Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நான் ஆண்டவரைக் கண்டேன் | குழந்தைஇயேசு பாபு
புனித மகதலா மரியா திருநாள் - பொதுக்காலத்தின் 16 ஆம் புதன் - இன்றைய வாசகங்கள்: I. 1கொரி. 5:14-17; II. தி.பா. 63:1-2,3-5,7-8; III. யோவா.20:1,11-18
இந்த நாளில் புனித மகதலா மரியாவின் திருநாளை நம் திருஅவையோடு இணைந்து கொண்டாடி மகிழ்கின்றோம். புனித மகதலா மரியா இயேசுவின் உயிர்ப்பு பற்றி நற்செய்திக்கு முதல் சான்றாக இருக்கிறார். இந்த உலகில் எந்த ஒரு மனிதருக்கும் கிடைக்காத வாய்ப்பு மகதலா மரியாவுக்குத் கிடைத்தது. உயிர்த்த இயேசுவை முதலில் கண்டவர் யூத சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களின் ஒருவராகிய மகதலா மரியா ஆவார்.
இயேசு தன்னுடைய உயிர்ப்பு பற்றிய நற்செய்தியை ஒரு பெண்ணிடமிருந்து தான் தொடங்கியுள்ளார். இது இயேசு பெண்கள் மேல் கொண்டிருந்த மரியாதையையும் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டுகிறது. மேலும் ஆணாதிக்க சிந்தனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் இருக்கின்றது. மகதலா மரியாவைப் போல கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்துள்ள நாம் பலவற்றை கற்றுக் கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு தியானிப்போம்.
முதலாவதாக, மகதலா மரியா ஒரு துணிச்சல் மிகுந்தவர். இயேசு வாழ்ந்த காலத்தில் ஆணாதிக்க சிந்தனையானது மேலோங்கியிருந்தது. "நான் பெண்ணாய் பிறக்காதற்கு கடவுளே நன்றி !" என்று ஒவ்வொரு யூத ஆணும் இறைவேண்டல் செய்யும் அளவுக்கு ஆணாதிக்க சிந்தனை மேலோங்கி இருந்தது. பெண்களுக்கென்று மிகுந்த கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருந்தன. பெண்களை இரண்டாம் தரமாக யூத ஆண்கள் பார்த்தனர். அதிலும் குறிப்பாக இயேசு சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, உயிர்த்தெழுந்த சூழலில் சீடர்களே யூதர்களுக்கு அஞ்சினர்.
ஆனால் ஆணாதிக்க சிந்தனை கொண்ட அந்தச் சமூகத்தின் மத்தியிலும், துணிச்சலோடு இயேசு சிலுவையில் தொங்கி இறந்த பொழுது, அன்னை மரியாவோடு சிலுவையின் அடியில் நின்றார். சீடர்களே பயந்து ஒதுங்கிய சூழலில் துணிச்சலோடு அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார். இந்த துணிச்சல் தான் "அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்" (லூக். 1:48) என்று அன்னை மரியின் பாடல் வரிக்கேற்ப எல்லாத் தலைமுறையினரும் மகதலா மரியாவை அறிந்துகொள்ளும் வகையில் இயேசு உயர்த்துவதற்கு அடிப்படையாக இருந்தது . இயேசு மகதலா மரியாவை தனது உயிர்ப்புக்கு முதல் சான்றாக மாற வாய்ப்பு கொடுத்தது, அவர் துணிச்சலுக்கு கிடைத்த பரிசாகும். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் எந்தவொரு மதவாத சக்திகள், பிரிவினை வாதங்கள் நம்மை அச்சுறுத்தினாலும், மகதலா மரியாவைப் போல துணிச்சலோடு இயேசுவின் உயிர்ப்பின் நற்செய்திக்கு சான்று பகர அழைக்கப்பட்டுள்ளோம்.
