விழிப்பு உள்ளவர்களா நாம்! | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு


awareness

இன்றைய வாசகங்கள் (27.08.2020) - பொதுக்காலத்தின் 21 ஆம் வியாழன் - I. 1 கொரி.1:1-9; II. திபா 145:2-3,4-5,6-7; III. மத். 24:42-51

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் விழிப்புணர்வோடு வாழும் பொழுது நம் வாழ்வில் வெற்றி அடைய முடியும். விழித்திருந்து இரவு முழுவதும் தலைகுனிந்து படிப்பவன் சாதனைகள் பல செய்ய முடியும். நம்முடைய வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம் நாம் விழித்திருந்து செயல்படாதேயாகும்.

எவனொருவன் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் தனக்குள் என்ன நடக்கிறது என்பதையும் முழுமையாக உணர்ந்து வாழ்கிறானோ அவனே விழிப்பு உடையவன். அவனே வெற்றி பெறுபவன்.

ஒருமுறை சில இளைஞர்கள் ஊர் சுற்றிப்பார்க்க ஒரு புதிய ஊருக்கு சென்றார்கள். அவர்கள் வழியிலே சென்று கொண்டிருந்த போது பெரியவர் ஒருவர் "தம்பிகளா இந்தப்பக்கம் வழி சரியில்லை.  பார்த்து செல்லுங்கள்" என்றார். 

அதற்கு அந்த இளைஞர்கள் "பெருசு உங்களை விட எங்களுக்கு கண் நன்றாக தெரியும்" என்று ஏளனமாக சொல்லிவிட்டு சென்றார்கள். விளையாடிக்கொண்டும் அறட்டை அடித்துக்கொண்டும் சென்றவர்கள் பாதையை கவனிக்கத் தவறினார்கள். இறுதியில் தவறி வீழ்ந்தவர்களாய் காயத்துடன் வீடுதிரும்பினார்கள். ஆம் விழிப்பு இல்லையென்றால் பாதையிலும் சரி வாழ்கையிலும் சரி நாம் தவறி வீழ்வது நிச்சயம்.

எனவே தான் இன்றைய நற்செய்தி மூலமாக நம்மை விழிப்பாயிருக்க இயேசு அழைக்கிறார்.நாம் யார்? நாம் யாரைப் பிரதிபலிக்கிறோம்?நாம் என்ன செய்கிறோம்? நம் வாழ்க்கையின் நெறி என்ன ?என்பதை நம்மை படைத்த இறைவனும், நம்முடன் வாழும் மனிதர்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதை பல சமயங்களில் நாம் உணர்வதில்லை.அதனாலேயே நாம் வாழ்க்கையில் பல தோல்விகளையும் துன்பங்களையும் சந்திக்கிறோம். மாறாக நம் வாழ்வு மறைவானது அல்ல என்பதை உணர்ந்தவர்களாய் நம் சிந்தனை சொல் செயல்களை தூய்மையாக்கி நமக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளை சரியாக செய்யும் போது சக மனிதர்கள் மட்டுமல்ல இறைவனே பாராட்டக்கூடிய சிறந்த பணியாளர்களாய் நாம் இருப்போம் என்பதில் ஐயமில்லை. அதுவே நமக்கு கிடைக்கும் உண்மையான பேறு என இயேசு கூறுகிறார்.

விழிப்பாயிருந்து தூயவாழ்வு வாழவே நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.இன்றைய முதல் வாசகம் தூயோராக வாழ்வதே நமக்கு கொடுக்கப்பட்டுள்ள உயரிய அழைப்பு என்பதை சுட்டிக்காட்டுகிறது. நம் கிறிஸ்தவ வாழ்வு இறைவன் கொடுத்த கொடை. எனவே நம் வாழ்வு தூய இறைவனை பிரதிபலிக்கும் வண்ணம் நம் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை தூய்மையாக்கி கிறிஸ்துவோடு நாம் இணைய வேண்டும் என்று புனித புவுல் கூறுவதை நாம் காண்கிறோம்.  

நம் உடல் இறைவன் கொடுத்த கொடை. இவ்வுலக வாழ்வில் ஆன்மா குடிகொள்ளும் இருப்பிடம். இந்த உடல் தூய ஆவியாரின் ஆலயம். இவற்றை நாம் புனிதமாக பயன்படுத்த வேண்டும். நம் ஆன்மா தான் நிலையானது. இந்த உடல் நாம் இந்த உலகில் வாழும் வரைக்கும் தான் நம்மோடு வரும். அதன் பிறகு கடவுளால் மண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனித உடல் இறந்த பிறகு மண்ணிற்கே  கையளிக்கப்படும். எனவே இவ்வுலகம் சார்ந்த உடல் நிலையற்றது. ஆனால் இதை புனிதமாக பயன்படுத்தும் பொழுது நம் மனதும் ஆன்மாவும்   தூய்மையாக்கப்படும். நம் மனதும் ஆன்மாவும் தூய்மையாக்கப்படும்பொழுது நிச்சயமாக மண்ணுலகிலும் விண்ணுலகிலும் கடவுளுடைய உடனிருப்பை உணர்ந்து நிலையான வாழ்வை பெற்றுக் கொள்ள முடியும்.

இறைவனின் மீட்பை பெற உள்ளமும் ஆன்மாவும் தூய்மையாக இருக்க வேண்டும். அதற்காக உலகம் சார்ந்த உடலுக்கு எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நம் கத்தோலிக்கத் திருஅவையின் புனிதர்களை ஆய்வு செய்து பார்த்தால் அவர்கள் அனைவரும் தங்கள் உடலை தூய ஆவியின் கோயிலாகக் கருதி அனைத்தையும் ஒப்படைத்தார்கள். அதே போல நாமும் இறைவனின் மீட்பை சுவைக்க விழிப்புணர்வோடு உடலையும் ஆன்மாவையும் தூய்மைபடுத்த வேண்டும். அப்பொழுது நாம் இயேசு வருகை எப்போது இருந்தாலும் நாம் தயாராக இருக்க முடியும். விழிப்புணர்வின் வழியாக இயேசு இறையாட்சி மதிப்பீட்டை அறிந்து உணர்ந்து வாழ்வாக அருளைத் தரும்.

எனவே விழிப்போடு இருந்து தூயோராய் விளங்க இறைவன் நமக்கு விடுத்த அழைப்பை வாழ்வாக்க இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா, விழிப்போடு இருக்கவும் தூய வாழ்வு வாழவும் எங்களை அழைத்திருக்கிறீர். நாங்களோ பல வேளைகளில் விழி இருந்தும் விழிப்புணர்வின்றி வாழ்கிறோம். எங்கள் புறக்கண்களையும் அகக்கண்களையும் திறந்து விழிப்புணர்வுடன் வாழ அருள் தாரும். இதனால் நாங்கள் எங்கள் வாழ்வை சீரமைத்து தூயோராகவும் உம் மனம் விரும்பும் பணியாளர்களாகவும் வாழும் வரம் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

12 + 2 =