சட்டத்துக்குள் மனிதநேயம் சாத்தியமா! | குழந்தைஇயேசு பாபு


17.07.2020

 

இன்றைய வாசகங்கள் (17.07.2020) - பொதுக்காலத்தின் 15ஆம் வெள்ளி - I. எசா. 38:1-6,21-22,7-8; II. மத். 12:1-8

உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இடமும் தான் ஒரு மனிதரின் அன்றாட அடிப்படைத் தேவையாக இருக்கிறது. இந்த மூன்று தேவைகளில் இடமும் உடையும் குறைவாக இருந்தாலும் நம் வாழ்வை வாழ முடியும். ஆனால் உண்ணும் உணவு குறைவாக இருந்தால் நிச்சயமாக வாழ்வது கடினம். இயற்கையாகவே பசி என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. உடையையும் இருப்பிடத்தையும் தாண்டி உணவில் மட்டும் நாம் மற்ற உயிரினங்களோடு ஒத்துப் போகிறோம். பசி என்ற உணர்விற்கு மதிப்பளிக்க நாம் இன்றைய நாளில் அழைக்கப்பட்டுள்ளோம். 

நம் தமிழ் மரபில் விருந்தோம்பல் பண்பு மிகச்சிறந்த உன்னத பண்பாகக் கருதப்படுகிறது. நம் தமிழ் முன்னோர்கள் உணவு என்று தன்னை நாடி வந்த அனைவருக்கும் உணவளிக்கும் வழக்கத்தை தங்கள் இயல்பிலேயே கொண்டிருந்தார்கள். பிறரின் பசியை ஆற்ற இரக்கக் குணத்தோடு உணவு அளித்தனர். ஆனால் வளர்ந்து வரும் இன்றைய நவீன காலகட்டத்தில் பிறரின் பசியை ஆற்றும் உன்னத விருந்தோம்பல் பண்பு குறைந்து வருகிறது. இப்படிப்பட்ட மனநிலை மாறி பிறரின் பசி உணர்வை அறிந்து உணவளிக்க அழைக்கப்பட்டுள்ளோம். 

நான் என்னுடைய களப்பணி அனுபவத்தின் வாயிலாக பசி என்ற உணர்வினையும் உணவின் அவசியத்தையும் உணர முடிந்தது. நான் 11 ஆண்டுகளாய் பல்வேறு இடங்களில் குருத்துவப் பயிற்சி பெற்று வருகிறேன்.அனுபவத்திற்காக பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். அவ்வாறு செல்லும் பொழுது மக்களின் வாழ்க்கை சவால்களையும் இடையூறுகளையும் என்னால் அறிய முடிந்தது. நான் சந்தித்த எத்தனையோ குடும்பங்களில் அன்றாடம் உழைத்தால் தான் உணவு என்ற நிலை இருந்திருக்கிறது. "நாங்கள் உழைப்பதே எங்கள் வயிற்று உணவுக்காக தான்" என்று எத்தனையோ மக்கள் பகிர்ந்து இருக்கிறார்கள். அதே போல நான் சாலையில் நடந்து கொண்டிருக்கும் பொழுது உணவுக்காக கையேந்தும் நபர்களையும் பார்த்திருக்கிறேன். பசி அவர்களின் தன்மானத்தை கூட இழக்க வைக்கிறது. அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன் உணவு எந்த அளவுக்கு முக்கியமானது என்று. இன்றைய உலகில் எத்தனையோ ஆயிரம் மக்கள் பசியின் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இந்த நிகழ்வுகளை நான் அறிந்த பிறகு உணவை ஒருபோதும் வீணாக்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். பசி என்று கேட்போருக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். 

"பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் " என்னும் முதுமொழி இயேசுவின் சீடர்களுடைய வாழ்க்கையில் இன்றைய நற்செய்தியில் உண்மையானது. இயேசுவின் சீடர்கள் பசியாய் இருந்த காரணத்தினால் கதிர்களைக் கொய்துகின்றனர். ஆனால் பரிசேயர்கள் சீடர்களின் பசி உணர்வை புரிந்து கொள்ளாமல் அறிவார்ந்த சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்து சட்டத்தை தூக்கிப்பிடிக்கின்றனர். மனிதரின் ஆற்றலை இழக்க செய்யும் பசியை பொருட்படுத்தாமல் ஓய்வுநாள் என்ற சட்டம் தான் பெரிது என்று இயேசுவிடம் வாதிடுகின்றனர். 

ஆனால் இயேசு மனித நேய சிந்தனை கொண்டவராய் சீடர்களின் பசி உணர்வை உணர்கிறார். இயேசு பரிசேயர்களின் சட்டத்தின் பெயரால் குற்றம் காணும் மனநிலையைக் கேள்விக்குட்படுத்துகிறார். தாவீது தூய அப்பத்தை பசியாய் இருந்தபோது உண்டதை மேற்கோள்காட்டி சட்டத்தை விட மனித நலம் தான் முக்கியம் என்பதை எடுத்துரைக்கின்றார். "உண்மையிலேயே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் " {ஓசே: 6:6} என்ற வார்த்தைகளை இயேசு மேற்கோள்காட்டி ஓய்வு நாளும் மானிட மகனுக்கு கட்டப்பட்டது எனக் கூறுகிறார். 

இயேசு இன்றைய நாளிலே உண்ண உணவில்லாமல் பசியால் வாடும் மனிதர்களின் உணர்வுகளை உணர அழைப்பு விடுக்கிறார். இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ நபர்கள் சட்டத்தின் பெயரால் பாமர மக்களை ஒடுக்குகின்றனர். உண்ணப் போதிய உணவு கூட இல்லாமல் இருக்கும் மக்களை கண்நோக்காமல் பரிசேயர்களைப் போல சுயநலத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இதன் விளைவாக எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வுலகில் ஒவ்வொருநாளும் மடிந்து வருகின்றனர். பரிசேயர்கள் போன்ற உள்ளதினர் இன்னும் இவ்வுலகத்தில் வாழ்வதால் பிறரின் பசி உணர்வை புரிந்து கொள்ளலாமல் இருக்கின்றனர்.

பசியின் காரணமாக எண்ணற்ற நபர்கள் கொலைகாரர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் மாறி வருகின்றனர். இத்தகைய நிலை மாற சட்டங்களைத் தாண்டி மனித நேயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க நம் ஆண்டவர் இயேசு அழைக்கின்றார். நாம் வாழும் இந்த உலகம் இறைவனால் கொடுக்கப்பட்ட உன்னதமான கொடை. இதில் வாழும் அனைவருமே கடவுளின் அன்பு பிள்ளைகள். எனவே நம்மாலான உதவிகளை பசியால் உள்ளவர்களுக்கு செய்யும் பொழுது நாம் கடவுளுக்கே செய்கிறோம். எனவே சட்டத்தை தாண்டி மனிதநேயச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இறையருள் வேண்டுவோம். 

இறைவேண்டல் 

மனிதநேய தலைவரே இறைவா! நாங்கள் வாழும் இந்த உலகத்தில் எத்தனையோ மக்கள் உண்ண உணவில்லாமல் பசியின் கொடுமையில் தவிக்கின்றனர். பரிசேயர்களைப் போல சட்டத்தை தூக்கிப்பிடித்து பிறரின் பசியை கண்டுகொள்ளாமல் இருக்கும் மனநிலையை மாற்ற மன மாற்றத்தை தரும். அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவியைச் செய்து பிறரின் பசி உணர்வை உணர்ந்து பசியைப் போக்க அருள்தாரும். ஆமென்.

அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு

சிவகங்கை மறைமாவட்டம்​

Add new comment

3 + 0 =