மனித மாண்பை காப்பது எது? | குழந்தைஇயேசு பாபு


Humanity

பொதுக்காலத்தின் 26 ஆம் ஞாயிறு - I. எசே: 18:25-28; II. பிலி: 2:1-11; III. திபா: 25:4-5,6-7,8-9; IV. மத்: 21:28-32

ஒரு மனிதனை மாண்புள்ள மனிதனாக மாற்றுவது அவனுடைய சொல்லும் செயலும் தான். எவ்வளவு பணம் பட்டம் பதவி போன்றவற்றைக் கொண்டிருந்தாலும் சொல்லும் செயலும் இணைந்து செல்லவில்லை எனில் அது மனித மாண்பை இழக்கச் செய்கின்றது. யாரெல்லாம் தாங்கள் சொல்வதை செய்கின்றார்களோ அவர்கள் மாமனிதர்கள். யாரெல்லாம் செய்வதை சொல்கிறார்களோ அவர்களும் மாமனிதர்கள். மனித மாண்பை மாண்புறச் செய்ய நாம் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? என்ற சிந்தனையை இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

இன்றைய காலகட்டத்தில் அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்வதற்கு காரணம் என்னவெனில் இனிமையான சொற்களைப் பயன்படுத்தி வாக்குகளை பெற்றுவிட்டு ஒரு செயல்பாடும் செய்யாமல் ஊழல் செய்வதால்தான் அரசியல் ஒரு சாக்கடை என கூறுகின்றோம். இப்படிப்பட்ட சாக்கடையை சுத்தப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டுமெனில் அரசியலில் சொல்லும் செயலும் ஒரே பாதையில் இணையவேண்டும்.

 சொல்வதை செய்பவரையும் செய்ததை சொல்பவரையும் தேர்வு செய்யும் கடமை நம் கையில் இருக்கின்றது. தேர்தல் நேரம் வருகின்ற பொழுது அரசியலில் ஆதாயம் தேடும் தலைவர்கள் நமக்கு பின் வருவார்கள். எல்லாவற்றையும் செய்வதாக வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால் வெற்றி பெற்ற பிறகு 'வாக்குறுதியா அப்படி என்றால் என்ன?' என்று கேட்பார்கள். இப்படி சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத மனிதரை தேர்ந்தெடுப்பது நம்முடைய சுயநலம். தேர்தல் நேரத்தில் ஓட்டை விலைக்கு  கேட்கும் அரசியல் வாதிகளிடம் பணம் பெற்று ஓட்டு போட்டால் இந்த உலகத்திலே நாம் தான் மிகப்பெரிய சுயநலவாதிகள்.

எனவே ஒருநாள் செலவழிக்க பணம் வாங்கிவிட்டு ஐந்து ஆண்டுகள் அடிமையாக வாழ்வது வாழ்க்கையா? இப்படிப்பட்ட நிலை மாற வேண்டுமெனில் நம்முடைய சொல்லும் செயலும் நேர்மை உள்ளதாக இருக்க வேண்டும். தூய்மையையும் உண்மையையும் வளர்த்தெடுப்பதாக இருக்க வேண்டும். வருகின்ற வருடத்தில் நம்முடைய தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். இந்தத் தேர்தலில் நாம் யாருக்கு நம் உரிமையை பயன்படுத்த போகின்றோம். மண்ணையும் மனிதத்தையும் மொழியையும் காக்கத் துடிக்கும் தலைவர்களுக்கா? அல்லது  மண்ணையும் மனிதத்தையும் மொழியையும் அழிக்க நினைக்கும் தலைவர்களுக்கா?. நாம் இப்பொழுதே சிந்திக்க அழைக்கப்பட்டு உள்ளோம். 

