளையும் எந்த கிராமத்திலிருந்தாலும் அவர்களை இனம்கண்டுகொள்ளும் அளவிற்கு நாம் வளர்ந்திருக்கின்றோம். 

பரிவினைகளையும், பாகுபாடுகளையும் ஒட்டுமொத்தமாக எதிர்த்து மனிதநேயம் பேணும் நல்ல மனிதர்களும் ஒருபுறம் பெருகிக்கொண்டே இருக்கின்றார்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை காரணம் சமூக வலைதளங்கள் என்று பார்க்கும்போது இறைவனுக்கு இத்தகைய கொடைகளுக்காக நன்றி சொல்லாமல் இருக்க இயலாது. 

அதே வேளையில் இந்த மாற்றங்கள் ஒவ்வொரு மனிதனில் நிகழ்கின்றதா என்று எண்ணிப் பார்த்தால் அது என்னில் சந்தேகத்தை எழுப்புகின்றது. ஒரு குழுவாக இணைகின்றபோது இத்தகைய பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தனிமனித ஆளுமையில் பல பின்னடைவுகளையே ஏற்றபடுத்துகின்றன என்று ஆய்வுகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

ஜெர்மன் நாட்டிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஏறக்குறைய 1500 மாணவர்களைக் கொண்டு சமூக வலைதளங்களைப் பற்றிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல 2015 ஆம் ஆண்டு மிசோரி பல்கலைக்கழகமும் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டது. சமூக வலைதளங்கள் தனிமனித வாழ்வில் பொறாமை, ஒப்பிட்டுபார்த்தல், தாழ்வுமனப்பான்மை, அடிமைத்தனம் போன்ற பல்வேறு எதிர்மறையானப் பாதிப்புக்களையே அதிகம் ஏற்படுத்துகின்றன என இரண்டு ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. பொதுவாக, குழுவாக செயல்படுவதற்கான பல்வேறு நன்மைத் தனங்களைக் கொண்டுவந்தாலும்கூட, தனிமனிதர்களின் வாழ்வில் பல எதிர்மறையான விளைவுகளை உருவாக்குகின்றன.

இன்று குழந்தைகளும் இளைஞர்களும் அதிகமாக Facebook, Whatsapp, Twitter, Blogs, Youtube, Instagram, Messengers, Linkedin போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகி;ன்றன. பல நேரங்களில் படிக்கின்னற இளைஞர்கள் கொஞ்ச நேரம் என்று பயன்படுத்த ஆரம்பிக்கின்றார்கள், ஆனால் அவர்களை அறியாமல் பல மணிநேரம் விரயம் செய்கின்றனர். 

சிலர் இரவு உறங்குவதற்குமுன் பல மணிநேரம் செலவழித்து, இரவு தூக்கத்தை இழந்து, கடைசியாக அடுத்த நாளையும், வாழ்வின் இலக்கையும் இழந்துவிடுகின்றார்கள். சில வேளைகளில் தாங்கள் பார்ப்பது மற்றவர்களுக்கு தெரியகூடாது என்பதற்காக தங்களுக்குள்ளே பாதுகாப்பு வளையத்தையும், மறைவிடத்தையும் தேடிக்கொள்கின்றார்கள். ஆக அவைதான் இவர்ளைக் கட்டுபடுத்துகின்றதே தவிர, இவர்கள் அவைகளைக் கட்டுப்படுத்துவதில்லை. கடைசியில் அடிமைகளாக வாழ்கின்றனர். 

இதனால் அவர்களுக்கு அவர்களுடைய வயதால் கிரகிக்க இயலாத பல அபத்தமான, ஆபத்தான விசயங்களையும் அவர்கள் அறியாமலே உள்வாங்கிக்கொள்கின்றனர். இதனால் அவர்கள் வயதிற்கு மிஞ்சிய பல போராட்டங்களை தங்கள் உள்ளே வைத்துக்கொண்டு வெளிபடுத்த தெரியாமல், பகிர இயலாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். 

இந்த தவிப்பு அவர்களின் பண்புகளில், செயல்களில் வெளிப்பட ஆரம்பிக்கின்றது. பெற்றோர்கள் அவர்களின் உள்ளார்ந்தப் போராட்டங்களை அறியாமல் அவர்களின் வெளிப்புற செயல்களுக்கு தீர்வுகான முயற்சிப்பது இன்றைய காலத்தின் சாபக்கேடு, சமூகத்தின் பேரழிவு. சமூக வலைதளங்களை வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம், பயன்படுத்துவதில் கட்டுபாடுகளை நமக்கு நாமே உருவாக்குவோம், மற்றவருக்கும் கற்றுக்கொடுப்போம். தவறியவர்களையும், தவி;ப்பவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கும் கற்றுக்கொடுப்போம்.

நாம் அடிமைகளல்ல, உரிமை குடிமக்கள், சுகந்திரத்தை முழுவதும் உணரக்கூடிய மனித இனம்!
 

Add new comment

1 + 5 =