இறைவனை பிரதிபலிப்போமா! | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு


reflection

இன்றைய வாசகங்கள் (19.08.2020) - பொதுக்காலத்தின் 20 ஆம் புதன்  - I. எசே. 34:1-11; II. தி.பா. 23:1-3a,3b-4,5,6; III. மத். 20:1-16

ஒரு பள்ளியில் இருவர் பணிசெய்து வந்தனர். ஒருவர் மூன்று குழந்தைகளுக்குத் தாய். மற்றவர் தன் கணவருடன் வாழும் பெண்மணி. இருவருக்குமே குறைந்த சம்பளம் என்பதால், யாராவது பணமாகவோ பொருளாகவோ நன்கொடை கொடுத்தால் அதை இருவருக்கும் சமமாக பகிர்ந்து  கொடுப்பார் அந்தப் பள்ளியின் முதல்வர் . ஒருமுறை அந்தப் பள்ளியின் முதல்வர் அந்த மூன்று குழந்தைகள் கொண்ட ஏழை தாயிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு கேள்வியைக் கேட்டார்.

"அம்மா உங்கள் குடும்பம் பெரியது . உங்களுடைய தேவைகள் அதிகம். மற்றவருக்கோ தேவை குறைவு தான். ஆனாலும்  வருகின்ற பொருட்களை உங்களுக்கு சமமாக பிரித்துக் கொடுக்கும் போது எனக்கு இன்னொரு பங்கு சேர்த்து தாருங்கள் என்று நீங்கள் இதுவரை கேட்டதில்லை ஏன்? அதற்கு அந்தப் பெண் அம்மா இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்க்கின்றோம். என்னதான் என்னுடைய தேவை அதிகமாக இருந்தாலும் நான்  அதைச் சுட்டிக்காட்டி உங்களிடம் இன்னொரு பங்கை கேட்க முடியாது. அவ்வாறு கேட்டால் அதனால் உங்களுக்கும் எங்களுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படும். மேலும் சமமாக கொடுப்பது உங்களுடைய தாராள குணம். அதை நான் குறுக்கிட நான் விரும்பவில்லை. மேலும் என்னுடன் பணிபுரியும் பணியாளருக்கு நான் பொறாமைக்காரி என்ற எண்ணத்தையும் தர விரும்பவில்லை" என்றார். இதைக் கேட்ட அந்த பள்ளி முதல்வர் உண்மையிலேயே வியந்து அந்த பெண்மணியை பாராட்டினார்.

இன்றைய நற்செய்தி வாசகம் கடவுளுடைய பாரபட்சமில்லா அன்பையும், ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய தேவைகளை உணர்ந்து அளிப்பவர் என்பதையும், அதை குறித்து நாம் பொறாமைப்படக்கூடாது என்பதையும் எடுத்துக் கூறுகின்ற வாசகமாக அமைகிறது. இன்றைய நற்செய்தியில் நாம் காணும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடவுளுடைய இரக்கம் மிகுந்த மனதை பிரதிபலிக்க கூடியவராக இருக்கிறார். திராட்சைத் தோட்ட உரிமையாளர் முதலில் பணிக்கு வேலை ஆட்களை அழைத்தபோது அவர்களுக்கு உரிய சரியான ஊதியத்தை முடிவு செய்து அவர்களை வேலைக்கு அமர்த்துகிறார். மீண்டுமாக அவ்வழியே அவர் செல்ல நேர்ந்தபோது யாராவது நமக்கு வேலை தர மாட்டார்களா என்று ஏக்கத்தோடு அங்கு நின்று கொண்டிருக்கின்ற பணியாளர்களையும் பார்க்கின்றார்.

