எது உண்மையான மதிப்பு? | குழந்தைஇயேசு


Respect

பொதுக்காலத்தின் 30 ஆம் சனி - I. பிலி: 1:18b-26; II. திபா 42:1.2.4; III. லூக்: 14:1,7-11

ஒரு கிராமத்தில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருவிழா சமயத்தில் பாராட்டுவிழா நடத்தி பல்வேறு வகையில் உதவியர்களுக்கும் பணிபுரிந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்குவது வழக்கம். அந்த ஆண்டு விழாத்தலைவராக வெளியூரிலிருந்து ஒரு சமூக ஆர்வலரை அழைத்திருந்தார்கள். விழா அன்று மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் மேடை முன்பு காத்திருந்தார்கள். விழாத்தலைவரைப் பற்றியும்  அவருடைய வருகை, தோற்றம், ஆளுமைப் பண்புகளைப் பற்றி ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் விழா மேடையில்  அமர்வது பற்றி ஊர்த்தலைவர்கள் தங்களுக்கிடையே சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென கிராமத்தலைவர் வேகமாக கீழே இரங்கி மக்களின் நடுவே வந்து மக்களின் மத்தியில் எளிய தோற்றத்துடன் சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்த ஒருவரைப் பார்த்து, "இங்கு ஏன் அமர்ந்திருக்கிறீர்கள். மேடைக்கு வாருங்கள்" என்று அழைத்துச் சென்றார். அதைக் கண்ட அனைவரும் விழாத் தலைவர் தங்களின் மத்தியில் மிகச் சாதாரணமாக அமர்ந்திருக்கிறாரே என்ற ஆச்சரியத்துடன் அவருடைய எளிமையை எண்ணி வியந்து எழுந்து நின்று மதிப்பளித்தனர்.

மனிதர்கள் நாம் எல்லோரும் பல நேரங்களில் எல்லாராலும் மதிக்கப்படவும் மரியாதை செலுத்தப்படவுமே விரும்புகிறோம். ஆனால் எல்லா நேரங்களிலும் நாம் மதிக்கப்படுவது இல்லை. அதைப் போலவே நாமும் எல்லாரையும் மதிப்பதில்லை. மாறாக யாரை மதிக்க வேண்டும் யாரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என்று நன்றாக தீர்மானித்திருக்கிறோம். நாம் வாழும் சமூகத்தில் ஆள்பார்த்து உபசரிப்பது என்பது வழக்கமாகிவிட்டது. பணம், படிப்பு, பதவி உள்ளவர்களை உயத்திப் பிடிக்கும் நாம் அவற்றில் குறைந்தவர்களைப் பல சமயங்களில் ஒரு மனிதராகக் கூட பார்ப்பதில்லை.

இன்றைய காலகட்டத்தில் படித்தவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதைகூட குறைந்து விட்டது. பகட்டான ஆடைகள் அணிபவர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள், பணபலத்தால் மனிதரைக்கூட விலைக்கு வாங்குபவர்கள் போன்றவர்கள் தான் உலகில் பெருமளவு போற்றப் படுகின்றனர். 

ஆனால் உண்மையான மதிப்பு வெளித்தோற்றத்தில் அல்ல. உயரிய சிந்தனை, தனக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் செயல்கள், அக மற்றும் புறத் தூய்மை இவை அனைத்தும் நமக்கு உண்மையான மதிப்பைத் தரக்கூடியவை. நாம் எவரையும் குறைவாக மதிப்பிடாமல், பிறர் முன் அவமானப்படுத்தாமல், தராதரம் பாரபட்சம் பார்த்து பழகும் மக்களாய் இல்லாமல் இருந்தால் முதலிடம்  கேட்கமலேயே நமக்குக் கிடைக்கும். இதையே  ஆங்கிலத்தில் Give and take attitude என்பார்கள்.

இயேசு முதலிடத்தை விரும்பியதில்லை. சிறு குழந்தைகள், பாவிகள், பெண்கள், நோயாளிகள், சமூகத்தில் புறந்தள்ளப்பட்டவர்கள் அனைவரையும் மதித்தார். அவர்களுக்கு மரியாதை அளித்தார். அதனால் தான் அவர் மக்களால் உயர்வாகக் கருதப்பட்டார். அவரைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதியது. இவ்வாசகம் மூலம் இயேசு நம்மையும் பிறருக்கு மதிப்பு அளிப்பவராகவும் பிறரிடம் மரியாதையை எதிர்பார்த்துப் பழகாதவராகவும் வாழ அழைக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுலடியார் என் உடலால் இயேசுவைப் பெருமைப் படுத்துவேன் என்று கூறுவதை வாசிக்கிறோம். தான் இறந்தாலும் அதை ஆதாயமாகக் கருதினார். தன்னுடைய இறப்பின் மூலம் கிறிஸ்துவோடு இணைந்து விடலாம் என்பதற்காகவே அவர் அவ்வாறு கூறினாலும் தன்னுடைய வாழ்வால் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க உயிர் வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறேன் என்று கூறுகிறார். கிறிஸ்துவோடு உறவில் வாழ்வதே உண்மையான பெருமிதம் என்பதையும் வலியுறுத்துகிறார். சுருங்கக் கூறின் கிறிஸ்துவோடு உறவு கொண்டு பிறரை மதித்து நற்செய்தி மதிப்பீட்டின் படி நற்செயல் புரிந்து வாழும் போது நாம் தேடிச்செல்லாமலேயே நம்மை மதிப்பும் மாண்பும் தேடி வரும். அதுவே உண்மையான மதிப்பு என்பதை உணர்ந்து வாழ்வோம்.

இறைவேண்டல்

மாண்புடன் எம்மைப் படைத்து வழிநடத்தும் இறைவா, மதிப்பையும் மரியாதையும் தேடிடும் மனிதர்களாய் நாங்கள் இல்லாமல், அவற்றை மற்றவருக்கு வழங்குபவர்களாக நாங்கள் வாழவும், கிறிஸ்துவோடும் சக மனிதரோடும் நல்லுறவு கொண்டு பெருமிதம் காணவும் வரம் தாரும் ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 1 =