மனமொத்து செபிப்போமா! | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு


Praying together

இன்றைய வாசகங்கள் (12.08.2020) - பொதுக்காலத்தின் 19 ஆம் புதன் - I. எசே. 9:1-7;10:18-22; II. திபா. 113:1-2,3-4,5-6; III. மத். 18:15-20 

திருமணமாகி 13 வருடங்களாக குழந்தை இல்லாத ஒரு பெண்மணி மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் படிக்கின்ற ஒரு பள்ளியில் வேலை செய்து வந்தார். அவர் ஒரு இந்துப் பெண்மணியாக இருந்தாலும் இயேசுவின் மேல் அதிகம் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். குழந்தை இல்லையே என்ற மன வேதனை இருந்தாலும் முகமலர்ச்சியோடு இந்த குழந்தைகளுக்கு பணிவிடை செய்வார்.

ஒருமுறை ஆசிரியர்களிடம் தன்னுடைய மனவேதனையை அவர் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த போது ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து ஒரு முடிவெடுத்தார்கள். தினமும் காலை ஜெபத்தில் எல்லா குழந்தைகளோடும் இணைந்து அந்த ஆசிரியருக்கு இறைவன் ஒரு குழந்தை தர வேண்டும் என சிறப்பாக மனமொத்து ஜெபிக்க வேண்டும் என்பதுதான் அந்த முடிவு. அவர்கள் முடிவு எடுத்ததற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் காலையில் அந்த ஆசிரியரின் பெயர் சொல்லி அனைவரும் உருக்கமாக ஜெபித்தார்கள்.

என்ன ஆச்சரியம் என்றால் கடவுள் யார் ஜெபம் என்றால் என்ன என்று உணராத அந்த மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் கூட அவருக்காக உருக்கமாக ஜெபித்தார்கள். அவர்கள் ஜெபத்தை கேட்ட இறைவன் இன்று அவருக்கு ஒரு குழந்தையை பரிசாக கொடுத்து இருக்கின்றார். ஆம் இது ஒரு உண்மை நிகழ்வு. குழந்தையைப் பெற்ற அந்த தாயானவள் உங்கள் அனைவரின் ஜெபத்தையும் கடவுள் கேட்டு எனக்கு அருளினார் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலமாக இயேசு நம் அனைவரையும் ஒன்றுபட்டு ஜெபம் செய்ய அழைக்கின்றார். அவ்வாறு ஒன்றுபட்டு மன்றாடும் போது நம்முடைய ஜெபத்தின் வலிமை அதிகமாகிறது என்பதை அதன் மூலம் உணர்த்துகிறார். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார் என்ற இறை வார்த்தை இதை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. ஒன்றுபட்டு இணைந்து ஜெபிப்பதற்கு சிறந்த உதாரணமாக அன்னை மரியாவும் திருத்தூதர்களும் இணைந்து ஜெபித்த நிகழ்வை நாம் காணலாம் .அவ்வாறு அவர்கள் இணைந்து ஜெபிக்கும்போது ஆவியின் வல்லமை அவர்களிடம் எழுவதையும் அவர்கள் இறையாட்சியை போதிப்பதற்கான அதற்கான வல்லமை பெற்றதையும் கண்கூடாக காணமுடிகிறது. 

மனம் ஒத்த நான்கு பேர் ஒரு முடக்குவாதமுற்றவரை கட்டிலோடு இயேசுவிடம் தூக்கிக்கொண்டு போனபோது, இயேசு அவரை குணமாக்கினார் என்பதையும் நாம் நற்செய்தியில் வாசிக்கின்றோம். 

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" "கூடி வாழ்ந்தால்கோடி நன்மை" போன்ற பல பழமொழிகளை நாம் தமிழில் கேட்டிருக்கின்றோம். எந்த ஒரு காரியத்தை செய்தாலும் குழுவாக செய்யும்போது அனைவரும் மனம் ஒத்து ஒரே உணர்வுடன் வேலைகளை பகிர்ந்து செய்யும்போது அதற்கான வெற்றி நிச்சயம் கிடைக்கிறது. சமுதாயத்தில் நடக்கின்ற பல அநீதிகளை நாம் அனைவரும் சேர்ந்து எதிர்க்கும் போது அதற்கு பல வெற்றிகள் கிடைப்பதை நாம் காண்கிறோம்.

இந்த ஒற்றுமையை நாம் ஜெபிப்பதிலும் காட்டினோம் என்றால் நம்முடைய ஒவ்வொரு வேண்டுதலையும் இறைவன் நிறைவேற்றுவார் என்பதில் ஐயமில்லை.ஒருமித்து ஜெபிக்கும் போது நாம் ஒற்றுமையில் வளர்கிறோம் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்கிறோம் ஒருவர் மற்றவர் செய்த குற்றங்களை மன்னிக்கிறோம். எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜெபிப்போம் மனமொத்து ஜெபிப்போம். குடும்பமாக இணைந்து இறைவேண்டல் செய்வோம். திருச்சபையோடு இணைந்து ஒருமித்த மனதோடு இறைவேண்டல் செய்வோம். உலகின் பல்வேறு தேவைகளுக்காக அனைவரும் இணைந்து ஜெபிப்போம். நம்முடைய ஜெபத்தை நிச்சயம் இறைவன் கேட்பார்.குறிப்பாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற இந்த கொரோனா நோயிலிருந்து அனைவரும் விடுதலை பெற இந்த நாட்களில் ஒருமித்து ஜெபிப்போம் நம்முடைய ஜெபத்தை ஏற்று இறைவன் நோயுற்ற இந்த உலகத்தை குணமாக்குவார்.

இறைவேண்டல் 

எங்கே இருவர் மூவர் என் பெயரால் கூடி இருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன் என்று உரைத்த ஆண்டவரே இதோ ஒருமித்த மனதோடு நாங்கள் உம்மை வேண்டுகிறோம். எங்கள் இல்லங்களிலும் திருச்சபையிலும் இறைமக்களாகக்கூடி இருக்கும்போதும் ஒருமித்த மனதோடு ஜெபிக்க கூடியவர்களாக எங்களை மாற்றும். இதனால் நாங்கள் உம்மை அதிகமாக எங்கள் நடுவில் உணரவும் உம்முடைய வல்லமையைப் பெறவும் அருள்தாரும் ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 1 =