நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனாக! | குழந்தைஇயேசு பாபு


Faithful Servant

பொதுக்காலத்தின் 33 ஆம் ஞாயிறு - I. நீதி:31:10-13,19-20,30-31; II. திபா: 128:1-2.3.4-5; III. 1 தெச: 5:1-6; IV. மத்: 25:14-30

இறையாட்சி என்பது ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஒரு ஒப்பற்ற கொடை என்பதை தாலந்து உவமை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.  கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரே விதமான திறமைகளைக் கொடுக்கவில்லை. அவரவரின் ஆற்றலுக்கு ஏற்ப பல்வேறு கொடைகளைக் கொடுத்திருக்கிறார். "அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே"  (1கொரி: 12:4) இந்த திருத்தூதர் பவுல் சுட்டிக்காட்டுவது ஒவ்வொருவருக்கும் அருட்கொடைகள் பலவிதமாக கொடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்தைச் சுட்டிக்காட்டுகின்றது.

எருசலேம் அழிவும், உலக முடிவும், இரண்டாம் வருகையும் எப்பொழுது நடைபெறும் என்று ஆண்டவரைக் கேட்டனர். அந்நாளை வானதூதரும், ஏன்,  மனுமகனும் கூட அறியார் என்று கூறி, தாலந்து உவமை வழியாக, மீட்புப் பெற நாம் கடுமையாக உழைப்பு  மிக அவசியம் என்பதை இயேசு இந்த நற்செய்தி மூலமாக தெளிவுபடுத்துகிறார்.

"வாழ்வின் வெற்றி சுற்றுப்புறக்காரணிகளால் அல்ல, மாறாக நமது தெளிவான நோக்கம், கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகின்றது" என்கிறார் ஆபிரகாம் லிங்கன். நம்முடைய அன்றாட வாழ்வில் வெற்றி பெறுவதற்கு அனைவரும் விரும்புகிறோம். உயர்ந்த நிலையை அடைந்து வசதியாக வாழவேண்டும் எனவும் விரும்புகிறோம். ஆனால் நாம் விரும்பிய அந்த  நிலையை அடைய பெரும்பாலான நேரங்களில் முடிவதில்லை. இதற்கான காரணங்களை அறிந்து கொள்ள இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன . நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக நாம் மாறுவதற்கு  வாய்ப்புகளைப் பயன்படுத்தி கடின உழைப்போடு முயலவேண்டும்.

வாழ்வில் கடின உழைப்போடு வாழ்ந்து வாய்ப்புகளைப் பயன்படுத்தி எண்ணற்ற மாமனிதர்கள் வாழ்வில் பல சாதனைகளை படைத்தனர்.  கடின உழைப்பை மூலதனமாகியவர்கள் அனைவரும் வாழ்வில் உயர்ந்த நிலையை  அடைந்துள்ளனர். குறிப்பாக நமது இந்திய மண்ணில் நற்செய்தியை அறிவித்த புனித பிரான்சிஸ் சவேரியார் கடின உழைப்புக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார். புனித பிரான்சிஸ் சவேரியார் 10 ஆண்டுகளில் 20 மொழிகளைக் கற்று நற்செய்தியைப் போதித்தவர். இதற்காக அவர் தினம்தோறும் 24 மணிநேரத்தில் 21 மணிநேரம் உழைத்தார் என்று வரலாற்றுக் கூறுகள் சொல்கின்றன. இத்தகைய கடின உழைப்பு தான் நம்முடைய இந்திய நாட்டிலே நற்செய்தி பணியை மிகச் சிறப்பாக செய்ய அவருக்கு உதவியாக இருந்தது.  கடின உழைப்பின் மேன்மையை விவிலியம் பலவாறு எடுத்துரைக்கின்றது.

தொடக்கத்தில் கடவுள் ஆதாமை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்குமாறு அறிவுறுத்தினார். அன்று முதல் இன்று வரை உழைப்பை மூலதனமாகக் கொண்டு மனிதர்களாகிய நாம் உழைத்து முன்னேறி வருகின்றோம்.  புதிய ஏற்பாட்டில் புதிய ஆதாமாகிய  ஆண்டவர் இயேசு கிறிஸ்து  கடின உழைப்புக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார். தனது இறையாட்சிப் பணியினை தொடங்குவதற்கு முன்பு 30 ஆண்டுகளாக கடின உழைப்போடு தச்சுத் தொழில் செய்து வந்தார். இது கடின உழைப்புக்கு மிகச் சிறந்த உதாரணமாகும். மேலும் அவர் பணி செய்த 3 ஆண்டுகளில் கடின உழைப்போடு பல்வேறு போதனைகளையும் வல்ல செயல்களையும் மக்கள் மத்தியில் செய்து இறையாட்சியை இம்மண்ணில் விதைத்தார்.  திருத்தூதர் பவுல் கூடார தொழில் செய்து கடுமையாக உழைத்தார் என்று வாசிக்கிறோம். ஆக கடின உழைப்பு என்பது ஒரு மனிதரின் வெற்றிக்கு  அடிப்படையாக இருக்கின்றது. இத்தகைய கடின உழைப்போடு வாழ்கின்றபொழுது நாம் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ முடியும். இதைத்தான் இன்றைய நற்செய்தி வழியாக ஆண்டவர் இயேசு நமக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறார்.

