இறைவனின் குரலைக் கேட்போமா! | குழந்தை இயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு - I. 1சாமு: 3:3-10,19; II. திபா: 40:2,3,6-7,7-8,9; III. 1கொரி:6:13-15,17-20; IV. யோவான் 1:35-42

அலைப்பேசியில் காதொலிக் கருவியைப்பொருத்திக் கொண்டு நீண்ட நேரமாக தனிமையில் அமர்ந்த வண்ணம் பாடல் கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு இளம்பெண். தன்னுடைய தாய் வீட்டு வேலைகளையெல்லாம் செய்து கொண்டிருந்ததைக் கண்டும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அக்கறை கொஞ்சம் கூட இல்லை. திடீரென தாயானவள் தனக்கு ஏதோ நேர்வதைப் போல உணர்ந்தார். வீட்டில் அந்த இளம்பெண்ணைத் தவிர யாருமில்லை. தாயானவள் தன் மகளைப் பல முறை கூப்பிட்டும் இசையை ரசித்துக் கொண்டு தன்னிலை மறந்த நிலையில் இருந்ததால் தன் தாயின் குரலைக் கேட்க இயலாமல் போனது. இறுதியில் தாயின் நிலையும் கவலைக்கிடமானது.

இன்றைய வாசகங்கள் இறைவனின் குரலைக் கேட்க நம்மை அழைக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலை இறைவன் பெயர் சொல்லி அழைத்த நிகழ்வானது கொடுக்கப்பட்டுள்ளது. சிறுவன் சாமுவேல் உறங்கும்போது கூட தன் தலைவரான குரு ஏலியின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததால் தான் தன்னுடைய பெயரைக் கேட்டவுடனேயே எழுந்து தன் தலைவரிடம் ஓடினார். குருவின் வழிகாட்டுதலின் கீழ் "ஆண்டவரே பேசும். உம் அடியவன் கேட்கிறேன்" என இறைவனிடம் அடிபணிந்தார் சாமுவேல்.

அன்புக்குரியவர்களே  இறைவன் எப்போதும் நம்முடன் உரையாடிக்கொண்டே இருக்கிறார். இறைவேண்டல் வழியாக, இறைவார்த்தை வழியாக,இயற்கை வழியாக,உறவுகள் மற்றும் நண்பர்கள் வழியாக, நம்முடைய மனச்சான்று வழியாக, நம்முடைய அன்றாட நிகழ்வுகள் வழியாக அவர் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதைக் கேட்க நமதுள்ளம் தயாராக இருக்கிறதா? பலவேளைகளில் உலகக் காரியங்கள்,கேளிக்கைகள், அசட்டைத்தனம், மெத்தனப்போக்கு போன்றவற்றால்  தன்னிலை மறந்த மனநிலையில் வாழும் நாம் இறைவனின் குரலைக் கேட்க மறந்து விடுகிறோம். அவர் குரல் நம் உள்ளத்தில் ஒலிக்கின்ற உணர்வே இல்லாமல் இருந்துவிடுகிறோம். இத்தகைய மனநிலையை அகற்றி சாமுவேலைப் போல எப்போதும் அவர் குரலைக் கேட்கத் தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும்.

சாமுவேலைப் போலவே இன்றைய நற்செய்தியில் நாம் காணும் திருமுழுக்கு யோவானின் சீடர்கள் மெசியாவைக் கண்டறியும் ஆர்வத்தில் அவர் தங்குமிடப்பற்றி வினாவினார்கள். "வந்து பாருங்கள்" என அவர் கூறினார். அதைக் கேட்ட அவர்கள் சென்று பார்த்தார்கள். மெசியாவைக் கண்டார்கள். நம்பினார்கள். கடவுளின் குரலைக் கேட்பதால் நாம் ஒருபோதும் வீழ்ந்து போவதில்லை. வாழ்வு பெறுகிறோம்.சவால்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் திடமுடன் வாழ வழிவகுப்பது கடவுளின் வார்த்தைகள்.

அப்படிப்பட்ட கடவுளின் வார்த்தைகளைக் கேட்க நம் உள்ளமும் உடலும் தூய்மையானதாக இருக்க வேண்டும். இதையே நாம் அனைவரும் தூய ஆவியின் ஆலயங்கள், எனவே தேவையற்றவைகளுக்கு நம் வாழ்வில் இடமளிக்கக் கூடாது என்ற கருத்தின் மூலம் இரண்டாம் வாசகம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

இன்றைய சமூக சூழலில் இறைவனின் குரல் இயற்கை சீற்றங்கள்,பருவ மாறுபாடுகள், நீதிக்கான போராட்டங்கள் மூலமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பருவம் மாறி பொழிகின்ற மழை, புயல் தாக்கங்கள், வேளான் சட்டத்திற்கெதிரான விவசாயிகள் போராட்டம், உலகத்தையே உலுக்கும் கொரோனா போன்ற தொற்றுநோய்கள் இவை அனைத்தின் மூலமும் கடவுள் நம்மிடம் என்ன சொல்லவருகிறார் என்பதை மனம் திறந்து கேட்கமுயற்சிப்போம். இவற்றால் எனக்கு எந்த பாதிப்புமில்லை என உறங்கிக் கிடந்தால்,கதையில் நாம் கண்ட இளம்பெண் தன் தாயின் குரலைக் கேட்காமல் அவரைக் காப்பாற்ற இயலாமல் போனதைப் போல, நாமும் வாழ்வை இழக்க நேரிடும். எனவே இக்கருத்துக்களை மனதில் கொண்டு இறைவனின் குரலை உள்ளத்தால் உணரும் வரம் கேட்போம்.

இறைவேண்டல் 

எங்களோடு உரையாடும் இறைவா! உம் குரலைக் கேட்கும் வண்ணம் எம் இதயத்தின் காதுகளைத் திறந்தருளும்.உலக உறக்க நிலையிலிருந்து எம்மை எழுப்பி உமது வார்த்தைகளுக்கு அடிபணிந்து, உம்மை எம் வாழ்வில் கண்டடைய வரம் தாரும். ஆமென்.

Add new comment

9 + 3 =