கிறிஸ்துவோடு உள்ள உறவில் நான் குழந்தையா?


God - Child

இன்றைய வாசகங்கள் (02.09.2020) - பொதுக்காலத்தின் 22 ஆம் புதன் - I. 1கொரி 3:1-9; II. திபா. 33:12-13,14-15,20-21; III. லூக். 4:38-44

மிகுந்த ஞானமும் வல்லமையும் கொண்ட ஒரு முனிவர் தூரமான பயணம் மேற்கொண்டார்.  ஒரு சிறிய கிராமத்தின் வழியாக அவர் கடந்த போது களைப்பு ஏற்படவே சற்று ஓய்வெடுக்க எண்ணினார். இதைக்கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாய் சென்று அவரிடம் உபதேசங்கள் கேட்கத் தொடங்கினர். சிலர் அதிசயங்களையும் கண்டனர். அவ்வூரிலே பணபலம் படைத்த மனிதர் ஒருவர் இருந்தார். அவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஜெபம் தவம் அறிவுரை கேட்பது போன்றவற்றையெல்லாம் அடியோடு வெறுத்தார். மக்கள் முனிவரைத்தேடி கூட்டம்  கூட்டமாக செல்வதைக்கண்டு எரிச்சலடைந்த அந்த மனிதர் அந்த முனிவரை ஏளனம் செய்யும் நோக்குடன் அந்த முனிவர் இருந்த இடத்திற்கு சென்றார்.

அந்த முனிவரைப்பார்த்து "உங்கள் வயது என்ன?" என கேட்டார். அதற்கு முனிவரோ "பத்து அல்லது பதினொன்று இருக்கும்" என பதிலளித்தார். அதைக்கேட்ட அந்த மனிதர் சத்தமாக சிரித்து விட்டு, "ஞானமுள்ள முனிவர் என்று சொன்னார்கள். பார்க்க பழுத்த பழமாக இருக்கிறீர். உமது வயது கூடவா தெரியவில்லை" என ஏளனப்படுத்தினான். முனிவரோ மிகுந்த பொறுமையுடன், என்னைப் பொறுத்த வரையில் கடவுளோடு நான் செலவிடுகின்ற நேரமே என் வாழ்நாள். அதன் படி நான் கூறியது சரியே. அப்படிப் பார்த்தால் நீர் இன்னும் பிறந்திருக்கக்கூட மாட்டீர்" என்று பதில் கூறினார். இதைக்கேட்ட அந்த மனிதன் தலைகுனிவுடன் திரும்பிச்சென்றார்.

இன்று என்னுடைய வயது என்ன? நான் பிறந்தாவது இருக்கிறேனா? என்று நம்மை நாமே கேட்டுப்பார்த்தால் நமக்கும் கிறிஸ்துவுக்கும் இடையேயான உறவு முதிர்வை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

இன்றைய முதல்வாசகத்தில் புனித பவுல் கொரிந்து நகர மக்களைப் பார்த்து கிறிஸ்துவோடு உள்ள உறவில் நீங்கள் இன்னும் குழந்தைகளாகவே இருக்கிறீர்கள், கூறுகிறார். அப்படி என்றால் குழந்தை அறிவுத்தெளிவில்  எவ்வாறு பலவீனமாக இருக்குமோ அதைப்போல அவர்களும் கிறிஸ்துவைப் பற்றிய அறிவில் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் எனபதை சுட்டிக்காட்டுகிறார்.இத்தகைய முதிர்வற்ற தன்மையால் கிறிஸ்துவை முழுமையாக அறியாமல் அவரைப்பற்றி போதிக்கின்றவர்கள் பெயரால்  பிரிவினைகளும் சண்டைகளும் நிறைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த பிரிவினையால் உண்மைக்கடவுளை மறந்துவிடும் அபாயம் ஏற்படும் நிலையையும் அவர் எடுத்துக்கூறுகிறார். இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம்முடைய முதிர்ச்சி என்ன என்பதை சோதித்துப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இன்றைய உலகில் மதம் சாதி இன மொழிகளின் பெயரால் எத்தனைப் பிரிவினைகள்? ஏன் திருஅவையின் மக்கள் என மார்தட்டிகொள்ளும் நமக்குள்ளும், எத்தனை பிரிவினைகள். இவற்றிற்கெல்லாம் ஏதாவது ஒரு வகையில் நாம் காரணமாயிருக்கிறோம் என நாம் உணர்ந்தால், அது கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள உறவின் முதிர்ச்சியற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது. அவரைப்பற்றிய நம் அறிவின் தெளிவற்ற நிலையை உணர்த்துகிறது. 

இந்நிலைமாற நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள உறவை ஆழப்படுத்த வேண்டும். அவரை முழுமையாக நம்பி அவரோடு நேரம் செலவிட வேண்டும்.அவ்வாறு நமக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவு ஆழப்பட்டால் நாமும் செல்லும் இடமெல்லாம் நன்மையை செய்ய இயலும். 

இன்றைய நற்செய்தியில் பல்வேறு அலுவல்களுக்கு மத்தியிலும் இயேசு தனிமையான இடத்திற்கு சென்றார் என வாசிக்கிறோம். தனிமையான இடத்தில் தந்தையுடன் உள்ள தன் உறவை ஆழப்படுத்தினார்.அந்த ஆழமான உறவு தந்த சக்தியினால்தான் அவர் பல வல்ல செயல்களை சென்ற இடமெல்லாம் செய்தார். நோய்களை நீக்கினார். பேய்களை ஓட்டினார். எனவே நாமும் கிறிஸ்துவோடு நமக்குள்ள உறவை இன்னும் ஆழப்படுத்துவோம். குழந்தைத்தனமான புரிதல்களைக்  களைவோம்.போகின்ற இடங்களிலெல்லாம் நன்மைகளை செய்து சமூக நோய்களையும் பிரிவினைப் பேய்களையும் அகற்ற நமக்கும் கடவுள் சக்தி தருவார்.

இறைவேண்டல்

உறவில் வாழ எம்மை அழைக்கும் இறைவா, உம்மோடு கொண்டுள்ள உறவில் முதிர்ச்சியின்றி குழந்தைத்தனமாக வாழ்ந்து வருகிறோம்.  பல சமயங்களில் பிரிவினைகளுக்கும் சண்டைகளுக்கும் கூட துணை போகிறோம். எம்மை மன்னியும் .நாங்கள் ஒவ்வொரு நாளும் உம்மோடு  கொண்டுள்ள உறவில் வளர்ந்து சமூகத்தில் நல்ல செயல்கள் ஆற்றும் உம்முடைய பணியாளர்களாய் வாழும் வரம் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

4 + 4 =