இயேசுவைப் போல் இறைவேண்டலால் சோதனையை வெல்வோமா? | குழந்தை இயேசு பாபு | Sunday Reflection


தவக்காலம் -முதல் ஞாயிறு 
I: தொநூ: 9: 8-15
II:  தி.பா: 25: 4-5யb. 6-7. 8-9
III: 1பேதூ: 3: 18-22
IV: மாற்: 1: 12-15

நன்கு படிக்க கூடிய மாணவர் ஒருவர் தேர்வுக்காகத் தன்னை நன்றாகத் தயார் செய்து தேர்வு அறைக்குச் சென்றார். நன்றாகத் தயார் செய்த போதும் அன்று அவருக்கு ஒருவித பயமும் பதற்றமும் ஏற்பட்டது. விடைகள் அத்தனையும் மறந்து போனதைப் போல ஒரு உணர்வு. அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்த போது பலர் அருகிலுள்ளவரை பார்த்து எழுதுவதையும், துண்டு சீட்டுகளில் விடைகளை எழுதிவைத்திருப்பவதையும் கண்டார். தானும்  யாரிடமாவது கேட்டு விடைத்தாளை வாங்கிப் பார்த்து எழுதிவிடலாம் என்று நினைத்தார் அவர். ஆனாலும் "அப்படி எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறுவதை விட தோற்றுவிடுவது மேல். தெரிந்ததை எழுதுவோம் "என்று தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, தன் மனதை சற்றே அமைதிப்படுத்திக் கொண்டு எழுதத் தொடங்கினார். சிறிது நேரத்தில் தேர்வு கண்காணிப்பாளர்கள் பார்வையிட வந்தார்கள். அப்போது பார்த்து எழுதியவர்கள்,துண்டச்சீட்டு வைத்திருந்தவர்கள் அனைவரும் பிடிபட்டு தண்டனை பெற்றனர். தான் பெரிய சோதனையிலிருந்து விடுபட்டதாக எண்ணி நிம்மதியடைந்தார் அம்மாணவர்.

சோதனை என்று சொன்ன உடன் நாம் நினைப்பவை பெரிய அளவிலான சவால்களையும்,துன்பங்களையும் தான்.ஆனால் அன்றாட வாழ்வில் பல சோதனைகளை நாம் எதிர்கொண்டுதான் இருக்கிறோம். அவற்றை வெல்லும் போது நாம் வெற்றி அடைகிறோம். சோதனையில் வீழ்கின்ற போது அதற்கான விளைவுகளையும் சந்திக்கிறோம். உதாரணமாக
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், இனிப்பு உணவுகளை உண்ண வேண்டும் என்ற ஒரு சோதனைக்கு உள்ளாகும் போது, அச்சோதனையை வென்று இனிப்பு உண்ணாதிருந்தால் அவர் ஆரோக்கியமாக இருப்பார். இனிப்பு உணவை உண்டால் நோய் தன்மை அதிகமாகி துன்பப்படுவார். 

இன்றைய நற்செய்தியில் இயேசு சோதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. மத்தேயு, லூக்கா நற்செய்தியாளர்கள் இயேசு எவ்வாறெல்லாம் சோதிக்கப்பட்டார் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றனர். நாம் அவற்றை வாசித்தும் தியானித்தும் இருக்கிறோம். இயேசு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற தடையை ஏற்படுத்தும் வண்ணம் அலகை அவரைச் சோதித்தது.    அவ்வாறு சோதிக்கும் போது இனிமையான நேர்மறையான சொற்களைக் கூறி 
அவரைச் சோதித்தது.
அவற்றையெல்லாம் கேட்டு இயேசு சோதனையில் வீழ்ந்திருந்தால் நாம் மீட்பையும் பாவ மன்னிப்பையும் பெற்றிருக்க முடியாது.
 நம்முடைய வாழ்வில் வரும் சோதனைகளும் அவ்வாறு தான்.அவை நமக்கு இனிமையாகவும் நன்மையாகவும் தோன்றினாலும், அதனால் ஏற்படும் விளைவுகள் துன்பம் தருபவையாகவே இருக்கின்றன.

சோதனையை வெல்ல நமக்கு இறையருளும் மனத்திடமும் மிகவும் அவசியம். இயேசு தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கும் முன் நோன்பிருந்து இறைவேண்டல் செய்தார். தன்னுடைய இலக்கில் தெளிவாக இருந்தார். இறைவேண்டலால் அவர் பெற்ற அந்த மனத்திடமே அவருக்கு பாலைநிலத்திலிருந்து  கல்வாரி சிலுவை இறப்பு வரையிலான அத்தனை சோதனைகளையும் வெல்ல ஆற்றல் அளித்தது என்பதை நாம் மறுக்க இயலாது.நம் வாழ்வில் சிறியது முதல் பெரியஅளவிலான சோதனைகளை வெற்றி கொள்ள நமக்கு இறையருள் நிச்சயம் அவசியமாகிறது.இறையருள் பெற நாமும் இறைவேண்டல் செய்ய வேண்டும். அவ்விறைவேண்டல் நமக்கு இலக்குத் தெளிவையும் சோதனையை வெல்லும் மனத்திடத்தையும் நிச்சயம் தரும்.சோதனையைக் கடக்கும் போது நாம் இடர்பல பட்டாலும் தொடர்ந்து போராடி ஜெயிக்கும் போது இன்னும் அதிக இறையனுபவத்தையும்,கடவுளின் உடனிருப்பையும் வாழ்வில் வரும் சோதனைகளைக் கண்டு கலங்காத உள்ளத்தையும் நாம் நிச்சயம் பெறுவோம்.

இன்றைய முதல் வாசகதத்தில் கடவுள் நோவாவுடன் உடன்படிக்கை செய்வதை வாசிக்கிறோம்.தன்னைச் சுற்றியுள்ள அனைவரும் உலக இன்பத்தில் மகிழ்ந்து பாவ வாழ்வில் வாழ்ந்த போதும் ,நோவா பாவச் சோதனையில் தன்னை உட்படுத்தாமல் நேர்மையாளராக,கடவுளுக்கு உகந்தவராக வாழ்ந்தார். அதனால் அவர் கடவுள் அவர் மூலம் மனுக்குலம் முழுவதுடனும் உடன்படிக்கை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இயேசு கற்பித்த இறைவேண்டலில் "எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும் "என நாம் ஜெபிக்கிறோம். அதை உணர்ந்து ஜெபிப்போம். சோதனைகளை வென்று கடவுளின் உடன்படிக்கை மக்களாய் வெற்றியை நோக்கி பயணிப்போம்.

இறைவேண்டல்

எந்நாளும் துணை செய்யும் இறைவா! அன்றாட வாழ்வில் வரும் சோதனைகளை இறைவேண்டலுடனும்,மனத்திடத்திடனும் வெல்ல சக்தி தாரும் ஆமென்.

Add new comment

4 + 1 =