யாருடைய சொல்லும் செயலும் ஒன்றாக இணைந்து தூய்மையான, உண்மையான  மற்றும் நேர்மையான பாதையில் செல்லுகின்றதோ அவர்களுக்கே நம் உரிமை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் மட்டுமே நம்முடைய நாட்டில் அடிமைகளாய் அல்ல ;அதிகாரமுள்ளவராய் வாழமுடியும். இப்படிப்பட்ட ஒரு நேர்மையான எண்ணத்தில் வாழும் பொழுது இந்த மனிதத்தை மாண்புறச் செய்ய முடியும்.  இப்படிப்பட்ட மனநிலையைத் தான் நம்மிடம் இயேசு கிறிஸ்து எதிர்பார்க்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியல் இறைவாக்கினர் இஸ்ரயேல் மக்களின் உண்மையற்ற மனநிலையை சுட்டிக்காட்டுகின்றார். அவர்கள் அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கப்பட்டது அவர்கள் யாவே கடவுளுக்கு உண்மையாக இல்லாததாலேயே. கடவுள் மனிதனை படைத்தது முதல் தன்னுடைய அன்பை முழுவதுமாக கொடுத்த பொழுதிலும் கடவுளுக்கு கீழ்ப்படிய மறந்தனர். குறிப்பாக ஆதிப் பெற்றோர் தங்களுடைய சுயநலத்தால் கீழ்படியாமை என்ற பாவத்தால் இந்த உலகத்திலேயே பாவத்தை முதன்முதலில் கொண்டு வந்தனர்.

இருந்தபோதிலும் கடவுள் அவர்களைத் தண்டிக்காது மீண்டும் மீண்டும் மன்னிப்பு கொடுக்கிறார். அதேபோல 480 ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தில் அடிமைப்பட்டு கிடந்த இஸ்ரேல் மக்களை மோசேயின் வழியாக விடுவித்து கானான் தேசத்தை வழங்கினார். இவ்வளவு அரும்பெரும் செயல்களை கண்டும் பல நேரங்களில் அவர்கள் கடவுளை மறந்து போனார்கள். எனவே தன்னுடைய தூதுவர்களாகிய இறைவாக்கினர்களை மக்களிடம் மனந்திரும்ப அனுப்புகின்றார். அதில் குறிப்பிடத்தக்கோர் எசேக்கியல், எரேமியா மற்றும் தானியல் போன்றவராவர். 

இந்தப் பின்னணியில் எசேக்கியல் இறைவாக்கினர் யாவே இறைவன் வழிகாட்டுதலின்படி இஸ்ரேல் மக்களை மனந்திரும்பி பாவ வாழ்வை விட்டுவிட அழைப்பு விடுத்தார். ஆனால் தாங்கள் துன்பப்படுவது எங்கள் முன்னோர் செய்த பாவங்கள் தான் என்று நம்பி கடவுளிடம் இருந்து தங்களை விலக்கிக் கொண்டனர். கடவுளுக்கு கீழ்ப்படிவதால் தான் துன்பங்கள் அதிகமாக இருக்கிறது என்பதைக் கூறிகடவுள் நீதி உள்ளவரா? நியாயமானவரா? என்ற கேள்விகளை எழுப்பினர். ஆனால் எசேக்கியல் இறைவாக்கினர் அவரவர்கள் பாவத்தின் பொருட்டு தான் துன்பங்கள் வரும் என்பதைத் தெளிவுபடுத்தினார். யாவே இறைவனின் உண்மையான நோக்கம் மக்களைத் தண்டிப்பது அல்ல; மாறாக,  காப்பாற்றுவது என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் கடவுளுக்கு எதிராக எவ்வளவு பாவங்கள் செய்தாலும் கடவுள் என்னை மன்னிப்பார் நம்பிக்கையோடு மனம் மாறி மன்னிப்பு கேட்கும் பொழுது நிச்சயமாக கடவுள் நம்மை மன்னிப்பார். மனந்திரும்பி நிறை உள்ள மனிதனாக வாழ்வதுதான் மனித மாண்புள்ள வாழ்வு. இந்த ஆழமான சிந்தனையை தான் இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் மிகச்சிறந்த மனித மாண்புள்ள சிந்தனையை வழங்கியுள்ளார். பிலிப்பு நகர மக்கள் திருத்தூதர் பவுலால் மிகவும் அன்பு செய்யப்பட்ட மக்கள். ஆனால் அவர்களிடத்தில் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. மனித மாண்பு இழக்கச் செய்யும் ஏற்றத்தாழ்வு மனநிலை இருந்தன. இத்தகைய மனநிலையை அடியோடு அகற்றி இறைவன் பார்வையில் அனைவரும் சமம் என்ற சமத்துவ சித்தாந்தத்தை நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இரண்டு வகையான சிந்தனையை திருத்தூதர் பவுல் நமக்கு வழங்கியுள்ளார். இன்று இந்த உலகத்தில் பிறந்த எல்லோருமே இறைவனின் பிள்ளைகள். யாருமே தன்னை உயர்ந்தவன் எனவும் பிறரை தாழ்ந்தவன் எனவும் நினைக்கக் கூடாது என்பதை அறிவுறுத்தி உள்ளார். மேலும் இரண்டாவதாக நம்முடைய சுய நல வாழ்வை களைந்துவிட்டு பொது நலத்தோடுப் பிறரின் வாழ்வு வளம் பெற மனித மாண்போடு வாழ சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மாட்டு இயேசுகிறிஸ்து மனித மாண்புள்ள மனிதனுக்கு இரு உதாரணங்களைக் சுட்டிக்காட்டியுள்ளார். தந்தையின் இரு மகன்களும் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாக உள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் இயேசுவின் பார்வையில் மனித மாண்புள்ளவராக இருக்கின்றார். மூத்த மகன் திராட்சைத் தோட்டத்திற்கு போகமுடியாது என்று கூறினாலும் தன்னுடைய தந்தையின் வார்த்தைகளை தியானித்து மனம்மாறி திராட்சைத் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இளையமகன் திராட்சைத் தோட்டத்திற்கு செல்கிறேன் என்று சொன்னாலும் திராட்சைத் தோட்டத்திற்கு செல்லாமல் போய் விடுகின்றார். இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்கள் தான் இயேசு வாழ்ந்த காலத்திலும் இன்றைய காலகட்டத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.