"கடின உழைப்பு எப்போதும் பலன் தரும்" (நீதி: 14:23), "கடும் உழைப்பையும், உழவுத் தொழிலையும் வெறுக்காதே,  இவை உன்னத இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை" (சீநூ: 7:15), "என்னுடைய தேவைகளுக்காகவும், என்னோடிருந்தவர்களின் தேவைகளுக்காகவும், இந்த என் கைகளை உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள்" (திப: 20:34), "உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது" போன்ற இறைவசனங்கள் உழைப்பின் மேன்மையையும் கடின உழைப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று நபர்களை நாம் காணமுடிகின்றது. நெடும்பயணம் செல்லவிருந்த ஒருவர் தனது மூன்று பணியாளர்களை அழைத்து தனது உடமைகளை ஒப்படைத்தார். ஒருவருக்கு ஐந்து தாலந்தும் மற்றவருக்கு மூன்று தாலந்தும் இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்தார். முதல் இரண்டு பணியாளர்கள் தன் தலைவர் கொடுத்தத் தாலந்துகளைப் பயன்படுத்தி கடின உழைப்பின் பயனாக ஐந்து தாலந்துகளைப் பெற்றவர் வேறு ஐந்து தாலந்துகளை ஈட்டினார். மூன்று தாலந்துகளைப் பெற்றவர் வேறு மூன்று தாலந்துகளை ஈட்டினார். ஆனால் ஒரு தாலந்தைப் பெற்றவரோ சோம்பேறித்தனத்தோடு வாழ்ந்து அதை மண்ணில் புதைத்து வேறுஎந்தத் தாலந்தையும்  ஈட்டவில்லை. நம்பிக்கைக்குரிய பணியாளர்கள் தலைவரால் பாராட்டுகின்றனர். நம்பிக்கையற்ற பணியாளர் தலைவரால் தண்டிக்கப் படுகிறார்.

இங்கு தலைவர் என்பவர் நம் ஆண்டவர். ஆண்டவர் இரண்டாம் வருகை குறித்து தான் இந்த தாலந்து உவமையானது கூறப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் தாலந்து என்ற வாய்ப்பையும்  திறமையையும் கொடுத்திருக்கிறார். அவற்றை சரியாக பயன்படுத்தி மனமாற்றத்தின் வழியாகவும் நற்செயல்களின் வழியாகவும் பலன் கொடுக்கும் பொழுது நிச்சயமாக ஆண்டவரின் இரண்டாம் வருகையின் போது நாம் பாராட்டப்படுவோம். நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளர்களாக ஏற்றுக்கொள்ளபப்படுவோம். ஆனால் நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளையும் திறமைகளையும் பயன்படுத்தாமல் சோம்பேறித்தனத்தோடு வாழும் பொழுது நாம் ஆண்டவரின் இரண்டாம் வருகையின் போது தண்டனை பெறுவோம். ஆண்டவரின் வருகை என்பது அச்சுறுத்தலாகப் போலிப்போதகர்களால் பறைச்சாற்றப்படுகிறது. அதுவல்ல உண்மை ; மாறாக, கொடுக்கப்பட்ட தாலந்துகளைப் பயன்படுத்தி பலன் கொடுக்க  அழைப்பு விடுக்கின்றது. வாய்ப்புகள் அதிகமாக கொடுக்கப்படுகின்ற போது பலன்கள் அதிகமாக எதிர்பார்க்கப்படும்.

