Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மதிப்பினை உணர்வோமா!"| குழந்தை இயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் - மூன்றாம் திங்கள் - I. 1 அர: 5:1-15; II. திபா: 45:1.2;43:3.4; III. லூக்: 4:24-30
ஒரு ஊரில் தந்தையை இழந்த ஒரு மாணவன் படித்து வந்தார். ஒரு கல்லூரியில், இயற்பியல் துறையைத் தேர்ந்தெடுத்து, கடினப்பட்டு உழைத்து படித்தார். முதுகலை முடித்து முனைவர் பட்டமும் பெற்றார். இவர் படிக்கின்ற காலத்தில் ஏழ்மையாக இருந்ததால் பல மக்கள் இவரை ஏளனமாகப் பார்த்தனர். போதிய வசதி இல்லாததால் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். கடினப்பட்டு உழைத்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தன்னுடைய தாயை கவனித்துக் கொண்டார். சுயமாக வேலை செய்து தான் படித்தார். கடின உழைப்பால் இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெருமளவிற்கு உயர்ந்தார். கல்லூரியிலே நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு நேர்காணலில் பங்கெடுத்து மிகப்பெரிய அறிவியல் அறிஞராக மாறினார். சாதாரண கிராமத்தில் பிறந்த அந்த மாணவர், மிகப்பெரிய சாதனையை அறிவியல் துறையில் செய்தார். எனவே அவர் பற்பல விருதுகளை வாங்கினார்.
ஒரு முறை அவர் சொந்த ஊருக்கு வந்த பொழுது இவரைப் பற்றி ஊர் மக்களுக்குத் தெரியவில்லை. இவரை கண்டுகொள்ளாமல் இருந்தனர். இவர் தன் சொந்த ஊருக்கு வந்த செய்தி அறிந்ததும் ஊடகத்துறையினர் இவரின் ஊரையும் வீட்டையும் நேர்காணல் செய்தனர். அனைவரும் வியப்பாக வரை பார்த்தனர். அப்பொழுது ஊடகத்துறையில் ஒரு நபர் "இந்த மாணவரால் இந்த ஊருக்கு பெருமை.நம் நாட்டுக்கு பெருமை. அந்த அளவுக்கு சாதனைகள் செய்திருக்கிறார்" என்று கூறினார். உலகம் முழுவதும் பார்க்கக்கூடிய ஒரு தனியார் தொலைக்காட்சியில் இந்த மாணவரின் ஊரும், அம்மாணவரின் நேர்காணல் பகிர்வும் ஒளிபரப்பப்பட்டன. இதைக் கண்ட ஊர்மக்கள் அந்த மாணவரின் திறமையைக் கண்டு பெருமை கொண்டனர். அவரை தரக்குறைவாக நினைத்தவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
பல நேரங்களில் நம்மோடு வாழக்கூடிய நபர்களின் மதிப்புத் தெரியாமல் அவர்களை தரக்குறைவாக நினைக்கிறோம். பெரும்பாலும் எல்லோருக்கும் தனித்திறமை உண்டு என்பதை மறந்து பிறரைத் தரக்குறைவாக நடத்தி இருக்கிறோம். இத்தகைய மனநிலை தான் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் அவர் சொந்த ஊர் மக்களிடம் இருந்தது. இயேசுவின் போதனைகளையும் வல்ல செயல்களையும் கண்ட மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். அவரின் மதிப்பும் ஆற்றலும் தெரியாமல் அவரை குறுகிய வட்டத்துக்குள் பார்த்து ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். எனவே தான் ஆண்டவர் இயேசு "இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை" (லூக்கா 4:24) என்று கூறியுள்ளார்.
இயேசுவை ஏன் சொந்த ஊர் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்? யூதர்களாகிய இயேசுவின் சொந்த ஊர் மக்கள் பிற இனத்தாரை மிகவும் தாழ்வாகக் கருதினர். தாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற மமதை அவர்களிடம் மேலோங்கி நின்றது.புற இனத்தவரை மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை. ஆனால் ஆண்டவர் இயேசு பிற இனத்தவரிடமுள்ள நற்பண்புகளைச் சுட்டிகாட்டி பெருமையாகப் பேசினார். அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொள்ள முடியாத இயேசுவின் சொந்த ஊர் மக்கள் இயேசுவையும் ஏற்றுக்கொள்ளத் தயங்கினர்.
அதோடு மட்டுமல்லாமல் இயேசு இறைவாக்கினர் எலியா, எலிசா போன்ற சக்தி வாய்ந்த இறைவாக்கினர்களை எடுத்துக்காட்டாகக் காட்டி அன்றிலிருந்து இன்றுவரை யூதர்கள் தங்களின் குணத்தை மாற்றாமல் இருக்கும் உண்மைக்தன்மையைச் சுட்டிக்காட்டினார். உண்மை பல சமயங்களில் கசக்கத்தான் செய்யும். தங்களின் உண்மைத் தன்மையை எதிர்கொண்டு தவறுகளை ஏற்றுகொள்ள மனமில்லாத யூதர்கள் அன்று தன் மூதாதையர் செய்த அதே தவற்றை இயேசுவுக்கு எதிராய்ச் செய்தனர். அவரைப் பழிவாங்கத் துடித்தனர். அவர் மீது கோபம் கொண்டனர். இயேசுவின் உண்மையான மதிப்பு அவரின் போதனையின் ஆழம் போன்றவற்றை தெளிவாகப் புரிந்திருந்தால், நிச்சயமாக இயேசுவை ஏற்றிருப்பார்கள். இயேசுவை ஏற்றிருந்தால் இயேசுவின் வழியாக மீட்பின் கனியை முழுமையாகச் சுவைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் இயேசு தந்த மீட்பை முழுமையாகச் சுவைக்க வாய்ப்பினை இழந்தனர். ஏனெனில் இயேசுவின் மதிப்பை அவர்கள் உணராமல் இருந்தனர்.
இயேசு நம்மை மீட்க வந்த மீட்பர் என்பதை முழுமையாக நம்பி அவரைப் பின்பற்றும் பொழுது நிறைவான மகிழ்ச்சியையும் மீட்பின் கனியையும் சுவைக்க முடியும். இயேசுவின் மதிப்பீடுகளை மதித்து அவரை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பொழுது நம் வாழ்வில் நிறைவை காண முடியும். நம்மோடு வாழக்கூடிய மக்களை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்வோம். அவர்களின் தனித் திறமையை பாராட்டுவோம். அவர்களிடம் உள்ள உண்மைத் தன்மையை கற்றுக் கொள்வோம். நமது தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது திருத்திக்கொள்ள முயலுவோம். அப்பொழுது நம் வாழ்வு வசந்தமாய் மாறும்.
இறைவேண்டல்
அன்பான இறைவா! எங்களோடு வாழக்கூடிய நபர்களை மதிப்புக் குறைவோடு நடத்தாமல், அவர்களுடைய தனித் திறமையை பாராட்டி வழி காட்ட அருள்தாரும். ஆமென்.
Add new comment