இரண்டாவதாக, புனித மகதல மரியா தேடல் உள்ளவராக திகழ்ந்தார். "ஆண்டவரே! என் உயிர் மீது தாகம் கொண்டுள்ளது "(63:1) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப இயேசுவின் உயிர்ப்பை பற்றிய உண்மையை அறிய வேண்டும் என்று தாகம் கொண்டவராய் தனது தேடலை தொடர்ந்தார். அதே போல இயேசு போதனை செய்த காலங்களிலும் தாகத்தோடு இயேசுவின் வார்த்தைகளை கேட்க தேடிச் சென்றுள்ளார். இதன் வழியாகவே அவர் இறை அனுபவத்தைப் பெற்றார். தான் பெற்ற மனமாற்ற வாழ்விலே இதன் வழியாகத்தான் அவர் நிலைத்திருக்க முடிந்தது. எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் இறைவார்த்தையின் வழியாகவும் இறை வேண்டலின் வழியாகவும் இயேசுவை தேட தயாரா? என்று சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
மூன்றாவதாக, புனித மகதலா மரியா மனமாற்ற வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறார். பாவியான மகதலா மரியா இயேசுவின் மன்னிப்பைப் பெற்ற பிறகு புனிதத்திலும் இறை அனுபவத்திலும் நிறைந்திருந்தார். நாம் நம்முடைய அன்றாட வாழ்விலும் நம் பாவத்தை முழுவதுமாக விட்டுவிட்டு புனிதத்தில் நிலைத்திருக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
நான்காவதாக, புனித மகதலா மரியா அன்புநிறை வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறார். இயேசுவை அறிந்த பிறகு அவரை முழுவதுமாக அன்பு செய்தார். எனவேதான் இயேசு சிலுவையில் தொங்கி கொண்டிருக்கும் பொழுது அன்னை மரியாவோடு உடனிருந்தார். மேலும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் துணிச்சலோடு விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார். இது அவர் இயேசு மீது கொண்டிருந்த அன்பினைச் சுட்டிக்காட்டுகிறது .எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் இடையூறுகள் வந்தாலும் இயேசுவை முழுமையாக அன்பு செய்வோம். அப்பொழுது நாமும் புனித மகதலா மரியாவைப் போல, இயேசுவின் அன்பை முழுமையாக பெற முடியும்.
ஐந்தாவதாக, புனித மகதலா மரியா நம்பிக்கை வாழ்வுக்குச் சான்றாக இருக்கிறார். இயேசுவின் உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சிதான் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அடிப்படையான ஆணிவேர். அந்த நம்பிக்கைக்கு முதல் சாட்சி புனித மகதலா மரியா ஆவார். இயேசு உயிர்பெற்றெழுந்த செய்தி முதன்முதலில் மகதலா மரியாவுக்குத் தான் கொடுக்கப்பட்டது. "என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்" (யோவா. 20:17) என்ற செய்தியானது சீடர்களுக்கு அறிவிக்குமாறு மகதலா மரியாவை இயேசு அனுப்பினார். இதன் வழியாக இயேசு பெண் சீடத்துவத்துக்கும் நற்செய்தி பணிக்கும் அங்கீகாரம் கொடுத்துள்ளார்.
இன்றைய நாள் திருவிழா சிந்தனை நம்மை மகதலா மரியாவினுடைய நற்பண்புகளை நமதாக்க அழைக்கின்றது. மகதலா மரியாவை போல இறைவார்த்தை அறிவிக்க துணிச்சல் மிகுந்தவர்களாகவும், இயேசுவைப் பற்றிய உண்மையை அறிய தேட கூடியவர்களாகவும், மனமாற்ற வாழ்வில் நிலைத்திருக்க கூடியவர்களாகவும், இயேசுவை முழுமையாக அன்பு செய்பவர்களாகவும், கிறிஸ்தவ நம்பிக்கைக்கு சான்றாக இருக்க கூடியவர்களாகவும் மாற இறையருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
தாயும் தந்தையுமான இறைவா! எமது திருஅவைக்கு புனித மகதலா மரியாவை முன்மாதிரியாக கொடுத்ததற்காக நன்றி செலுத்துகிறோம். ஒரு காலத்தில் உம்மை விட்டு அவர் பிரிந்து வாழ்ந்தாலும், உம்மை அறிந்த பிறகு நற்செய்தியின் மதிப்பீட்டின்படி வாழ்ந்தது போல நாங்களும் வாழ உமது அருளைப் பொழியும். ஆமென்.
அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment