நல்லிணக்கத்துடன் வாழ்வோமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் -முதல் வெள்ளி - I. எசே: 18:21-28; II. தி.பா: 130:1-2,3-4,5-6,7-8; III. மத்: 5:20-26

ஒரு துறவற இல்லத்திற்கு அருகாமையில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் எப்போதும் சண்டையிடும் சப்தம் கேட்கும். சில சமயங்களில் சாலையில் கூட நின்று சண்டையிடுவார்கள். இதைக் கவனித்துக் கொண்டிருந்த இரு துறவிகளும் "ஒரு நாள் நாமும் சண்டையிட்டுப் பார்ப்போம்" எனத் தீர்மானித்தனர். ஆனால் சண்டையிடக் காரணம் வேண்டுமே. அதற்காக இல்லத்திலிருந்த ஒரு பாயை எடுத்து "இது எனது" என்று இருவரும் உரிமை கொண்டாடி சண்டையிடலாம் எனத் திட்டமிட்டனர். திட்டமிட்டபடி மறுநாள் ஒரு துறவி மற்றவரிடம் "இந்த பாய் என்னுடையது" என்று கூறி சண்டையைத் தொடங்கினாராம். மறுகணமே மற்றொரு துறவி "நமக்குள் சண்டை எதற்கு.எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார். மேலும் "உங்களுடன் சண்டை போட்டுக்கொண்டு என்னால் எவ்வாறு அமைதியாக இருக்க இயலும்?" என்று வினவினார். இருவராலும் திட்டமிட்டபடி சண்டை போட இயலாமல் போனது. 

இன்றைய நற்செய்தி மூலம் இயேசு நம்மை நல்லிணக்கத்தோடு வாழ அழைக்கிறார். நல்லிணக்கம் என்றால் வேற்றுமைகளை, பூசல்களைக் களைந்து சமரப்படுத்துதல் என்பது பொருள். ஆங்கிலத்தில் இதனை, "Reconciliation" என்று கூறுவர். நம்முடைய அன்றாட வாழ்வில்  உறவுச்சிக்கல்கள், விரிசல்கள் உருவாக பல வாய்ப்புகள் உள்ளன.அவற்றையெல்லாம் நாம் சமரசம் செய்யாமல் விட்டுவிட்டோமெனில் அவ்வுறவு விரிசல்கள் பெரியதாகி துன்பம் தர நேரிடும். எனவே அவற்றை ஆரம்பத்திலேயே சரிசெய்து  நல்லிணக்கத்துடன் வாழும் போது நமக்கு மனநிம்மதி கிடைப்பதோடு,கடவுளின் ஆசீரும் நிறைவாகக் கிடைக்கும்.

"ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,
அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்" (மத்தேயு 5:23-24) என்று இயேசு கூறிய வார்த்தைகள் இச்செய்தியையே நமக்குத் தருகின்றன. நம் சகோதர சகோதரிகளோடு ஏற்பட்ட உறவு விரிசலை சரிசெய்யாது, பகையோடும், வெறுப்போடும் நாம் செய்கின்ற செபமும், செலுத்தும் பலியும் இறைவனுக்குகந்தது அல்ல. மேலும் அத்தகைய வேளைகளில் நம் ஆழ்மனதில் உண்மையான அமைதியும் மகிழ்ச்சியும் இருப்பதில்லை.

சிறு சிறு பிணக்கங்களும்,பூசல்களும் வாழ்வில் சகஜம் தான். அதை சரியான விதத்தில் கையாண்டு, மனம்திறந்து பேசி சமரசம் செய்யும் போது நமது உறவுகள் நிச்சயம் வலுவடையும். எனவே ஒவ்வொரு நாளையும் நாம் நிறைவு செய்யும் போது நம்மையே நாம் ஆய்வு செய்வோம். யாருடனாவது மனந்தாங்கல் இருந்தால் நாமாக முன்சென்று சமரசம் செய்வோம். நல்லுறவோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்வோம். இறைவன் நம்மை நிறைவாக ஆசிர்வதிப்பார்.

இறைவேண்டல்

உறவின் பாலமே இறைவா! எங்களுக்குள் ஏற்படும் உறவுச்சிக்கல்களை நீக்கி நல்லிணக்கத்தோடும், நல்லுறவோடும் வாழ்ந்து உம் அருளைப் பெற வரம் தாரும். ஆமென்.

Add new comment

4 + 3 =