தாழ்ச்சியின் ஆழத்தில் தான் உயர்வு!


humility and God

இன்றைய வாசகங்கள் (03.09.2020) - பொதுக்காலத்தின் 22 ஆம் வியாழன் - I. 1கொரி. 3:18-23; II. திபா. 24:1-2,3-4,5-6; III. லூக். 5:1-11

விண்ணிலே வீரியமாய் பறந்து கொண்டிருந்த விமானம், திடீரென வழிதவறிச்செல்ல ஆரம்பித்தது. விமான ஓட்டியின் அஜாக்கிரதையால் இப்படி ஒரு விபரீதம் ஏற்பட்டது. இக்கட்டான சூழ்நிலை உருவானபோதும் விமான ஓட்டிகள் எப்படியாவது நிலைமையை சரிசெய்துவிடலாம் என்று போராடினார்கள். இதைப்பற்றி அறியாத பயணிகள் கவலையின்றி நிம்மதியாக பயணத்தைத் தொடர்ந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே விமானிகள் பயணிகளிடம் அறிவிப்பு செய்யத்தொடங்கினர். விமானம் பாதை தவறியதால் பெரிய ஆபத்து இருப்பதாகவும், பயணிகள் பாராசூட் அணிந்துகொண்டு கீழே குதித்து தங்களை காப்பாற்றிக்கொள்ளுமாறும்  அறிவிப்பு வந்தது. விமானம் முழுவதும் அச்சத்தால் நிரம்பியது. பயணிகள் அழவும் அலறவும் தொடங்கினர். செய்வதறியாது திகைப்பில் இருந்த சமயத்தில் ஒரு மனிதர் பயப்படாதீர்கள், நான் உங்களைக் காப்பாற்றுகிறேன் என்று கத்தினார். அதைக்கேட்ட அனைவரும் அந்த மனிதரை ஏளனமாக திட்டத்தொடங்கினர்.

அவர் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக இருந்தார். கைதேர்ந்த விமான ஓட்டிகளாலேயே பிரச்சினையை தீர்க்க இயவில்லை. இவரால் என்ன செய்துவிட முடியும் என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டார்களே தவிர அந்த மனிதரின் குரலை யாரும் கேட்ட பாடில்லை. இறுதியில் அவர் அனைவரையும் அமைதிப்படுத்தி விட்டு வேகமாக விமான ஓட்டிகளின் அறைக்குச்சென்றார். சிறிது நேரத்தில் விமானம் சரியான பாதைக்கு திரும்பியது. அனைவரும் பத்திரமாக தங்கள் இடங்களுக்குத் திரும்பினர். அப்பொழுதுதான் அந்த மனிதர் அஸ்ட்ரானமி எனச்சொல்லப்படும் வானியலைக் கற்றவர் எனபது அனைவருக்கும் தெரிய வந்தது. அவர் தகுந்த நேரத்தில் செய்த உதவி பலருடைய உயிரைக்காப்பாற்றியது. யாரையும் குறைவாக எடை போடக்கூடாது என்பதையும் தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் தவறானது என்பதையும் பயணிகள் உணர்ந்து கொண்டனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இதைப்போன்ற நிகழ்வை காண்கிறோம். காலம் காலமாய் மீன் பிடிக்கும் தொழில் செய்பவர்களுக்கு, கடலில் எங்கு மீன் கிடைக்கும், எந்த பருவகாலத்தில் மீன்பாடு நன்றாக இருக்கும், எந்தப் பருவத்தில் எந்த வகை மீன்களைப் பிடிக்கலாம் என்ற அறிவும் அதைவிட அனுபவமும் அதிகமாகவே இருக்கும். மீனவரான சீமோனும் தன் தொழிலில் நிச்சயம் நுணுக்கங்களை அறிந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில் தான் இரவு முழுதும் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்காமல் உடலும் மனமும் சோர்ந்த நிலையில் வலைகளை அலசிக்கொண்டிருந்த சீமோனிடம் ஆழத்தில் வலை வீசச் சொல்கிறார் இயேசு. சீமோன் நினைத்திருந்தால் எங்களை விடவா உமக்கு அறிவும் அனுபவமும் அதிகம் என்று எண்ணிக்கொண்டு இயேசுவின் பேச்சை கேட்காமல் போயிருக்கலாம். ஆனாலும் ஒரு போதகர் சொல்கிறார் முயற்சி செய்து பார்ப்போம் என்ற பணிவுடன் அவர் மீண்டும் ஆழத்தில் வலைவீச ஏராளமான மீன்கள் கிடைத்தது. அப்போது தான் அவர் தன்னுடைய வெறுமையை உணர்ந்தார். தன்னைத் தாழ்த்தினார். தாழ்த்தியதால் இயேசுவின் பெருமையை அறிந்து அவருக்கு சொந்தமானார். 

கற்றது கையளவு. கல்லாதது உலகளவு என்ற சொல்வழக்கு நாம் அறிந்ததே. நாம் அனைவரும் அறிந்தவைகள் கொஞ்சமே. கல்லாதவை கடலளவு இருக்க,  அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு எனக்கெல்லாம் தெரியும் என்ற பெருமையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் நம்மை விட பிறரை தாழ்வாக எண்ணுகிறோம். பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளும் பணிவு நம்மிடம் இல்லாமலேயே போய்விடுகிறது. இந்த மனநிலையை மாற்றவே இயேசு நம்மை அழைக்கிறார். இக்கட்டான சூழ்நிலையில் அக்கறையுடன் பிறர் கூறும் ஆலோசனைகளை பணிவுடன் ஏற்றால் நமக்கு வெற்றி நிச்சயம்.

இன்றைய முதல் வாசகத்திலும் புனித பவுலின் வார்த்தைகள் மூலம் கடவுள் நமக்கு கூறும் செய்தி நாம் நமது ஞானத்தைக் குறித்து  பெருமை பாராட்டக் கூடாது என்பது தான். ஞானம் கவுளிடமிருந்துதான் வருகிறது. அந்த ஞானத்தால் நாம் அடைகின்ற பெயரும் புகழும் கடவுளுக்கே உரியது என்பதையும் நாம் உணர்ந்து வாழ அழைக்கப்படுகிறோம். எவ்வாறு சீமோன் தன் தாழ்ச்சியினால் இயேசுவைப் பின் தொடர்ந்து அவர் சொந்தமானாரோ அதைப்போல நாமும் நம் வீண் பெருமைகளைக் களைந்து கடவுள் முன் நம்மைத் தாழ்த்தி அவருக்கு உரியவர்களாவோம். அதற்கான வரத்தை அவரிடம் பணிவுடன் வேண்டுவோம்.

இறைவேண்டல் 

எங்களுக்கு அனைத்தையும் அருள்பவரே இறைவா! ஞானமும் அறிவும் உம்மிடமிருந்தே வருகின்றன. ஆனால் அதைப் பெற்றுக்கொண்ட நாங்களோ வீண் பெருமை பாராட்டுவதோடு பிறரையும் குறைவாக மதிப்பிடுகிறோம். இன்று நாங்கள் உம்முன் பணிந்து அறிக்கையிடுகிறோம். தாழ்ச்சியுடன் வாழ்ந்து உமக்கு பெருமை சேர்க்கும் உமது மக்களாக வாழ எமக்கு அருள் தாரும். மேலும் கடினமாக சூழல்களில் அன்புடன் பிறர் கூறும் ஆலோசனைகளின் மூலம் உமக்கு செவி சாய்த்து வாழ்வில் முன்னேறும் வரம் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 6 =