அவர்கள் மீது பரிவு கொண்டு அவர்களுக்கும் தன்னுடைய தோட்டத்தில் வேலை  தருகிறார். வேலை முடிந்தவுடன் அனைவருக்கும் சமமான ஊதியத்தை அவர் தருகிறார். இதை கண்ட ஒரு சில பணியாளர்கள் நாங்கள் காலையிலேயே வேலைக்கு வந்தோமே தாமதமாக வந்தவர்களுக்கும் நீர் எங்களுக்கு சமமான ஊதியத்தை தருகிறீரே? இது ஞாயமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு அந்த உரிமையாளர், "நான் அவர்களுக்கு உங்களுக்கு சமமான ஊதியத்தை வழங்கினாலும் உங்களுக்கு நான் ஏற்கனவே முடிவு செய்த ஊதியத்தை குறைக்கவில்லை. சரியாகத்தான் தருகிறேன். இது என்னுடைய சொத்து. என்னுடைய பணம். என் விருப்பம் போல் கொடுக்க எனக்கு உரிமை இல்லையா? என்ற ஒரு கேள்வியை முன் வைக்கின்றார்.

ஆம் பல சமயங்களில் நாமும் அதிகாலையிலே வந்த அந்த பணியாளர்களை போல சிந்திக்கின்றோம். ஆனால் நம்முடைய சிந்தனை வேறு கடவுளுடைய சிந்தனை வேறு. ஒருவரை நாம் காண்கின்ற விதமமும் புரிந்து கொள்ளுகின்ற விதம் வேறு . அதே மனிதனை, கடவுள் காணும் விதமும் புரிந்து கொள்ளுகின்ற விதமும் வேறு. ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யும்போது அதை தடுக்கக்கூடிய எண்ணம் பல சமயங்களில் நம்முள் எழுவதுண்டு. இத்தகைய எண்ணம் நம்மை பொறாமை பிடித்தவர்களாக மாற்றக்கூடும். ஆனால் கடவுளோ இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவருக்கு நாம் அனைவரும் சமமே. நம் அனைவரையும் ஒன்று போல் அன்பு செய்கிறார். நம் அனைவருக்கும் அனைத்தையும் ஒன்று போல் வழங்குகிறார். அவர் வெயிலையும் மழையையும் நல்லோர் மீதும் தீயோர் மீதும் பாரபட்சமின்றி பொழியக் கூடியவர் என்று விவிலியத்தில் வாசிக்கின்றோம். 

இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியல் இறைவாக்கினர் மூலமாக ஒரு நல்ல ஆயனுக்குரிய பண்பை கடவுள் எடுத்துக் கூறுகிறார். ஒரு நல்ல ஆயன் தன் ஆடுகளின் எல்லா தேவையையும் நிறைவேற்றுபவர். காணாமல் போன ஆட்டைத்தேடி கண்டுபிடிப்பவர்.  ஆனால் இஸ்ரயேல் குலத்தலைவர்கள் உண்மையான சிறந்த ஆயர்களாக இல்லாத நிலையைக் கண்டு கடவுள் வருந்துகிறார்.

இன்றைய சமூகத்திலும் வேலியே பயிரை மேய்ந்தார் போல நாட்டு மக்களின் நிலையை கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாத நாட்டு தலைவர்களை தான் நாம் காண்கிறோம். எத்தனை பாகுபாடுகளை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொண்டுதான் இருக்கிறோம். எனவே இன்றைய வாசகங்களை நாம் தியானிக்கும் போது நம்முடைய நாட்டு தலைவர்களுக்கும் சிறப்பாக ஜெபிப்போம். நாமும் இணையில்லா இரக்கத்தை பாரபட்சமின்றி அனைவருக்கும் பொழிகின்ற கடவுளுடைய தாராள குணத்தை பிரதிபலிக்கும் மக்களாக வாழ்வோம் அதற்காக இறைவேண்டல் செய்வோம்.

இறைவேண்டல் 

அனைவரையும் சமமாக அன்பு செய்யும் இறைவனே! எங்களுக்கும் உம்மைப் போன்ற பாரபட்சமில்லாத அன்பைப் பொழிகின்ற மனதை தாரும். எங்களால் பிறருக்கு உதவி செய்ய இயலாவிட்டாலும் உதவி செய்கிறவரை பார்த்து பொறாமைப் படாமல் இருக்கக் கூடிய  நல்ல மனதைத் தாரும்.மேலும் எங்கள் நாட்டை ஆளும் தலைவர்கள் சிறந்த ஆயர்களாக இருந்து மக்களை வாழ்வு பாதைக்கு இட்டுச் செல்ல வரம் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 1 =