இறையன்பும் பிறரன்பும்  ஒன்றா! | | குழந்தைஇயேசு பாபு


God-Human

பொதுக்காலத்தின் 30 ஆம் ஞாயிறு - I. விப: 22:21-27; II. திபா 18:1-2.2-3.46,50; III. 1 தெச: 1:5-10; IV. மத்: 22:34-40

பண்டைய கிரேக்க தத்துவவாதிகள் நான்கு விதமான அன்பை அடையாளம் கண்டனர்: அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில் – Storge), நட்பு (கிரேக்கத்தில் – Philia) காதல் (கிரேக்கத்தில் – Eros) மற்றும் தெய்வீக அன்பு (கிரேக்கத்தில் – Agape) என்பனவாகும். இனக்கவர்ச்சி, தற்காதல், நம்பிக்கை  என நவீன எழுத்தாளர்கள் அன்பின் வகைகளை மேலும் வேறுபடுத்தி காட்டியுள்ளனர். ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அன்பு தான் அவனை இயக்குகின்றது. இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் அன்பினால் தான் வளர்கின்றனர். மனித இயல்பு என்பது அன்பு செய்து வாழ்வது. நாம் வாழுகின்ற  காலங்களில் அந்த அன்பை முழுமையாக சுவைக்க முடியாமல் இருக்கும் பொழுது, நம்மில் பலர் தவறான பாதைகளுக்கு செல்ல நேரிடுகிறது. யாருக்கு  முழுமையான அன்பு கிடைக்கின்றதோ அவர்கள் நல்ல ஒரு மனிதராக  வாழ முடியும். முழுமையான அன்பு கிடைக்காத மனிதர்களுக்கு, மன அழுத்தங்களும் பல்வேறு உளவியல் பிரச்சனைகளும் ஒரு விதமான ஏமாற்ற உணர்வும் ஏற்படுகின்றது.

இந்த சமூகத்தில் எத்தனையோ மனிதர்கள் சட்டத்திற்கு முன்பாக குற்றவாளியாக்கப்பட்டு சிறையிலேயே தங்கள் வாழ்வை தொலைத்து வருகின்றனர். அவர்கள் அந்த நிலைக்கு சென்றதற்கு காரணம் போதிய அன்பு கிடைக்காமையே ஆகும். 

நான் இறையியல் படித்துக்கொண்டிருந்த பொழுது மூன்றாண்டுகள்  'இந்திய சிறைப்பணி' என்ற அமைப்பின் வழியாக திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு  களப்பணி செய்ய சென்றிருந்தேன். சிறையில் இருந்த இல்லவாசிகளுக்கு (சிறைவாசிகள்)  ஆற்றுப்படுத்துதல் பணி செய்தேன். அவ்வாறு செய்கின்ற   பொழுது  இல்லவாசிகளில் பலர் என்னோடு உரையாடும் பொழுது "நான் இத்தகைய  நிலைக்கு வருவதற்கு காரணம் போதிய அன்பு கிடைக்காமையே" என்று  மனக்கவலையோடு பகிர்ந்துக் கொண்டனர். இப்படிப்பட்ட ஏக்கங்களோடு  எண்ணற்ற மக்கள் நாம் வாழும் இந்த சமூகத்தில் வாழ்கின்றனர். அவர்களுக்கு நிறைவான அன்பை வழங்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் நம்மை அன்பு செய்வதைப் போலவும் கடவுளை அன்பு செய்வதை போலவும் பிறரையும் அன்பு செய்ய வேண்டும் என்ற ஆழமான கருத்தை இன்றைய வாசகங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் தனது அன்பை வெளிப்படுத்துபவராக  இருக்கின்றார். "அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப் படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன். மேலும் என் சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன்" என்று கடவுள் கூறியது அவரின் அன்பை வெளிப்படுத்துகிறது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட புறந்தள்ளப்பட்ட மக்கள் சார்பாக கடவுள் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. கடவுள் அனைவரையும் அன்பு செய்பவராக இருக்கின்றார். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். கடவுள் அவர்களின்  துன்பங்களையும் கண்ணீரையும் அறிந்து மோசேயின் வழியாக அவர்களுக்கு விடுதலையை கொடுத்தார். அடிமையாக இருந்து விடுதலை பெற்ற இஸ்ரயேல் மக்கள்  அன்னியனுக்கு தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும் என கடவுள் எச்சரிக்கிறார். மேலும் விதவை மற்றும் அனாதைகளுக்கும் தீங்கிழைக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கிறார். இது கடவுள் அவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துகின்றது. ஏனெனில் கடவுளின் அன்பு ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல; மாறாக மற்ற அனைவருக்கும் பொதுவானது. ஏனெனில் மனிதர்கள் அனைவரும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவரின் பிள்ளைகள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தெசலோனிக்க மக்களை தூய ஆவியின் துணையால் வாழ்ந்து காட்டும்படி அறிவுறுத்துகிறார். மேலும் தூய ஆவியின் துணையோடு நற்செய்தியை நம்பி அதன்படி வாழ்ந்து நன்றி பலி செலுத்தவும் திருத்தூதர் பவுல் அழைப்பு விடுத்துள்ளார். அதன் வழியாக இரண்டாம் வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்து இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார். இயேசுவின்  நற்செய்தியை அறிவிப்பது தூய ஆவியால் துணையால் மட்டுமே அறிவிக்க வேண்டும் எனவும் வேறு எந்த சுயநல காரணங்களுக்காக நற்செய்தியை அறிவிக்க கூடாது என்ற ஆழமான கருத்தையும் திருத்தூதர் பவுல் சுட்டிக்காட்டியுள்ளார். அனைவரும் தூய ஆவியின் துணையால் நற்செய்தியை நம்பி மீட்புப் பெற வேண்டும் என்பதுதான் நம்மைப் படைத்த கடவுளின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இத்தகைய போதனைகளைத் தான் நம் ஆண்டவர் இயேசுவும் மூன்றாண்டு இறையாட்சி பணிகளில் போதித்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவை சோதிக்கும் நோக்கத்துடன் பரிசேயர்கள் "முதன்மையான கட்டளை எது?"  என கேட்டனர்.  பரிசேயர்களும் சதுசேயர்களும்  தலைமைக் குருக்களும் கடவுளின் கட்டளைகளை அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமென்று கடைபிடித்தனர். கடவுளின் கட்டளைகளை கடைபிடிப்பது மட்டும்தான் மீட்புக்கான வழி என்று நினைத்தனர். ஆனால் அவர்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்தது   மற்ற மனிதர்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காகவே ஆகும். கடவுளின் கட்டளையை கடைபிடித்தால் கடவுளை அன்பு செய்யலாம்  இந்த குறுகிய வட்டத்தில் நினைத்தனர்.  ஆனால் அவர்கள் மனிதத்தை பற்றி கவலைப்படாமல் இருந்தார்கள். இயேசு கடவுளை அன்பு செய்வது  என்பது கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதைத் தாண்டி, கடவுளை முழுமையான உள்ளத்தோடு உண்மையான அன்பு செய்ய வேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தி வழியாக அழைப்பு விடுத்துள்ளார். நாம் முழுமையாக கடவுளை அன்பு செய்ய வேண்டும் என்றால் நம்மோடு வாழக்கூடிய அயலாரையும்  அன்பு செய்ய வேண்டும் என்ற ஆழமான கருத்தையும் இன்றைய நற்செய்தி வழியாக ஆண்டவர் இயேசு சுட்டிக்காட்டியுள்ளார்.  

