Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கனி கொடுக்கும் வாழ்வு வாழ்கிறோமா? | குழந்தைஇயேசு பாபு
பொதுக்காலத்தின் 29 ஆம் சனி - I. எபே: 4:7-6; II. திபா 122:1-2.3-4.4-5; III. லூக்: 13:1-9
"நீங்கள் கனி தரவும் நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் நான் உங்களை ஏற்படுத்தினேன்" (யோவான் 15:16). அன்பு சகோதரமே நேற்றைய நாளில் அழைப்புக்கேற்ப வாழ அழைத்த இறைவன் இன்று நம்மை கனிகொடுப்பவர்களாக வாழ அழைக்கிறார். அத்தகைய வாழ்வு வாழத் தேவையான எல்லா அருட்கொடைகளையும் தந்து வாய்ப்புக்களையும் நம்கண் முன்னே ஏற்படுத்தித் தருகிறார். இத்தனையும் தந்தாலும் அவற்றைப் பயன்படுத்தி கடவுள் விரும்பக்கூடிய வாழ்வு வாழ்ந்து அவருக்கு மகிமை சேர்ப்பது நம் கையில்தான் இருக்கிறது.
இன்றைய நற்செய்தியில் நாம் காணும் அத்திமர உவமை நமக்கு இச்செய்தியை சுட்டிக்காட்டுகிறது.
செடியையோ மரத்தையோ நட்டுவைத்து பராமரித்து வளர்த்தவர் அதிலிருந்து பலனை எதிர்பார்ப்பது இயற்கையான விஷயம். பலன் தராதவற்றை வெட்டி எரியத்தான் அனைவரும் எண்ணுவர். இதற்கு யாரும் விதிவிலக்கில்லை. நாமெல்லாரும் தந்தையாம் கடவுள் நட்டுவைத்த திராட்சைச் செடிகள் . நமக்கு வாழ்வை வழங்கிய அவர் நம்முடைய வாழ்வு நிறைவானதாக, நன்மை தருவதாக, உலகிற்கு பயனளிப்பதாக இருக்க வேண்டும் என்று ஆசிக்கிறார். அதற்காகத் தான் தன் ஒரே மகனையே தந்திருக்கிறார். அவருடைய வார்த்தைகள் மூலமும் நமக்கு நல்ல வழிகளைக் கற்றுத்தருகிறார். இவை அனைத்தையும் பெற்றபிறகும் நம் வாழ்வு பயனளிக்கவில்லை என்றால் நாமும் அவருடைய பார்வையிலிருந்து அகற்றப்படத்தான் வேண்டும். இருப்பினும் அவர் மீண்டும் மீண்டும் தமது இரக்கத்தை நினைவுகூர்ந்து நமக்கு வாய்ப்பளிக்கிறார்.
கிறிஸ்து இயேசு இவ்வுலகிலே தந்தையின் திருவுளப்படி மனிதனாய் வாழ்ந்து நம்அனைவருக்கும் அன்பையும் மீட்பையும் கனியாகக் கொடுத்தார். தாம் கொடுக்க விரும்பிய அளவிற்கு ஏற்ப தம் அருளை நமக்கு கொடுத்திருக்கிறார். அவரைப் பின்பற்றி நாமும் அவரைப்போல் எல்லாவற்றிலும் வளரவேண்டும் என்பதே இன்றைய முதல் வாசகம் நமக்குத் தரும் செய்தி. கிறிஸ்துவைப்போல வளர்வதே நாம் கனிகொடுக்கும் மக்கள் என்பதற்குச் சான்றாகும். அந்நிலையை அடைய கிறிஸ்துவே நமக்காகத் தந்தையிடம் பரிந்து பேசுகிறார்.
கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் தன் மாணவர்களிடம் தேர்ச்சியை எதிர்பார்ப்பார். சத்தான உணவு படைக்கும் தாய் தம் பிள்ளைகள் ஆரோக்கிமாய் வாழ்ந்து சுறுசுறுப்பாய் வளர்வதை எதிர்பார்பார். ஊதியம் வழங்கும் முதலாளி தன் பணியாளர்கள் சிறப்பாய் பணிபுரிவதையே எதிர்பார்ப்பார். அதேபோல இன்றும் அன்றாடம் நற்கருணை, இறைவார்த்தை, வழிபாடுகள் அத்தோடு இறை அனுபவங்கள், மூத்தோரின் வழிகாட்டுதல்கள் மூலமாக கடவுள் நம் வாழ்க்கைக்கு உரமிட்டுக் கொண்டிருக்கிறார். அவற்றைச் சிறந்த முறையில் பயன்படுத்தி கனிதரும் மக்களாய் நாம் வாழவேண்டும் என எதிர்பார்கிறார். எனவே நாமும் தந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயன்றவரை முயலுவோம். இயேசுவைப்போல வளர்வோம். அதற்கான அருளை கடவுளிடம் கேட்போம்.
இறைவேண்டல்
எங்களுக்கு வாழ்வளித்துப் பராமரிக்கும் இறைவா! வாழ்விலே கிறிஸ்துவைப் போன்று வளர்ந்து கனிதர நீர் தரும் எல்லா வாய்ப்புக்களையும் பயன்படுத்தி பயனளிக்கும் வாழ்வு வாழ உமது அருளைத் தாரும். ஆமென்.
Add new comment