இறைவன் உறையும் ஆலயங்கள் ஆவோமா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


God's presence

திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு - I. 2.சாமு 7:1-5,8-12,14-16; II. தி.பா 89:1-2,3-4,26,28; III. உரோ:16:25-27; IV. லூக்கா 1:26-38

ஒரு ஏழைக் கிறிஸ்தவக்  குடும்பத்தைச் சார்ந்தவர்கள்  ஞாயிற்றுக் கிழமைகளில் கூட அவர்களுக்கு ஓய்வில்லை. வேலை செய்தால் தான் அன்று அவர்களுக்கு உணவு. உடல் நிலை சரியின்றி ஒரு நாள் வேலைக்குச் செல்லாவிட்டாலும் அவர் அனைவரும் அன்று பட்டினிதான். ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இக்குடும்பத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்குக் கூட போகாமல் அப்படி என்ன வேலை? கடவுள் பக்தி இல்லாததால்தான் இவர்கள் வருமையில் வாடுகின்றார்கள் என்று அக்குடும்பத்தார் காது படவே பேசினார்கள். ஒருநாள் அண்டை வீட்டார் ஒருவர் அவ்வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது.சென்ற அவருக்கு  பெரும் வியப்பு. வேலைக்குச் சென்றுவிட்டு களைப்பாக வந்த போதும் அவ்வீட்டார் ஒன்றிணைந்து ஜெபிப்பதைப் பார்த்தார்.

முடிவில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஒருவர் மற்றவரிடம் ஆசிர் பெற்றுச் சென்றனர். எதற்காக இப்பழக்கம் என்று கேட்ட போது எங்களுடைய குடும்ப வறுமையும் வேலைப்பளுவும் எங்களை கோவிலுக்குச் செல்ல அனுமதிக்காவிட்டாலும் கடவுள் எங்கள் வீட்டிலும் எங்கள் ஒவ்வொருவரிலும் உறைகிறார் என நாங்கள் நம்புகிறோம். எங்கள் உள்ளத்தில் உறையும் இறைவனை தினமும் வணங்கிவிட்டு வேலை செய்வதால்தான் எங்கள் பிரச்சினைகளையும் உங்களைப் போன்றவர்கள் எங்களைப் பற்றிக் கூறும் வசைமொழியையும் எங்களால் பொறுத்துக்கொள்ள முடிகிறது என்று சொன்னாரார்களாம்.

இன்றைய முதல் வாசகத்தில் தாவீது ஆண்டவருக்காக கோயில் கட்ட விரும்பிய நிகழ்வை வாசிக்கிறோம். கடவுள் இறைவாக்கினர் நாத்தான் வழியாக அவருடைய ஆசைக்கு ஆசி வழங்குவதையும் நாம் வாசிக்கிறோம். அத்தோடு தாவீதுக்கு இறைவன் செய்த எல்லா வல்ல செயல்களையும் அவர் நினைவு கூறும்படி எடுத்துக்கூறுகிறார். புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அரச குலத்தைச் சாராத ஒரு சாதாரண மனிதனை தன் உடன்படிக்கை மக்களுக்கு தலைவனாக்கியதல்லாமல் அவருடைய எதிரிகளையும் அழித்து புகழுறச் செய்தார் இறைவன். இவ்வாறு இறைவன் தகுதியற்றவர்களைத் தமக்கென அழைத்து அவர்களைத் தகுதியாக்கித் தன் அழைத்தலின் மேன்மையை உணரச்செய்கிறார். 

நற்செய்தி வாசகத்தில் தூதர் வழியாக மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை நாம் தியானிக்கிறோம். தாவீது கடவுளுக்காக ஆலயம் கட்ட ஆசித்தார் என்றால் இங்கு அன்னை மரியா கடவுளின் ஆலயமாகவே மாறும் நிகழ்வை நாம் காண்கிறோம். முதலில் இது எப்படி நிகழும் எனத் தயங்கினாலும் ஆவியின் வல்லமையால் தூண்டப்பட்டு இதோ ஆண்டவரின் அடிமை என்ற வார்த்தைகளைக் கூறி இறைவன் வாசம் செய்யும் இல்லிடமாக முதல் நற்கருணைப் பேழையாக மாறுகிறார் அன்னை மரியா.

இந்நிகழ்வுகள் நமக்குக் கூறும் செய்தி நாமும் கடவுள் உறையும் ஆலயங்களாக மாறவேண்டும். கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்குதல் நமது வாழ்வுக்கு மிக மிக அவசியம். ஆனால் அதைவிட கடவுளின் கோவிலாக நாமே திகழ்வதுதான் நமக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு அழைப்பு. எவ்வாறு கடவுள் உறையும் கோவிலாக நாம் திகழ்வது?

அன்புடன் வாழ்வது வழியாகவும்,பகைமை பாராட்டாமல் மன்னிப்பதன் வழியாகவும், தவறு செய்தாலும் மனம் மாறுவது வழியாகவும்,துன்பத்தில் இருப்பவர்க்கு ஆறுதலும் தேறுதலும் தருவதன் வழியாகவும், பிறருக்கு நம் சொல்லாலும் செயலாலும் நன்மையை மட்டுமே அளிக்கும் போதும் நாம் கடவுள் உறையும் ஆலயங்களாக ஏன் அதையும் தாண்டி கடவுளின் நடமாடும் உருவங்களாக மாறிவிடுகிறோம். 

இவற்றிற்காக நாம் வாய்ப்புக்களைத் தேடி அலையத் தேவையில்லை. செய்ய இயலாத அளவுக்கு அவை மிகக் கடினமாக காரியங்களும் இல்லை.நம்முடைய சுய நலத்தை சிறிதளவு குறைத்து நம் அன்றாட வாழ்வில் வரும் வாய்ப்புக்களைப் பயன்படுத்த  முயன்றாலே போதும். தான் சொகுச அரண்மனையில் வாழ்ந்தால் போதும் என்று மட்டும் நினைத்திருந்தால் தாவீதுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்காது. தான் சந்திக்கப் போகும் துன்பங்களை முன்னிறுத்தி இறைத்திட்டத்திற்குப் பணியாதிருந்திருந்தால் உலகத்தை மீட்கும் மெசியா பிறந்திருக்க மாட்டார்.எனவே நாமும் நம் சுயநலன்களை சற்று விலக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இறை ஆலயமாக வாழ நமக்குக் கிடைத்த அழைப்பே ஒரு நற்செய்தி. இரண்டாம் வாசகத்தில் கூறப்பட்டது போல இந்நற்செய்திக்கு ஏற்ப வாழ நம்மைத் தகுதிப்படுத்துவதில் கடவுள் வல்லவராய் இருக்கிறார். கிறிஸ்து பிறப்பு விழாவை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம் இவ்வழைப்பை ஏற்று இறைவன் உறையும் இல்லங்களாக வாழ நம்மைத் தகுதிப்படுத்துமாறு இறைவனிடம் அருள் வேண்டுவோம். நமது உள்ளக்குடிலில் இயேசு பிறக்கட்டும். 

இறைவேண்டல்

அன்பே உருவான இறைவா நீர் எங்களுள் உறைய ஆவலாய் இருக்கிறீர். நாங்களோ பல சமயங்களில் இதை உணராமல் எங்கள் சுயநலப்போக்கினால் அன்றாட வாழ்வில் உமது ஆலயமாக வாழும் வாய்ப்புக்களைத் தவற விடுகிறோம். எம்மை மன்னித்துத் தகுதிப்படுத்தும். உமது உயிருள்ள ஆலயங்களாக எம்மை மாற்றும். ஆமென்.

Add new comment

4 + 5 =