மனமாற வாய்ப்பா? | குழந்தைஇயேசு பாபு


Repentance

இன்றைய வாசகங்கள் (28.07.2020) - பொதுக்காலத்தின் 17 ஆம் செவ்வாய் - I. எரே. 14:17-22; II. திபா. 79:8,9,11,13; III. மத். 13:36-43

நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம். ஏனெனனில் எல்லாம் செய்பவர் நீரே.

நம்முடைய அன்றாட வாழ்வின் நெருக்கடியான நேரங்களிலும் கடவுளின் மீது நம்பிக்கை கொண்டு அவரின் ஆட்சிக்குரிய மக்களாய் வாழ இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. நாம் வாழ்கின்ற இந்த காலகட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் நாம் காண்பதும் கேட்பதும் நன்மைகளை விட தீமைகள்தான். நான் செய்வதுதான் சரி, அது மற்றவரை பாதித்தால் எனக்கென்ன ? நான் நன்றாக வாழ்ந்தால் போதும் என்ற மன்நிலையில் வாழ்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

தட்டிக்கேட்க யாருமில்லை என்ற தைரியத்தில் எண்ணற்ற குற்றங்கள் புரியும் மனிதர்களால் எத்தனையோ ஏழை, எளிய மக்களும், சாமானிய மக்களும், குற்றமறியா நேர்மையாளர்களும், பலத் துயரங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாவதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். 

அந்நேரங்களில் நமக்கு எழும் சிந்தனை என்ன? எல்லா தவறுகளையும் செய்பவர்கள் உலகில் நன்றாகத்தான் வாழ்கிறார்கள். ஏன் நல்லவர்களாக இருந்து நாம் மட்டும் துன்பங்கள் படவேண்டும்? கடவுள் கூட இவர்களை தண்டிப்பதில்லையே? என்பவைதான். 

ஆனால் இன்றைய நற்செய்தியின் வழியாக இதற்கு ஒரு விடை தருகிறார் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. கடவுள் பாரபட்சம் பார்ப்பதில்லை. எல்லோரையும் ஒன்று போல் அன்பு செய்கிறவர் அவர் ஒருவரே. அனைவருக்குள்ளும் நல்லெண்ணங்களை விதைப்பவர் அவரே. அலகையின் சோதனையாலேயே தீய எண்ணங்களுக்கும் சோதனைகளுக்கும் செயல்களுக்கும் ஒருவர் அடிமையாகிறார். ஆனால் கடவுள் அவர்களையும் வளர விடுகிறார் என்றால் மனமாற பல வாய்ப்புகள் தந்து நல்ல வாழ்வு வாழ அழைக்கிறார். இதுதான் பவுலடியார் "கடவுள் காலம் தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்துபோகாமல், எல்லாரும் மனம்மாற வேண்டுமென விரும்புகிறார்" (2 பேது 3:9) என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டுகிறார். 

கொடுத்த வாய்ப்பினை பயன்படுத்தாதப் பொழுது அதற்கானத் தண்டனையை அவர் நிச்சயம் அனுபவிப்பார் என்ற கருத்தை ஆழமாக சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். 

எனவே நமது அன்றாட வாழ்விலே கடவுள் நமக்கு மனமாற்றம் பெற்று புது வாழ்வு வாழ திருவழிபாட்டு கொண்டாட்டங்கள் வழியாகவும் இறைவார்த்தை போதனைகளின் வழியாகவும் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வதன் வழியாகவும் நம்மை அழைக்கின்றார். மனமாற்றம் பெற்று புதுவாழ்வு பெற நமக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளை பயன்படுத்துகிறோமா? என சிந்திப்போம். 

எனவே திறந்த உள்ளத்தோடு நம் குற்றங்களை ஏற்றுக்கொள்ள சக்கேயுவைப் போலவும் புனித அகுஸ்தினாரைப் போலவும் முன் வர அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு மனமாற்றத்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்யும்பொழுது நம்வாழ்வு நன்மை நிறைந்த வாழ்வாகவும் அருள் நிறைந்த வாழ்வாகவும் இருக்கும். இதன் வழியாக கடவுளின் பேரின்ப வாழ்வை இம் மண்ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் அனுபவிக்க முடியும். ஆனால் கொடுக்கப்பட்ட வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தாதப் பொழுது அதற்கான தண்டனையை இறுதியில் அவரவர் ஏற்றாக வேண்டும். மனமாற்றம் பெறுவதும் தண்டனையை ஏற்பதும் நமது கையில்தான் இருக்கின்றது. சிந்திப்போம் செயல்படுவோம். 

இறைவேண்டல்

அன்பு நிறை இயேசுவே! இந்த உலக வாழ்விலே நாங்கள் மனமாற்றம் பெற்று புது வாழ்வு வாழ்ந்திட எண்ணற்ற வாய்ப்புகளை எங்களுக்கு வழங்கி வருகிறீர். எனவே அந்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி புது வாழ்வு வாழ்ந்திட உமது அருளையும் ஆற்றலையும் தரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு

சிவகங்கை மறைமாவட்டம்​

Add new comment

1 + 0 =