Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறைவனே வழிகாட்டும் விண்மீன்! | குழந்தை இயேசு பாபு |Sunday Reflection | Epiphany
திருக்காட்சிப் பெருவிழா - I. எசா: 60:1-6; II. திபா: 72:1-2.7-8.10-11.12-13; III. எபே: 3:2-3,5-6; IV. மத்: 2:1-12
இன்று திருஅவையோடு இணைந்து திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். யூதர்களின் அரசராகப் பிறந்த இயேசுவைக் கண்டு வணங்க கீழை நாடுகளிலிருந்து பரிசுப்பொருட்களோடு நெடும்பயணம் மேற்கொண்ட மூன்று ஞானிகளின் பெருவிழா இன்று. இவ்விழா நமக்குக் கூறும் செய்தி என்ன? இணைந்து சிந்திப்போம்.
முதலாவதாக கீழை நாடுகளிலிருந்து வந்த ஞானிகள் என்று சொல்லப்படும் போது, யூதர்கள் அல்லாதவர்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. யூதர் அல்லாதவர்கள் யூதர்களின் அரசரைக் காண நெடும்பயணம் மேற்கொள்ளக் காரணம் என்ன? அது உண்மையான இறை அனுபவத்திற்கான ஒரு தேடல். இஸ்ரயேலின் கடவுள் தம்மைத் தேடிவரும் பிற இனத்தவரையும் ஏற்றுக்கொள்வார் என்று தங்களுடைய ஞானத்தால் அந்த ஞானிகள் உய்த்துணர்ந்திருந்தார்கள். தேடிவந்தார்கள். கண்டடைந்தார்கள். ஆசி பெற்று மகிழ்வுடன் சென்றார்கள். நம் கடவுளைத் தேடிவரும் பிறசமயத்தவரைப் பற்றி நம்முடைய சிந்தனைகளைச் சீர் செய்ய ஞானிகளின் வருகை நம்மைத் தூண்டுவதை நாம் உணர இன்று அழைக்கப்பட்டுள்ளோம். அத்தோடு கடவுளை நம் வாழ்வில் கண்டடைய நாம் கொண்டுள்ள தாகம் ஆழமானதா என்பதைப் பற்றி சிந்திக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். நம்முடைய தேடல் எதைச் சார்ந்தது என்பதை ஆராய்ந்து கடவுளை நோக்கி அதைத் திருப்ப நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இரண்டாவதாக வழிகாட்டும் விண்மீன் இப்பெருவிழாவின் சிறப்பம்சம். தன்னைத் தேடிவருபவரை வழிநடத்துபவர் இறைவனே என்ற மாபெரும் உண்மை இதில் புலப்படுகிறது. அதாவது இறைவனை அடைய நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் இறைவனே துணைநிற்கிறார். கடவுளை அன்பு செய்யவும் ,அவரைச் சென்றடையவும் நம்முடைய சொந்த விருப்பமும் முயற்சியும் மட்டும் போதாது. மாறாக இறைவனுடைய வழிகாட்டுதலும் உடனிருப்பும் மிக அவசியம் என்பதை விண்மீன் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. மேலும் இறைவனின் வழிகாட்டுதல் நம்மை சரியான இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ளவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். பல சமயங்களில் நாம் வழிதவறும் போது கடவுளின் வழிகாட்டுதலை நம்மால் உணர இயலாமல் போகலாம்.மெசியாவை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள ஞானிகள் ஏரோதை அணுகிய போது விண்மீன் மறைந்ததையும், மீண்டுமாக தங்கள் பயணத்தைத் தொடர்ந்த போது அதே விண்மீன் அவர்களுக்கு வழிகாட்டுவதையும் நாம் காண்கிறோம். கடவுளின் வழிகாட்டுதல் ஒருபோதும் நம்மை விட்டு அகலாது என்ற ஆழமான உண்மையை இந்நிகழ்வு நமக்கு விளக்குகிறது.
மூன்றாவதாக மெசயாவைக் கண்டு வணங்கி, அவருக்கு காணிக்கைகள் செலுத்தி மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடரும் பொழுதும் அவர்களைக் கடவுள் வேறுவழியில் வழிநடத்தி ஏரோதின் தீய திட்டத்திலிருந்து அவர்களையும், இயேசுவையும் பாதுகாத்தார் என்பதையும் நாம் வாசிக்கிறோம். சோதனைகளுக்கும், இடர்களுக்கும் மத்தியிலும் இறைவனின் குரலை நம்மால் அறிய முடிகிறதா என நம்மையே ஆய்வு செய்யவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு அவருடைய குரலைக் கேட்கும் போது நமக்கு அவருடைய பாதுகாப்பு நிச்சயம் கிடைக்கும் என நம்பிக்கை கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இறைவனின் திட்டங்களையும் வழிமுறைகளையும் யாராலும் உய்த்துணர இயலாது. ஆனால் அவரை நம்பி, அவரை நம் வாழ்வின் உயரிய இலக்காகக் கருதி, அனைத்திலும் அவரைக் காணவேண்டும் என்ற தேடல் நம்மிடம் ஆழமாக இருக்கும் போது, இறைவனே நமக்கு வழிகாட்டும் விண்மீனாய் இருந்து வழிகாட்டுவார் என்பது தான் இத்திருக்காட்சிப் பெருவிழா நமக்கு வழங்கும் செய்தி. இறைவனின் வழிகாட்டுதலில் நம்மையே அர்ப்பணித்து, நம்பிக்கையுடன் பயணிக்கும் போது ஞானிகள் மெசியாவைக் கண்டடைந்தது போல நாமும் கண்டடைவோம். நம் வாழ்வின் எல்லா நாளுமே திருக்காட்சிப் பெருவிழாகவே அமையும். எனவே இன்றைய நாளில் ஞானிகளைப் போல கடவுளைத் தேடும் உள்ளமும், அதற்காக முயற்சி செய்யும் குணமும், இறைவனின் வழிகாட்டுதலை நம்பி பயணத்தைத் தொடரும் துணிச்சலும் கடவுளிடத்தில் வேண்டுவோம். நம் வாழ்வில் இறைவனே வழிகாட்டும் விண்மீனாய் இருந்து வழிநடத்துவார்.
இறைவேண்டல்
வழிகாட்டும் விண்மீனே இறைவா! உம்மை அடையாமல் எங்கள் வாழ்வு பொருள்பெறாது என்பதை நாங்கள் அறிவோம். உம்மை எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நாங்கள் கண்டுணர வேண்டும் என்ற ஆவலை எங்களுக்குத் தாரும். எங்கள் சொந்த முயற்சிளை மட்டுமே நம்பாமல் உம்முடைய வழிகாட்டுதலை முழுமையாக நம்பி வாழ்வில் தொடர்ந்து பயணிக்க அருள் தாரும். ஆமென்.
Add new comment