விருப்பு வெறுப்புகளைக் கடந்து அனைவரையும் அன்புசெய்வோமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் - முதல் சனி  - I. இச: 26:16-19; II. தி.பா: 119:1-2.4-5.7-8; III. மத்: 5:43-48

ஒரு திரைப்படப் பாடல்வரிகள் இவ்வாறாக அமைகின்றது. "நாமெல்லாம் சுவாசிக்க தனித்தனி காற்று கிடையாது. மேகங்கள் மேகங்கள் இடங்களைப் பார்த்து பொழியாது" எவ்வளவு உண்மையான வார்த்தைகள். இயற்கை இறைவனைப் பிரதிபலிக்கின்றது. அன்பே கடவுள் என்கிறோம். கடவுள் மன்னிக்கிறார். பாரபட்சம் பார்ப்பதில்லை . சூரியன் அனைவருக்கும் ஒளிதருவதைப் போல, மேகங்கள் மழையை நல்லோர் மேலும் தீயோர்மேலும் ஒன்று போல் பொழிவதைப்போல,  ஆண்டவர் அனைவர் மேலும் அன்பு கூறுகிறார் என நம்புகிறோம். ஆனால் நாம் மட்டும் ஏன் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என வேறுபடுத்துகிறோம்? பகை உணர்வுகளை வளர்க்கிறோம்? யார் தான் நம் எதிரிகள்? சற்று நம்மை ஆய்வு செய்வோம்.

ஒரு துறவற இல்லத்தில் வாழும் இரு அருட்சகோதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. ஒருவர் மற்றொருவரைப் பார்க்கக் கூட விரும்புவதில்லை. அவசரத்திற்கு உதவி புரியும் மனமும் இல்லை. இதை நீண்ட நாட்களாக கவனித்துக் கொண்டிருந்த தலைமை சகோதரர் அவர்களை அழைத்துப் பேசினார். அப்போது அவருக்குத் தெளிவாகப் புரிந்த ஒரு விஷயம் என்னவென்றால் இருவருக்குமிடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. காரணமில்லாமலேயே இருவரும் ஒருஒருக்கொருவர் பகை உணர்வுகளை வளர்த்துக் கொண்டனர்.

நம் வாழ்வில் நடப்பது இதுதான். பலரை நாம் விரும்பாததற்கு எந்தக் காரணமும் இருப்பதில்லை. எங்கோ, என்றோ நாம் கேட்டவைகளைக் கொண்டும், நம்முடைய எதிர்பார்ப்புக்கும் ரசனைக்கும் ஏற்றவாறு பிறர் நடக்காத போதும், நம்மை விமர்சிக்கும் போதும் நாம் ஒருசிலர் மீது காழ்ப்புணர்வு கொள்ள ஆரம்பிக்கிறோம். நாளடைவில் அவை பகையாக மாறிவிடுகிறது. இயேசு இத்தகைய மனநிலையை மாற்ற நம்மை அழைக்கிறார். ஒருவருடைய செயல் தவறாக இருந்தால் அச்செயலை வெறுக்கலாமே தவிர அந்நபரை வெறுக்கக் கூடாது. அவரிடம் நம் வெறுப்புணர்வைக் காட்டி பகையை வளர்க்கக் கூடாது.  

"பகைவரையும் அன்பு" செய்யுங்கள் என இயேசு கூறுகிறார். சிலுவையில் தொங்கும் போது கூட தன்னைத் துன்புறுத்தியவர்களை மன்னித்தார் என நாம் அறிவோம். மன்னிப்பு என்பது அன்பின் உச்சகட்டம். அந்த இயேசுவின் சீடர்களாய் வாழ ஆசிக்கும் நாம் எல்லோரும் நம்முடைய விருப்பங்கள், வெறுப்புகளைக் களைந்து அனைவரையும் நம் அன்பு வட்டத்துக்குள் இணைக்க வேண்டும். பின் பகைவர் என்றும்,பிடிக்காதவர்கள் என்றும் யாருமே நம் வாழ்வில் இருக்கமாட்டார்கள். 

இன்றைய முதல் வாசகத்தில் கடவுளுடைய கட்டளைக் கடைபிடிப்பவர்களே அவரின் மக்கள் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. கடவுள் இயேசு வழியாக நமக்குக் கொடுத்த கட்டளை அனைவரையும் விருப்பு வெறுப்புகளைக் கடந்து அன்பு செய்ய வேண்டும் என்பதே. அதை கடைபிடிக்க முயலுவோம். அவரின் பிள்ளைகளாவோம்.

இறைவேண்டல்

அன்பே உருவான இறைவா! பகைவர், பிடிக்காதவர் என எவரையும் ஒதுக்காமல் எங்கள் விருப்பு வெறுப்புகளைக் கடந்து அனைவரையும் அன்பு செய்யும் வரம் தாரும். ஆமென்.

Add new comment

1 + 6 =