இன்றைய நற்செய்தியில்  ஆண்டவர் இயேசு இறையன்பு மற்றும்  பிறரன்பு பற்றிய தெளிவான விளக்கத்தைக் கூறியுள்ளார்.   பரிசேயர்கள் திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? என கேட்டதற்கு `உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.' இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. `உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை' என இயேசு கூறியுள்ளார்.  எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் கடவுளை மட்டும் அன்பு செய்தால் போதும் என்றும் ஆலய வழிபாடுகளில் பங்கேற்றல் மட்டும் போதும் என்றும் நினைத்து வாழ்ந்தால் மட்டும் மீட்பை பெற்றுக் கொள்ள முடியாது. மாறாக, நம்முடைய அன்றாட வாழ்வில் நம்மோடு  வாழக்கூடிய மனிதர்களையும்  படைப்புகளையும் முழுமையாக அன்பு செய்யும் பொழுது நிச்சயமாக கடவுளை அன்பு செய்து மீட்பின் கனியை சுவைக்க முடியும். இறையன்பு மற்றும் பிறரன்பு நம்முடைய இரு கண்களாக இருக்க நாம் தூய ஆவியின் வழியாக சுய அன்பை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு இடைவிடாத இறைவேண்டல் செய்ய வேண்டும்.  தூய உள்ளத்தோடு வாழவேண்டும். மனிதநேய சிந்தனையோடு திகழ வேண்டும். நல்ல அறநெறி மதிப்பீடுகளோடு வாழ வேண்டும் . அவ்வாறு வாழுகின்ற பொழுது நிச்சயமாக நம் வாழ்விலே மீட்பின் கனியைச் சுவைக்க  முடியும்.   எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் அன்பு செய்யும் மக்களாக வாழ தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் 
அன்புள்ள இறைவா! நாங்கள் உமது அன்பை நிறைவாகப் பெற்றுக் கொள்ள பல வாய்ப்புகளை கொடுத்துள்ளீர்கள். அதற்காக நன்றி செலுத்துகிறோம். பிறரை அன்பு செய்வதன் வழியாகவும் மனித நேயப்பணிகளை செய்வதன் வழியாகவும்  உம்மை   அன்பு செய்து, நற்செய்தி பணியாக அவற்றை செய்ய தேவையான தூய ஆவியின் வழிகாட்டுதலையும் அருளையும் தாரும். ஆமென்.

Add new comment

12 + 4 =