Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நாம் அன்பாய் இருக்கிறோமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய் - I. 1 யோவான் 4:7-10; II. திபா: 72:1-2,3-4,7-8; III. மாற்கு 6:34-44
அன்பு என்ற மூன்றெழுத்து வார்த்தைக்குள் உலகத்தையே அடக்கிவிடலாம். பாசம், நேசம், நட்பு, பரிவு, உதவி, பொறுமை, தியாகம், புரிதல், உடனிருப்பு, சகிப்புத்தன்மை போன்ற அத்தனை நற்குணங்களும் அன்பிடமிருந்தே புறப்படுகின்றன. அன்பு எப்படிப்பட்டது என்பதைப் பற்றி கொரிந்தியருக்கு எழுதப்பட்ட முதல் திருமுகத்தில் 13ஆம் அதிகாரத்தில் புனித பவுல் மிக அழகாக விளக்குகிறார். "அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்ற வள்ளுவர் வாக்கு அன்புடையவர் தங்களின் எலும்புகள் கூட பிறருக்குப் பயன்படும் அளவுக்கு தியாகம் நிறைந்தவர்களாய் விளங்குவர் என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறது. மேலும் அன்புக்கு மொழிகிடையாது. ஐந்தறிவுடைய உயிரினங்கள் கூட அன்பை உணர்ந்து கொள்ளும். இவ்வாறு அன்பைப் பற்றி நாம் விளக்கிக்கொண்டே போகலாம்.
இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் அன்பை விளக்குகிறார் யோவான். தம்முடைய ஒரே மகனை உலகிற்கு அளித்து தன்னுடைய அளவுகடந்த அன்பை கடவுள் வெளிப்படுத்துகிறார். கடவுளுடைய அன்பிற்கு அளவில்லை. கடவுளுடைய பிள்ளைகள் எனச் சொல்லிக்கொள்ளும் நாம் அன்புடையவர்களாய் இல்லையெனில் கடவுளிடமிருந்து நாம் பிறக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
இயேசு அன்பாயிருந்து தான் கடவுளின் மகன் என எண்பித்தார். இன்றைய நற்செய்தியில் நாம் காணும் அப்பம் பலுகச் செய்யும் நிகழ்வு அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஆயனில்லா ஆடுகள் போல காணப்பட்ட மக்களுக்கு தன் போதனையால் ஆன்மீக உணவளிப்பதோடு நின்றுவிடவில்லை அவர். தன் போதனையைக் கேட்க வந்த மக்கள் பசியோடு இருப்பதைக் கண்டு பரிவு கொண்டு அவர்கள் உடலுக்கும் உரமூட்டும் வண்ணம் உணவளிக்கிறார் இயேசு. கடவுளின் அன்பை முற்றிலுமாகப் பிரதிபலிக்கிறார் இயேசு. நம்மூடைய அன்பை நாம் எவ்வாறு பிரதிபலிக்கப் போகிறோம்?
இவ்வாறு சிந்திக்கும் போது சிறுவயதில் தமிழ் துணைப்பாடத்தில் படித்த ஒரு கதை நினைவிற்கு வருகிறது. குட்டிகளை ஈன்ற பின் தாய் நாயானது இறந்து போனது. குட்டிகளோ பசியில் கத்திக் கொண்டே இருந்தன. அவை தெருவில் அநாதைகளாக விடப்பட்டிருந்தன. கவனிப்பார் யாருமில்லை. நாய்க்குட்டிகள் பசியால் கத்திக்கொண்டே இருந்தால் அக்கம் பக்கத்திலுள்ளோர் தூங்க முடியாமல் எரிச்சலடைந்து முனுமுனுக்கத் தொடங்கினர். தீடீரென சப்தம் குறையத் தொடங்கியது. அதற்கு காரணம் ஒரு ஏழைத் தாய் ஒருகொட்டாங்கச்சியில் தன்னுடைய தாய்ப்பாலை எடுத்துவந்து ஒரு பஞ்சினால் நனைத்து அந்நாய்க்குட்டிகளின் பசியை ஆற்றினார். அனைவரும் தொந்தரவின்றி நிம்மதியாய் உறங்கினர். அத்தாய் காட்டிய அன்பு நாய்குட்டிகளின் பசியை ஆற்றியதோடு அத்தெருவிலுள்ள அனைவரையும் நிம்மதியாக உறங்கச் செய்தது.
அன்பு நம் அனைவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் அதை நாம் தேவைபடுபவர்களுக்கு, தேவையான தருணங்களில், தேவையான இடத்தில் வெளிப்படுத்துகிறோமா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாசகங்களின் ஒளியில் நம் உள்ளத்தி த் புதைந்திருக்கும் அன்பை தட்டி எழுப்பி வெளிக்கொணர்வோம். பசித்திருப்போருக்கு உணவு, தேவையிலிருப்போருக்கு உதவி, யாருமில்லாதவருக்கு நானிருக்கிறேன் என்ற நம்பிக்கை மொழி, தளர்வுற்றவருக்கு உன்னால் முடியும் என்ற உற்சாக வார்த்தைகள் இவையெல்லாம் அன்பின் வெளிப்பாடுகளே. எனவே அன்பு செய்வோம். நாம் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் என்பதை நம் அன்பால் உறுதி செய்வோம். அன்பாக மாற முயற்சிப்போம்.
இறைவேண்டல்
அன்பே உருவான இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் ஆழ்மனதில் புதைந்துள்ள அன்பை வெளிப்படுத்தி, அதன்மூலம் உம்மைப் பிறருக்கு பிரதிபலிக்க வரம் தாரும். ஆமென்.
Add new comment