இலக்கில் வெற்றி அடைய வேண்டுமா? | குழந்தைஇயேசு பாபு


towards the goal

இன்றைய வாசகங்கள் (18.07.2020) - பொதுக்காலத்தின் 15ஆம் சனி - I. மீக். 2:1-5; II. மத். 12:14-21

"இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்? " என்ற புனித அன்னை தெரசாவின் வார்த்தைகள் பிறரை குற்றம் காணும் மனநிலையை விட்டுவிட்டு அன்பு செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. கடவுள் இந்த உலகத்தை படைத்த பொழுது இந்த உலகம் புனிதமாக இருந்தது. அப்பொழுது எந்த ஒரு வன்முறையோ சண்டை சச்சரவுகளோ இல்லாத மகிழ்ச்சியின் உலகமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த மகிழ்ச்சி மறைந்து வன்முறையும் பிறரை குற்றம் காணும் மனநிலையும் உருவானது. எனவே கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள் பிறரை குற்றம் காணும் மனநிலையால் பல்வேறு தவறுகளை செய்தனர். அதன் விளைவாககடவுள் தந்த அமைதியையும் மகிழ்ச்சியையும் இழந்தனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் நம்முடைய முதல் பெற்றோர் ஆதாம் மற்றும் ஏவாள். 

நாம் வாழும் இந்த உலகத்தில் பெரும்பான்மையான இடங்களில் போட்டியும் பொறாமையும் நிறைந்திருக்கிறது. பிறர் மகிழ்ச்சி அடைந்தாலும் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் மனநிலை சிலருக்கு இல்லை. அவ்வாறு வளர்ந்து வருபவர்களையும் குற்றம் காணக்கூடிய மனநிலையும் இருக்கின்றது. குற்றம் காணும் மனநிலையில் உள்ளவர்கள், தங்கள் வாழ்வில் வளர்ச்சி பெற முடியாது. மாறாக பிறர் வளர்ச்சியில் பொறாமைப்படுவர். குற்றம் காணும் மனநிலையாலும் சூழ்ச்சி செய்யும் மனநிலையாலும் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ளும் மனிதர்கள் ஏராளம். அந்த வரிசையில் வருபவர்கள் தான் இயேசுவைக் கொல்ல சூழ்ச்சி செய்த பரிசேயர்கள். 

"ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை" என்று அறிஞர் லியோ டால்ஸ்டாயின் கூறியுள்ளார். பரிசேயர்கள் தங்களை மாற்றிக் கொள்ளாமல் தாங்கள் தான் கடவுளுக்கு அடுத்து வருபவர்கள் என்ற மனநிலையில் அடுத்தவர்களுடைய செயல்பாடுகளை குற்றம் காண்பவர்களாக இருந்தனர். அதிலும் நற்செய்தி வருவது போல் இயேசுவின் போதனைகளையும் வல்ல செயல்களையும் கண்டு அவருக்கு எதிராக பல சூழ்ச்சிகளை செய்து வந்தனர். ஏன் இயேசுவின் மேல் இவ்வளவு ஆதங்கம்? என்பதைப் பற்றி சிந்திக்க பரிசேயர்களின் பின்புலத்தை அறிவது நமக்கு தெளிவைக் கொடுக்கும்.

ஆண்டவர் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பெரும்பாலான பரிசேயர்கள் கலிலேயாவில் வாழ்ந்து வந்தார்கள். பரிசேயர்கள் மற்றவர்களைக் காட்டிலும் தங்களை வேறுபடுத்தி நல்லவர்களாக காட்டிக்கொண்டனர். "பரிசேயன்" என்ற வார்த்தைக்கு "பிரித்தெடுக்கப்பட்டவன்" என்று பொருள். இவர்கள் எருசலேமின் ஆலய அழிவுக்குப் பின் யூத மதத்திற்கு உயிர் கொடுத்தார்கள். யூத சட்டங்களையும் மறைநூலையும் துல்லியமாக கடைபிடிப்பதன் வழியாக தங்களை நீதிமான்களாக காட்டிக் கொண்டனர். பரிசேயர்கள் யூத மதத்திற்கு ஒரு சில நன்மைகள் செய்தாலும் பெரும்பாலும் சட்டத்தின் பெயரால் மக்களை ஒடுக்கக்கூடிய மனநிலையைக் கொண்டிருந்தனர்.

நம்பிக்கையின் தந்தையான ஆபிரகாமைப் போல தாங்கள் சிறந்த நம்பிக்கையாளர்கள் என்று காட்டிக் கொண்டனர். மக்களை மதத்தின் பெயரால் ஒடுக்கி திருச்சட்டங்களை வாழ்வாக வற்புறுத்தினர். அதை மீறுபவர்களை விமர்சனப்படுத்தினர். எனவேதான் நேற்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் கூட பசியின் காரணமாக கதிர்களை சாப்பிட்ட சீடர்களைப் பரிசேயர்கள் கேள்விகளுக்கு உட்படுத்தினார்கள். பரிசேயர்களின் கேள்வியை இயேசு கடுமையாகச் சாடுகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவைக் கொல்ல சூழ்ச்சி செய்த பரிசேயர்களுக்கு ஏன் இத்தகைய மனநிலை?