எனவே நமது அன்றாட வாழ்விலே "சோம்பல் சீர்கேட்டையும், கடும் வறுமையையும் உண்டாக்கும் " (தோபி: 4:13) என்ற வார்த்தைகளை உள்வாங்கியவர்களாய் சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு விழிப்புணர்வோடு நமக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி கடுமையாக உழைப்போம். மீட்பைச் சுவைக்க தடையாக உள்ள எல்லா  பலவீனங்களையும் நம்மிடமிருந்து அகற்ற முயற்சி செய்வோம்.  நம்மால் முடிந்த நல்ல மனிதநேயப் பணிகளை செய்து இறையாட்சி மதிப்பீட்டிற்கு சான்று பகர நாம் உழைத்திடுவோம். அவ்வாறு வாழ்கின்ற பொழுது இம்மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நல்ல நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக நாம் மாற முடியும். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமானது நமக்குக் கூறுகின்றது. ஆண்டவரின் இரண்டாம் வருகையை நாம் எப்பொழுதும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இன்றைய இரண்டாம் வாசகம் ஒளியின் மக்களாக வாழ நம்மை அழைக்கின்றது. ஒளியின் மக்களாக வாழ்வது என்பது கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ்வது.  " ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்வோமாக!" (உரோ: 13:12) என்ற இறைவசனம் ஒளியின் மக்களாக வாழ அழைப்பு விடுக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் நல்ல குணமுடைய பெண் யார்?  என விளக்கம் தருகிறது. பெண்ணின் பெருமையைச் சுட்டிக்காட்டுகின்றது. கணவரோடு இணைந்து இல்லறம் நடத்துபவள் பெண், ஏழைகளுக்கு உதவி செய்பவள் பெண், உழைத்து ஓய்பவர்கள் பெண்கள், ஆண்டவருக்கு பயந்து வாழ்க்கை நடத்துபவள் பெண் போன்றவற்றை இன்றைய முதல் வாசகத்தின் மையக் கருத்துக்களாகக் காணமுடிகிறது.  பெண் ஒரு ஆணுக்கு நல்ல  தாயாக, சகோதரியாக, மனைவியாக, நல்ல ஆசானாக திகழ்ந்து வருகிறார். அவரின் தியாகத்தை நாம் போற்றிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட பெண்ணின் மனிதநேய சிந்தனையையும் பிறர்நல சிந்தனையையும் நம் வாழ்வாக்கும் பொழுது நிச்சயமாக நம் வாழ்வை கடவுளுக்கு ஏற்ற வகையில் வாழமுடியும். ஒவ்வொரு பெண்ணும் தனக்கு கொடுக்கப்பட்டத் தாலந்துகளைப்  பயன்படுத்தி, தானும் தன்னைச் சுற்றியுள்ளவர்களும் பலன் பெறவேண்டும் என்று கருதி வாழ்வது போல நாமும்  வாழ அழைக்கப்பட்டுள்ளோம். 

இவ்வாறாக நமக்கு கொடுக்கப்பட்ட இறையாட்சி மதிப்பீடுகள் என்ற தாலந்துகளைப் பயன்படுத்தி ஆண்டவர் இயேசுவினுடைய இறையாட்சிக் கனவை வாழ்வாக்க முயற்சி செய்வோம். அவ்வாறு கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்கின்ற பொழுது ஆண்டவரின் வருகை எப்போது வந்தாலும் நாம் கவலைப்பட தேவையில்லை. நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக நாம் பாராட்டப்படுவோம். கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழாத பொழுது,  நம்பிக்கையற்ற பணியாளர் தண்டிக்கப்பட்டதைப் போல நாமும் தண்டிக்கப்படுவோம். எனவே நம்பிக்கையுள்ள பணியாளர்களாக வாழ்ந்து இறையாட்சி மதிப்பீட்டிற்கு சான்று பகர்வது நமது கையில் தான் இருக்கின்றது. நமக்கு  கொடுக்கப்பட்ட வாய்ப்புகளையும் ஆற்றல்களையும் பயன்படுத்தி பலன் கொடுக்க தேவையான அருளை வேண்டுவோம். கடின உழைப்பின் வழியாக நம்பிக்கைக்குரிய பணியாளர்களாகச் சான்று பகர முயலுவோம்.

இறைவேண்டல் 
உழைப்பின் நாயகனே எம் இறைவா! உம் திருமகன் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைமகனாக இருந்த போதிலும் தனது கடின உழைப்பின் வழியாக அன்றாட உணவைப் பெற்றுக் கொண்டார். எனவே நாங்களும் எங்களுடைய சோம்பேறித்தனத்தை அகற்றி எங்களுக்கு கொடுக்கப்பட்ட தாலந்துகளாகிய வாய்ப்புகளையும் ஆற்றல்களையும்  பயன்படுத்தி எந்நாளும் உமக்குச் சான்று பகரக்கூடிய   வாழ்வு வாழ்ந்து நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ அருள்தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

4 + 2 =