நாம் படைக்கப்பட்டது நற்செயல்கள் புரியவே! | குழந்தைஇயேசு பாபு


creation

பொதுக்காலத்தின்  29 ஆம் திங்கள் - I. எபே 2:1-10; II. திபா: 100:1-2,3,4,5; III. லூக்: 12:13-21

விடுமுறையைக் கழிக்க விடுதியிலிருந்து தன் வீட்டுக்கு வந்தார் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன். வீட்டில் தன் தாய் தந்தை பாட்டி தாத்தா தங்கை என எல்லாரோடும் மகிழ்ச்சியாய் நாட்களைக் கழித்தார். எப்போது வீட்டிற்கு வந்தாலும் தன் பாட்டியுடன் அதிக நேரம் செலவிடுவார். தன் அனுபவங்களையெல்லாம் சுவாரசியமாக பகிர்ந்து கொள்வது அவருடைய வழக்கம். இம்முறையும் அவ்வாறு பகிர்ந்து கொண்டார். ஆனால் சற்று வித்தியாசமான அனுபவம் அவருக்கு கிடைத்தது. எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்த முகத்தோடு அவன் பேசுவதைக் கேட்கும் பாட்டி இந்த முறை அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால் இம்முறை தன் பேரன் தான் செய்த நல்ல செயல்களையும் உதவிகளையும் பெரிதாக்கி தன்னைப் போல் யாரும் இல்லை என்ற மனநிலையோடு பேசிக்கொண்டிருந்தார். தன் பாட்டியின் முகத்தில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த பேரன் பாட்டியிடம் சென்று காரணத்தைக் கேட்க அவர்  கூறியது பேரனின் மனதை பெரிதும் பாதித்தது. "நாம் எல்லாரும் நல்ல செயல்கள் உதவிகள் செய்யத்தான் வேண்டும். அது நம் கடமை. ஆனால் செய்த பின் நான்தான் இதை செய்தேன் என்று பெருமைப் பட்டால் நாம் செய்ததற்கு அர்த்தமில்லாமலே போய்விடும். அமைதியாய் செய்துவிட்டு கடவுளிடம் ஒப்படைத்து விட வேண்டும்" என்பது தான் பாட்டி கூறிய மொழிகள். 

"நற்செயல் புரிவதெற்கென்றே நாம் கிறிஸ்து வழியாக படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்துள்ளார்" (எபே 2:10) என்று  இன்றைய முதல்வாசகத்தில் நாம் வாசிக்கும் புனித பவுலின் வார்த்தைகள் நமக்கு இன்று இன்றியமையாத வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத்தருகிறது. பகுத்தறிவு உடைய மானிடராய் நாம் பிறந்திருக்கிறோம்.

பகுத்தறிவுடைய நாம் எல்லோரும் நன்மையைக் கண்டுணர்ந்து தீமையை விலக்க வேண்டும். நமக்கும் பிறருக்கும் இயற்கைக்கும் நன்மை பயக்கின்ற காரியங்கள் செய்வது நம் தலையாய கடமை. இவ்வாறு நன்மைக்காகவே நாம் படைக்கப்பட்டோம் என்றால், ஏன் இத்தனைத் தீமைகள் உலகில் காணப்படுகின்றன?

நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அறிவுக்கு மட்டும் எட்டியால் போதாது. செயல்படுத்தப்பட வேண்டும். செயல்வடிவம் பெறாத எந்த சிந்தனையும் வீணாததே. பல வேளைகளில் நல்லது செய்ய வேண்டும், நல்ல பெயரெடுக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இருந்தும் அதை செயல்படுத்தத் தவறுகிறோம். நம்முடைய சுயநல எண்ணங்களாலும் அசட்டைத்தனங்களாலும் நற்செயல் புரிய கிடைக்கும் வாய்ப்புக்களை நழுவ விடுகிறோம். இத்தகைய மனப்போக்கை மாற்றவதற்கே இன்றைய வாசகங்கள் நமக்கு வழிவகுக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறப்பட்ட பேராசை பிடித்த செல்வந்தன் உவமையில் அந்த செல்வந்தன் தீச்செயல் செய்ததாக குறிப்பிடப் படவில்லை. ஆயினும் நற்செயல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனிடத்தில் இல்லை. தன்னுடைய விளைபொருட்களை தான் மட்டுமே அனுபவித்து இன்பம் காண வேண்டும் என நினைத்தானே தவிர அதைக்கொண்டு தனக்கும் மற்றவருக்கும் நன்மை தரும் காரியங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம்  அவனிடத்தில் இல்லை. அவன் பெரும் செல்வனாய் உலகில் திகழ்ந்தாலும் கடவுள் முன் செல்வம் சேர்க்காத ஏழையாய் மாண்டான். நாம் எவ்வளவுதான் அறிவிலும் செல்வத்திலும் திறமையிலும் உயர்ந்திருந்தாலும் அவை யாருக்கும் நன்மை தரவில்லை என்றால் ஒன்றுமில்லாமைக்கு சமம்.

நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயலும் கடவுள் முன் நம்மை செல்வராக உயர்த்தும். நம்மால் ஒருவர் நன்மை அடையும் போது நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி உண்மையானது. அளவில்லாதது. கடவுள் நம்மில் வாழ்கிறார் என பிறர் உணர நமது நற்செயல்களே சான்றுகள். எதற்கெல்லாமோ திட்டமிடுகிறோம் நாம். நன்மை செய்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து தினமும் நற்செயல்கள் புரிய திட்டமிடுவோமா? சிந்திப்போம். கடவுளின் அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்

கடவுளே நீர் ஒருவரே நல்லவர். நன்மைகளின் ஊற்றும் நீரே. நற்செயல் புரியவே நாங்கள் படைக்கப்பட்டுள்ளோம் என்பதை  உணர்ந்து, எங்கள் சுயநலப்போக்கைக் களைந்து நன்மைகள் புரிந்து உம்மை உலகில் பிரதிபலிக்க வரம் தாரும்.  ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 3 =