இன்றைய நற்செய்தி பகுதியானது யூத சமுதாயத்தில் மனநிலையை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. மனித மாண்போடு மனித நேயத்துடன் வாழ வேண்டிய யூதர்கள் சட்டத்தை மட்டும் கையில் எடுத்து மனிதநேயம் இல்லாமல் வாழ்வதை கண்ட இயேசு அவர்களின் வெளிவேடத் தன்மையைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வை கூறியுள்ளார். பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போன்றோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அவர்கள் நற்செய்தி படி வாழ வாய்ப்பு கிடைத்தும் தாங்கள்  அழைக்கப்பட்ட நிலையை மறந்து  வாழ்ந்தனர். எனவே தான் உண்மையான மீட்பை புரிந்துகொள்ள முடியாமல் மீட்பை இழந்தனர்.  மூத்த மகனைப் போல மனமாற்றம் அடைய விரும்பியவர்கள் விலை மாந்தர்கள், ஆயக்காரர்கள், பாவிகள், இறைவார்த்தையைக் கேட்டு அதை ஆழ்ந்து சிந்தித்து முழு மனதாழ்ச்சியோடு நற்செய்திக்கு கீழ்ப்படிந்தவர்கள்  மூத்த மகனுக்கு  ஒப்பாவர். இப்படிப்பட்ட மனநிலை கொண்டிருப்பவர்கள் மட்டும்தான் விண்ணரசை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

"மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்ற  நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு ஏற்ப  தந்தையாகிய கடவுளின் வார்த்தைக்கு செவிமடுக்கும் பொழுது நிச்சயமாக மனித மாண்புள்ள மனிதர்களாக வாழ முடியும். ஒரு முதிர்ச்சி நிறைந்த கிறிஸ்தவ வாழ்வை வாழ முடியும். நம் வாழ்வில்  நாம் சொல்வதை செய்யவும் செய்வதை சொல்லவும் நேர்மையான மனநிலையில் வாழ முயற்சி செய்வோம். அப்பொழுது "நேர்மையான மனிதன் கடவுளின் ஒரு உன்னதமான படைப்பு" என்ற அலெக்சாண்டர் வார்த்தைகளுக்கு இணங்க நான் மிகச் சிறந்த ஒரு மனிதநேய மிக்க மாமனிதர்களாக மாறமுடியும். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.

இறை வேண்டல்  
மனமாற்றத்தை வழங்கும் இறைவா! நாங்கள் எங்களுடைய வாழ்விலே சொல்வதை செய்யாமல் சொல்லாத தீயவற்றை செய்துள்ளோம். அதற்காக மன்னிப்பு கேட்கின்றோம். எங்களுடைய வாழ்வில் எந்நாளும் தூய்மையைக் கடைபிடித்து நேர்மையுள்ளவர்களாக வாழ்ந்து இந்த உலகத்தை இயேசுவின் இறையாட்சி உலகமாக மாற்றும் இறைக்கருவிகளாக எங்களைத் திடப்படுத்தும். இந்த மண்ணிலே மனிதமும் மனிதநேயமும் உயிர் பெற்றெழச் செய்ய  தேவையான அருளைத் தரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Comments

Super

Add new comment

2 + 0 =