நன்மை செய்யும் மனமுண்டா! | குழந்தைஇயேசு பாபு


பொதுக்காலத்தின் 27 ஆம்  ஞாயிறு - I. எசா 5:1-7; II. திபா: 80:8,11,12-13,14-15,18-19; III. பிலிப்பியர் 4:6-9; IV. மத்21:33-43

ஒரு தம்பதியிக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். தங்களுக்கு ஒரே வாரிசு என்பதால் மிகவும் அவனை மிகவும் செல்லமாக வளர்த்தார்கள் அப்பெற்றோர்.மகன் தேவை என்று எதைக்கேட்டாலும் உடனடியாக நிறைவேற்றினர். சிறந்த பள்ளியில் கல்வி. உயர்தர உடைகள், சத்தான உணவு, வசதியான வீடு என்று தன் மகனின் எல்லா தேவைகளை மட்டுமின்றி விருப்பங்களையும் பார்த்து பார்த்து நிறைவேற்றினர். தங்கள் மகன் நன்கு படித்து வளர்ந்து முன்னேறி தங்களை காப்பாற்றுவான் என்ற நம்பினர். காலப்போக்கில் மகனின் குணம் மாறியது. பெற்றோரை மதிக்காமல் வார்த்தைகளாலும் செயல்களாலும் காயப்படுத்தினான். தன்னுடைய வருமானத்தை வீட்டிற்கு கொடுக்காமல் குடி சூதாட்டம் என செலவிட்டு அழித்தார். வயது முதிர்ந்த தன் தாய் தந்தையரின் பேச்சை மதிக்கவில்லை. மனமுடைந்து போன பெற்றோர்கள் தங்கள் நம்பிக்கையை வீணாக்கிய மகனுக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுக்க எண்ணி, தங்கள் உடைமைகளை அனாதை இல்லத்திற்கு எழுதி வைத்துவிட்டு தாங்களும் முதியோர் இல்லம் சென்றனர்.

இப்படிப்பட்ட நிகழ்வுகளை நாம் ஏராளம் பார்த்திருப்போம். கேட்டிருப்போம். இவை நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன? சிந்திப்போமா.

இன்றைய வாசகங்கள் நம்மை நன்மையை நாடுபவர்களாக மட்டுமல்ல பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு பலனாக இன்னும் அதிக நன்மையைத் தருபவர்களாக வாழ நம்மை அழைக்கிறது. அதுவே நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நாம் காட்டும் நன்றி உணர்வு. 

இன்றைய முதல் வாசகத்திலும் நற்செய்தியிலும் நாம் காணும் திராட்சைத்தோட்ட உரிமையாளர் தந்தையாம் கடவுள். திராட்சைத் தோட்டமும், குத்தகைக் காரர்களும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள். கடவுள் தாம் தேர்ந்தெடுத்த மக்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்கிறார். பெற்றோர் பிள்ளைகளின் தேவையை பார்த்தறிந்து நிறைவேற்றுவது போல் கடவுளும் நிறைவேற்றுகிறார். எதிலும் குறைவைக்கவில்லை. அப்படிப்ட்ட கடவுள் தன் பிள்ளைகளிடமிருந்து தகுந்த பலனை எதிர்பார்ப்பதில் தவறில்லை. அவருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றவது மக்களின் கடமை. அதை நிறைவேற்றாத போது அதற்குரிய பலனை நாம் கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும்.

இதை இன்னும் எளிய முறையில் புரிந்து கொள்ள இயற்கையை எடுத்துக்கொள்வோம். மனித வாழ்வு முற்றிலும் இயற்கையை சார்ந்தது. இயற்கை நமக்கு நல்லற்றையே தருகிறது. இயற்கையின் எல்லா நன்மைகளையும் அனுபவிக்கும் நாம் நன்றி உணர்வுடன் அதை பாதுகாப்பது இல்லை. ஆனால் இயற்கையை அழித்து மாசுபடுத்துகிறோம். அதற்குரிய தண்டனையாக தான் பல வேளைகளில் நிலநடுக்கங்களும் சுனாமிகளும் கொள்ளை நோய்களும் நம்மை வதைக்கின்றன.

ஆம். சகோதர சகோதரிகளே இன்றும் கடவுள் நாம் நல்வாழ்வு பெற நமக்கு பல ஆசிகளை வழங்கி இருக்கிறார். மனிதர்கள் மூலமாகவும் இயற்கை மூலமாகவும், நல்லனவற்றை பயன்படுத்தி வளர்ந்து பலனுள்ள பயனுள்ள வாழ்வு வாழ நமக்கு பல வாய்ப்புகளைத் தருகிறார். நாம் அவற்றையெல்லாம் பயன்படுத்தாது நம் வாழ்வை வீணடிக்கும் போது அவர் மிகுந்த வேதனை அடைகிறார்.

யாராவது உங்களுக்கு தீமை செய்தால் அவருக்கு தீமைக்குப் பதிலாக நன்மையை செய்யுங்கள் என்று போதித்தும் அதை வாழ்ந்தும் காட்டியவர் இயேசு. அப்படியிருக்க அவரைப் பின்பற்றும் நாம் அடைந்த நன்மைகளுக்கு இன்னும் பன்மடங்கு நன்மையைத் தருவதுதானே அவருக்கு உண்மையான மகிழ்வைத் தரும்.

இன்றைய இரண்டாம் வாசகத்திலும் புனித பவுல் நல்லவற்றை நேர்மையானவற்றை தூய்மையானவற்றை மனதில் இருத்துங்கள் என்று கூறுகிறார். நாம் நன்மையை நம் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் கொண்டு வாழ்வதே நம் தந்தையின் திருவுளம். எனவே நாம் நல்லவராம் கடவுளின் சாயலை உள்வாங்கி நன்மையை அனுபவிப்பதோடு நின்றுவிடாமல் பல மடங்கு நன்மையை வாழ்வில் வெளிப்படுத்த இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

பிள்ளைகளுக்கு நல்லவற்றை மட்டுமே தரும் நல்ல தந்தையே, நீர் எங்களுக்கு தந்த வாழ்வில் நன்மையை மட்டுமே எதிர்பார்க்கும் நாங்கள் அதற்கு பிரதிபலனாக நன்மையை அளிக்க தவறுகிறோம். எம்மை மன்னித்து இனி வாழும் நாட்களில் நல்ல கனிகளைத் தந்து உம்முடைய எதிர்பார்ப்பை சிறிதளவேனும் நிறைவேற்ற முயலும் வரம் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

17 + 1 =