பரிசேயர்கள் மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே பலவற்றை செய்பவர்கள். இயேசுவின் போதனைகளை மக்கள் காணும் வரை பரிசேயரே நோக்கி தான் மக்கள் சென்றனர். ஆனால் இயேசு போதிக்க தொடங்கிய பிறகு பெரும்பாலும் மக்கள் பரிசேயர்களைக் கண்டுகொள்ளாமல் இயேசுவின் பின்னால் சென்றார்கள். இதை பரிசேயர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தான் அனைத்திலும் குற்றம் காண்கிறார்கள். இயேசுவின் மீது பொறாமை கொண்ட பரிசேயர்கள் "இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்" {மத். 12:14}. இந்த வார்த்தைகள் பரிசேயர்களின் பொறாமையையும் காழ்ப்புணர்வையும் சுயநலத்தையும் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. 

"நல்ல மரம்தான் கல்லடிபடும் "என்ற பழமொழிக்கேற்ப நல்ல சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் இவ்வுலகிற்கு கொடுத்த இயேசு விமர்சிக்கப்படுகிறார். நல்ல மரம் எவ்வளவு கல்லடிப்பட்டாலும் தன்னுடைய இயல்பை மாற்றாமல் தொடர்ந்து பழங்களை உணவாகக் கொடுத்து நல்லதை செய்கிறது. அதேபோல நம் ஆண்டவர் இயேசு பரிசேயர்களால் பல இடங்களில் விமர்சிக்கப்பட்டாலும் அவர்களோடு சண்டை சச்சரவு செய்யாது நுண்மதியோடு விலகி செல்கிறார். இது இயேசுவின் முதிர்ச்சி மனநிலையை சுட்டிக்காட்டுகிறது.

தன்னை எப்பொழுதும் விமர்சித்த பரிசேயர்களின் விமர்சனத்தை உள்வாங்காமல் அமைதியுடன் தனது பணியை தொடர்ந்து செய்கிறார். இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது இயேசுவின் பணி விமர்சனத்தைக் கடந்த பணி. தன்னை விமர்சித்த நபர்களுக்கு பதில் கொடுக்க முன் வராமல் தன்னுடைய பணியினை மட்டும் தொடர்ந்து செய்கிறார். இப்படிப்பட்ட மனநிலையில் தான் ஒவ்வொரு மறைப்பணியாளர்களும் தங்கள் வாழ்வில் கொண்டிருக்க அழைக்கப்படுகின்றனர். வாழும் இன்றைய காலகட்டத்திலும் குற்றம் காணக்கூடிய எத்தனையோ பரிசேயர்கள் வாழ்ந்துதான் வருகின்றனர். அவற்றை நாம் உள்வாங்காது நம்முடைய இலட்சியத்தை நோக்கி பயணிக்க அழைக்கப்படுகிறோம். 

நான் கடந்த மூன்று ஆண்டுகளில் திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு ஆற்றுப்படுத்தல் பணியை செய்தேன். அங்கிருந்து கைதிகளில் ஒருவர் எல்லா காவல் அதிகாரிகளாலும் சக கைதிகளாலும் பெரிதும் விமர்சிக்கபட்டவர். அவரை உற்சாகப்படுத்த யாருமே இல்லை. ஆனால் அவர் ஒரு திறமையானவர். மிகச்சிறந்த ஓவியர். ஒரு முறை என்னிடம் தான் வரைந்த ஓவியத்தை காட்டினார். அந்த ஓவியம் மிகவும் அழகாக இருந்தது. உடனே ஒரு நோட்டில் அவருக்கு தெரிந்த ஓவியங்களை வரைய உற்சாகப்படுத்தினேன்.மிகவும் அழகாக வரைந்தார். இறுதியில் சிறையை கண்காணித்த சிறை கண்காணிப்பு தலைவரிடம் ஊக்கப்பரிசு தனது ஓவியத்திற்காகப் பெற்றார். அப்பொழுது அவர் "யார் என்னை விமர்சித்தாலும் துணிவோடு என்னுடைய திறமைகளை வெளிக்காட்டுவேன் " எனக் கூறினார். 

இப்படி எத்தனையோ திறமை வாய்ந்த நபர்கள் விமர்சனத்தின் காரணமாகத் தங்களின் திறமைகளை வெளிக்கொணர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களிடம் குற்றம் கண்டு விமர்சிக்காமல், அவர்கள் வாழ்வில் சாதனையாளர்களாக மாற நாம் வழிகாட்டுவோம். இதைத்தான் நம் ஆண்டவர் இயேசுவும் செய்தார். விமர்சனத்தைக் கண்டு அஞ்சாதவராய் மனத்துணிவோடு தன்னுடைய இறையாட்சி பணியினை செய்தார். தன்னுடைய இலக்கு நோக்கிய பாதையில் வெற்றி பெற்றார். எனவே நாமும் நம்முடைய இலக்கு நோக்கி பயணிக்க விமர்சனங்களைக் கடந்து செல்வோம். முழு ஈடுபாட்டோடு உழைத்திடுவோம். அதற்குத் தேவையான அருளையும் மனப்பக்குவத்தையும் இறைவனிடம் வேண்டுவோம். 

இறைவேண்டல்

வல்லமையான இறைவா! விமர்சனங்களுக்கு அஞ்சாமல் மனத்துணிவோடு இந்த இலக்கை நோக்கி பயணிக்க உமது அருளை தரும். அதேபோல வளர்ந்து வரும் நபர்களை பரிசேயர்களைப் போல விமர்சிக்காமல் அவர்களை உற்சாகப்படுத்தும் பெருந்தன்மையை தாரும். ஆமென்.

அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு

சிவகங்கை மறைமாவட்டம்​

Add new comment

1 + 0 =