Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கிறிஸ்துவின் மனநிலையைப் பிரதிபலிப்போமா? | குழந்தைஇயேசு பாபு
பொதுக்காலத்தின் 31 ஆம் செவ்வாய் - I. பிலிப்பி: 2:5-11; II. திபா: 22:25-26,27-29,30-31; III. லூக் 14:15-24
ஒரு பெண் தன்னுடைய சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் யாருடைய ஆதரவுமின்றி மிகவும் திறமையுடன் தன் குடும்பத்தை முன்னேற்றப் பாதையில் நடத்திக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பலரும் அந்தப் பெண்ணை மிகவும் வியந்து பாராட்டுவது வழக்கம். இவ்வாறு நாட்கள் கடக்க அவ்விடத்திற்குப் புதிதாகக் குடிவந்த மற்றொரு பெண் சில நாட்களாக முதலிலே கூறிய பெண்ணைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் இருவரும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்தபின் தங்கள் வாழ்க்கைப் பகிர்வைத் தொடங்கினர். அப்போது புதிதாகக் குடிவந்த பெண் ஒரு கேள்வியைக் கேட்டார்.சமூகத்தில் யாருடைய ஆதரவுமின்றி தனித்து தைரியமாய் வாழ எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்? என்பதுதான் அக்கேள்வி. சிறிதும் யோசிக்காமல் "நான் உயர என் தாய் தான் காரணம். அவருடைய பொறுமை, சகிப்புத்தன்மை, துணிச்சல் இவற்றையெல்லாம் எனதாக்கிக் கொண்டேன். இன்று என் பிள்ளைகளையும் அவ்வாறே வளர்க்கிறேன்" என்று பதில் கூறினார்.
"சகோதர சகோதரிகளே கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலை உங்களிலும் இருக்கட்டும்" என்ற பவுலடியாரின் வார்த்தைகளோடு தொடங்குகிறது இன்றைய வார்த்தை வழிபாடு. கிறிஸ்துவின் மனநிலை என்ன? தாழ்ச்சியும், கீழ்படிதலும். தான் கடவுளின் மகன் என்றாலும் தன்னுடைய நிலையை பற்றிக்கொண்டு இருக்கவில்லை கிறிஸ்து. மாறாக தந்தையின் பணியாளனாக உலகிற்கு வந்தார் அவர். தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற தனக்கு ஏற்பட்ட எல்லா அவமானங்களையும் மிகப் பொறுமையோடு சகித்துக்கொண்டார்.
இறுதியில் சிலுவைச் சாவையும் ஏற்கும் அளவிற்கு கீழ்படிபவரானார். அவ்வாறு தாழ்ச்சியும் கீழ்படிதலும் கொண்டதால் அவர் உயர்த்தப்பட்டார்.
தாழ்ச்சி என்பது என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் "உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்வது". ஆங்கிலத்தில் "Accepting the truth as it is" என்பார்கள். எடுத்துக்காட்டாக நம்மைப் பற்றி நமக்குத் தெரிந்திருந்தும் மற்றவர் முன் நம்மைப்பற்றி மிகைப்படுத்தியோ அல்லது மிகவும் குறைவுபடுத்தியோ பிதற்றுதல் தாழ்ச்சியல்ல."நான் இப்படித்தான்.
அதை ஏற்றுக்கொள்கிறேன். என்னைப் பிறரோடு நான் ஒப்பிட்டுப் பார்க்கப் போவதில்லை" என்ற மனநிலை கொண்டவர்களாய் நாம் வாழ வேண்டும். ஆனால் நம் மனநிலையை இயேசுவின் மனநிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து அவரைப் போல வாழ வேண்டும் என்பதே இன்று நமக்கு விடுக்கப்படும் அறைகூவல்.
தாழ்ச்சியும் கீழ்படிதலும் ஒரு போதும் நம்மைக் கீழே தள்ளுவதில்லை. அன்னை மரியா இதோ ஆண்டவரின் அடிமை எனத் தாழ்த்தினார். ஆண்டவரின் தாயாக உயர்த்தப்பட்டார். திருமுழுக்கு யோவான் செம்மறியின் மிதியடிவாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன் எனத் தன்னைத் தாழ்த்தினார். எனவே இறைவாக்கினராக உயர்ந்தார். நீர் என்வீட்டிற்கு வர நான் தகுதியற்றவன் என தாழ்த்திய நூற்றுவர் தலைவனின் மகன் நலமடைந்தார். நீர் விண்ணக ஆட்சியில் இருக்கும் போது என்னை நினைவு கூறும் என்று தாழ்மையாய் மன்றாடிய கள்வனுக்கு நிலைவாழ்வை வாக்களித்தார் இயேசு. இன்னும் எத்தனையோ எடுத்துக்காட்டுகளை நம் விவிலியத்தில் காணலாம்.
இன்றைய நற்செய்தியில் விருந்துக்கு அழைக்கப்பட்ட அனைவரும் தங்களையும் தங்களுடைய பணிகளையும் மிகைப்படுத்தி அழைத்தவரை மதிக்காமல் நடந்து கொண்டனர். அதனால் விருந்தில் பங்குபெறும் வாய்ப்பை இழந்தனர். ஆனால் அவ்வாய்ப்பு ஏழை எளியவருக்கும், சமூகத்தில் மதிப்பிழந்தவருக்குமே அளிக்கப்பட்டது என்பதை வாசிக்கிறோம்.
எனவே நாமும் கிறிஸ்து இயேசுவின் மனநிலையை அணிந்தவர்களாய், தாழ்ச்சியோடும் கீழ்ப்படிதலோடும் வாழ முயற்சிப்போம். நம்மை மிகைப்படுத்தியோ அல்லது தாழ்மைப்படுத்தியோ கூறும் குணத்தை விட்டு விட்டு நம்மை உள்ளவாறு ஏற்றுக்கொள்வோம். எளிய மனத்தோராய் இறையாட்சி விருந்துக்கு தயாராவோம். அதற்கான வரத்தை இறைவனிடம் வேண்டுவோம்.
இறைவேண்டல்
எங்களை உமது சாயலிலே படைத்த இறைவா! உமது திருமகனின் மனநிலையை நாங்கள் கொண்டிருக்க எங்களை அழைத்துள்ளீர். அவ்வழைப்பை ஏற்று நாங்கள் வாழ்ந்து, தாழ்ச்சியையும் கீழ்படிதலையும் எமதாக்கி இறையாட்சி விருந்தில் பங்கு பெற எங்களையே தகுதியுடையவர்களாக்க அருள் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment