கிறிஸ்தவ வாழ்வு : தொண்டு ஏற்பதற்கா?  ஆற்றுவதற்கா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் - இரண்டாம் புதன் - I. எரே: 18:18-20; II. தி.பா: 31:4-5.13.14-15; III. மத்: 20:17-28

கிறிஸ்தவ வாழ்வு என்பது தொண்டு செய்து வாழ்வதாகும். ஏனெனில் நம் முன்னோடி ஆண்டவர் இயேசு கிறிஸ்து தொண்டு செய்வதற்கு உதாரணமாய் இருக்கிறார். இயேசு இறைமகனாக இருந்த போதிலும் தொண்டு ஏற்காமல் தன் பணியின் வழியாகத் தொண்டு செய்து வாழ்ந்தார். உலகத்தின் பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கு தொண்டு ஆற்ற வேண்டும் என நினைக்கின்றனர். எனவே தங்களுடைய பின்புலத்தையும் பணபலத்தையும் படிப்பையும் பயன்படுத்துகின்றனர். அதிகாரத்தின் வழியாக சின்னஞ்சிறியோரை அடக்கி அவர்களுக்குத் தொண்டு செய்ய வற்புறுத்துகின்றனர். சாதியின் பெயரால் ஒருசிலர் தங்களைவிடத் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அவர்களுக்குத் தொண்டு செய்ய வற்புறுத்துகின்றனர். படித்து அதிகாரத்திற்கு வந்த அரசு அதிகாரிகள், தங்களுக்கு கீழ் பணியாற்றும் பணியாளர்களையும் தங்களிடம் வரும் மக்களையும் தங்களுக்குத் தொண்டுசெய்ய வற்புறுத்துகின்றனர். இவை அனைத்தும் கடவுளின் பார்வையில் தவறானது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் மனித மாண்பு உண்டு. தொண்டு செய்வதென்பது பிறரை வற்புறுத்தி செய்வதல்ல; மாறாக,   அவர்களாக முன்வந்து செய்வதாகும். இதைத்தான் ஆண்டவர் இயேசு வலியுறுத்தியுள்ளார்.

'மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்' என்று கூறினார்'' (மத்தேயு 20:28). இந்த இறை வார்த்தை மனிதர்களாகிய நாம் பிறருக்குத் தொண்டு செய்ய அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைச் சுட்டிகாட்டுகிறது. தொண்டு செய்வதென்பது கட்டாயத்தினால் அல்ல; மாறாக, ஆழமான அன்பினால் வருவது. தொண்டு செய்யும் மனநிலைக்கு முன்னுதாரணம் நம் ஆண்டவர் இயேசு. இயேசு நினைத்திருந்தால் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி பிறரை தனது பணியாளர்களாக மாற்றியிருக்க முடியும். சீடர்களை தனக்கு தொண்டு செய்பவர்களாக இவ்வுலகம் சார்ந்த குருக்களை போல் செய்திருக்க முடியும். ஆனால் இயேசு அப்படி செய்யாமல் இறுதி உணவின்போது தன்னுடைய சீடர்களுடைய  காலடிகளை கழுவி, தொண்டு செய்வதுதான் உண்மையான தலைமைத்துவத்திற்கு அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு எதிர்மறையாக செயல்பட்டவர்கள் தான் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும். இவர்கள் சட்டத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் மக்களை அடக்கி ஒடுக்கினர். அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்து மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கினர். பிறர் தங்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற மனநிலையில் வாழ்ந்தனர். இவர்களின் மனநிலையில்தான் பல நேரங்களில் நாமும் வாழ்ந்து வருகிறோம். இது இயேசுவின் மனநிலைக்கு எதிரானது. இயேசுவை பின்தொடர்ந்த சீடர்களும் இயேசுவின் மனநிலையைப் புரிந்துக்கொள்ளாமல் இருந்தனர். இயேசு ஒரு மெசியாவாக இருந்து ஆளும் அரசுகளை வென்று, அரசராக மாறுவார். அவரின் அரசாட்சியில் தங்களுக்கும் பங்குண்டு என்ற சிந்தனையில் இருந்தனர்.

எனவேதான் செபதேயுவின் மனைவி தம் மக்களோடு இயேசுவிடம் வந்து "நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்'' என்று வேண்டினார். அதற்கு இயேசு மிகத் தெளிவாக துன்பக் கிண்ணத்தைப் பருக வேண்டும் என பதிலளித்தார். 

பிறருக்குத் தொண்டு செய்வதால் கூட நாம் பல இன்னல்களை இடையூறுகளை மன உளைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.அவை பல சமயங்களில் நமக்குத் துன்பக் கிண்ணங்களாகத் தோன்றலாம். உலகத்தை மீட்க இயேசு சிலுவை என்ற துன்பக்கிண்ணத்தைப் பருகினார். இயேசுவின் வழியில் பணிபுரிந்த சீடர்களும் துன்பக்கிண்ணத்தைப் பருகினர். நாம் வாழ்ந்த காலத்தில் கூட தொண்டு ஆற்றியதற்காக சகோதரி. ராணி மரியா, ஆயர் ஆஸ்கர் ரொமேரோ, அன்னை தெரசா போன்றோர் அவமானங்கள், உயிரை இழக்கும் அளவுக்குகூட துன்பக்கிண்ணங்களைப் பருகினர். இப்படிப்பட்ட துன்பங்கள் நம்மை நெருக்கினாலும், இனிமேல் பிறர்பணி எதற்கு என முட்டுக்கட்டைகளைப் போட்டாலும், அவை அனைத்தையும்  கடந்து நாம் தொடர்ந்து தொண்டாற்றும் போது மக்களின் மனதில் இடம் பெற முடியும். அது கடவுளின் அருகில் இடம்பிடிப்பதற்கு சமம். இதைக் கருத்தில் கொண்டு தொண்டு பெற அல்ல தொண்டு ஆற்ற வேண்டும் என்ற மனநிலையில் இயேசுவைப் போல வளர, வாழ, பணிபுரிய இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா> இயேசுவைப்போல் துன்பக் கிண்ணங்களை ஏற்றுக்கொண்டு தொண்டு புரியும் வரம் தாரும். ஆமென்.

Add new comment

8 + 1 =