Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தீயது தந்த நன்மை
கொரோனா கொடுத்திருக்கும் சரிவுகள் பாதிப்புகள் அலறல்கள் கதறல்கள் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சரியமானது. ஆம் பெரும் எச்சரிக்கையினை உலகுக்கு சொல்கின்றது. 1950 க்கு பின் வேகமாக மாறிய உலகிது அதுவும் 1990 க்கு பின் பணமே பிரதானம் என்றாயிற்று, எப்படியும் சம்பாதி, சம்பாதித்து கொண்டாடு என்ற அளவு நிலமை மாறியது.
குறிப்பாக இத்தலைமுறைக்கு பந்தபாசம், பக்தி, ஞானசிந்தனை என எதுவுமில்லை. அவர்களின் சிந்தனையும் மனமும் குணமும் பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலே இருந்தது. உலகின் உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கியது உலகம், அது பாசத்தை மறந்தது, கடமையினை மறந்தது, கடவுளை மறந்தது, பணம் எல்லாவற்றையும் காக்கும் என நம்பியது.
இதோ மாநகரங்களின் இன்னொரு பக்கம் ஆம் பப்கள் என இரவெல்லாம் குடியும் ஆட்டமும் பாட்டமுமான மையங்கள் காலியாய் கிடக்கின்றன, மசாஜ் சென்டர் என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்த மையம் மூடி கிடக்கின்றது. மது குடி மையங்கள் மூடிகிடக்கின்றன, விபச்சாரத் தொழில்செய்பவர்கள் சும்மாவே வந்தாலும் வாடிக்கையாளன் தலைதெறிக்க ஓடுகின்றான், கடன் சொல்ல கூட தோன்றவில்லை. மது ஆலைகள் சானிட்டைசர் தயாரிக்கின்றன. இளம் தலைமுறையிடம் பெரும் கலாச்சார சீர்கேட்டை விளைவித்த தமிழக திரையுலகம் மூடிக்கிடக்கின்றது, தாங்கள் கடவுளுக்கு நிகர் என கருதிய நட்சத்திரங்கள் மல்லாக்கக் கிடக்கின்றன. அவர்களை ஆட்டிவைத்த சக்திகள் அஞ்சி ஒடுங்கி இருக்கின்றன.
ஐரோப்பிய நிலை இன்ன்னும் மோசம். ஆயுத கம்பெனிகள் அடைபட்டு கிடக்கின்றன, போதை மருந்து பித்தர்கள் தனித்திருந்து தங்களை தாங்களே குணமாக்குகின்றனர். அட குடிக்கவில்லை என்றால் சாகமாட்டோமா என சிந்திக்கின்றது குடிகார தலைமுறை பியூட்டி பார்லர் செல்லாமல் மேக் அப் செய்யாமல் வாழமுடியுமா? அது சாத்தியமா. அட ஆமாம் என ஒப்புகொள்கின்றது மங்கையர் இனம். அரை டவுசர் போடும் வெள்ளைகாரி முதல் புடவைக்காய் சுற்றும் தமிழச்சி வரை எல்லா நாட்டு மங்கையருக்கும் அவரவருக்கான உண்மை தேவை புரிகின்றது.
ஆடம்பரம், ஆட்டம்பாட்டம் , வெட்டி பந்தா, நிலையா அழகு, வற்றிவிடும் செல்வம் பின்னால் ஓடிய கூட்டம் ஞானத்தை மெல்ல உணர்கின்றது. பணம், பணம் என ஓடிய தாயும் தந்தையும் அருகிருக்க கண்டு மகிழ்கின்றது மழலை கூட்டம். நெடுநாளைக்கு பின் தன் மக்கள் நலம் விசாரித்து ஊட்டிவிடுவதில் கண்ணீர் விடுகின்றது முதியோர் கூட்டம். பாவகாரியங்கள் விலக்கபடுகின்றன. பாவத்தின் கொண்டாட்ட மையங்கள் மூடபடுகின்றன. தொழிற்சாலை இயக்கமில்லை, விமானமும் இரயிலும் இயக்கமில்லை என்பதால் காற்றின் தரம் உயர்ந்தாயிற்று. அண்டார்டிக்கா பனிபாறைகளுக்கு புது இறுக்கம் கிடைத்தாயிற்று. ஆட்டமும் பாட்டமுமாய் நான் காண்பதே உலகம், தெய்வம் எனக்கு கைகட்டி வழிவிடும் என சவால்விட்டவனை எல்லாம் அஞ்சி ஒடுங்கி துப்பாக்கி முனையில் அமர வைத்துவிட்டது காலம்.
தனித்திருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஞானம் பிறக்கின்றது. உணவு முதல் தொழில்வரை தன் பாரம்பரியத்தை நினைத்து பார்க்கின்றான், எவ்வளவு தூரம் விலகிவிட்டோம் என்பதை உணர்கின்றான், உண்மையில் எது தேவை என்பது அவனுக்கு தெரிகின்றது. கொரோனாவினை அனுப்பிய சக்தி அதில் சிரிக்கின்றது. தன் திட்டம் கனவு வேகம் ஆசை எதிர்பார்ப்பு எல்லாம் கண்முன் உடைந்து அதெல்லாம் வெறும் மாயை என உணர்ந்து அடங்கி இருக்கின்றான் மனிதன். பிரமாண்ட இயற்கை முன்னால் தான் தூசு என்பதும், நீர்குமிழி வாழ்வு எப்பொழுதும் உடையும் என்பதும் மானிடனுக்கு புரிகின்றது.
அடங்கா யானையினை தனி செல்லில் பட்டினி போட்டு அடித்து வழிக்கு கொண்டுவரும் பாகனை போல மனிதனை கட்டிவைத்து பாடம் சொல்லிகொடுக்கின்றது காலம். ஜல்லிகட்டு காளையாக வலம் வந்த அவனுக்கு சரியான மூக்கணங்கயிறு போட்டு கட்டுகின்றது காலம். தமிழகம் அவரவரின் கடவுளை ஒவ்வொரு வீட்டிலும் வணங்குகின்றது.
ஐரோப்பாவோ எல்லாம் கோவில்களை காலியாக்கிய பாவம் என கண்களை துடைத்து ஆலயம் திறக்கும் நாளை எதிர்பார்கின்றது. சிரிய துருக்கி போர், சவுதி ஏமன் போர் கூட நின்றிருக்கின்றது, எல்லோருக்கும் பொதுவான காலம் அடிக்கும் அடியில் அடங்கி நிற்கின்றது போர்வெறி கூட்டம். காலமோ இயற்கையோ கடவுளோ அனுப்பிய கொரோனா மானிட சமூகத்துக்கு ஞானத்தின் எச்சரிக்கை. காலம் நினைத்திருந்தால் இதை விட கொடிய நோய் அனுப்பி மானிட சமூகத்தை சரித்து போட சில நாழிகை ஆகியிருக்காது. ஆனால் எச்சரிக்கின்றது, ஆம் இது எச்சரிக்கை, மானிட இனத்தை மெல்ல எச்சரிக்கின்றது காலம்.
அதில் மெல்ல ஞானம் பெற்றுகொண்டிருகின்றான் மனிதன், அந்த ஞானம் நிலைக்காவிட்டால் மறுபடி இதைவிட வலுவாக அடிக்க காலத்துக்கு தெரியாதா என்ன?
Add new comment