Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஆவியினால் இறைவனை அறிவோமா?
இன்றைய வாசகங்கள் (01.09.2020) - பொதுக்காலத்தின் 22 ஆம் செவ்வாய் - 1கொரி. 2:10-16; II. திபா. 145:8-9,0-11,12-13,13-14; III. லூக். 4:31-37
ஒரு அருட்சகோதரி என்னிடம் பகிர்ந்து கொண்ட நிகழ்வு. ஒரு முறை மற்றொரு அருட்சகோதரியுடன் வெளியூருக்குப் பயணம் செய்ய நேர்ந்தது. அப்போது இருவரும் உரையாடிக்கொண்டே சென்று கொண்டிருந்த போது மற்றொரு அருட்சகோதரி பேச ஆரம்பித்தார். "நீங்கள் இந்த குழுமத்திற்கு வருவதற்கு முன்பே பலர் உங்களைப்பற்றி பல எதிர்மறையான கருத்துக்களைக் கூறினர். ஒரு கட்டத்தில் நானும் அதை நம்ப ஆரம்பித்து விட்டேன். நீங்கள் வந்த பின்னரும் அதே கண்ணோட்டத்துடன் தான் உங்களைப் பார்த்தேன். உங்களை அனுகுவதற்கு இத்தகைய எண்ணங்கள் தடையாய் இருந்தன. ஆனால் நாளடைவில் உங்களுடன் பழக ஆரம்பித்த பின்பு தான் தெரிந்தது நீங்கள் மற்றவர்கள் கூறியது போலில்லை. இது எனக்கு ஒரு வாழ்க்கைபாடமாக அமைந்தது. யாரையும் பிறர் சொல்வதை வைத்துக்கொண்டு நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ நாம் தீர்பிடக்கூடாது. நம் சொந்த அனுபவத்தை வைத்து தான் மதிப்பிட வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்" என்று பகிர்ந்து கொண்டாராம். அது முதல் அவர்களிடையே உறவு வளர்ந்ததாக அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
பல சமயங்களில் நம்முடைய மனநிலையும் இவ்வாறாகத்தான் உள்ளது. ஒருவரை நல்லவர் என்று உலகம் பாராட்டினால் நாமும் பாராட்டுகிறோம். தீயவர் என்று குறைகூறினால் நாமும் சேர்ந்துகொள்கிறோம். நம் சொந்த அனுபவித்திலிருந்து ஒருவரை மதிப்பிட மறந்து போகிறோம். இதை மனித அனுபவங்களில் மட்டுமல்ல கடவுள் அனுபவத்திலும் பின்பற்றுகிறோம். இயேசு யார் என்று கேட்டால், நல்லவர். வல்லவர். கடவுளின் மகன், நம்மைப் அன்பு செய்கிறவர் என்று நமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் ஒப்பித்து விடுவோம். ஏனென்றால் சிறு வயது முதலே அவ்வாறு நமக்கு சொல்லிக்கொடுத்து நம்மை வளர்த்திருக்கிறார்கள். ஆனால் நம்முடைய சொந்த அனுபவத்திலிருந்து இயேசு யார் என்று கேட்டுப்பார்த்தால் உண்மையில் நம்மால் விளக்க முடியாது என்பது தான் உண்மை. உலக அறிவிலிருந்து நம்மால் பேசுப்படும் இறைவன் ஆன்மீக அனுபவத்தில் மாறுபட்டவராகவே இருக்கிறார். அந்த ஆன்மீக இறைவனை அறிய தூய ஆவியாரின் ஆற்றல் மிக அவசியமாகிறது.
இன்றைய முதல் வாசகத்தின் மூலம் புனித பவுலடியார் தூய ஆவியாரின் ஆற்றலால் மட்டுமே ஒருவர் கடவுளைக் கண்டுணர முடியும் என்பதைக் கூறுகிறார். மேலும் உலக ஞானத்தால் எவரும் ஆவிக்குரியவற்றை பேசஇயலாது, வெறும் மனித இயல்போடு ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் உறுதியாகக் கூறுவதோடு, தூய ஆவியாரின் வல்லமையாலேயே இது சாத்தியமாகும் என்பதையும் கூறுகிறார்.
நற்செய்தியில் இயேசு தன்னை இறைமகன் என்று கூறிய தீய ஆவியை வாயடைக்கச் செய்கிறார் என வாசிக்கிறோம். இயேசு ஏன் அவ்வாறு செய்தார்? இன்னும் பேச விட்டிருந்நதால் பேய் கூட இவர் யாரென்று என்று சொல்வதை நம்பி இயேசுவை பலர் நம்பி இருக்கலாம். ஆனால் இயேசுவுக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை தேவையில்லை. மக்கள் தங்களுடைய சொந்த அனுபவத்தின் மூலம் அவரை அறிந்து அவரை நம்புவதையே விரும்பினார். எனவே தான் இயேசு சீடர்களிடம் மக்கள் தன்னை யாரென்று சொல்கிறார்கள் என்ற கேள்வியோடு நிறுத்தவில்லை. நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள் என்று தன் சீடர்களின் ஆன்ம அனுபவத்தை சோதித்தார். இறைமகன் என்று பதிலளித்த பேதுருவை பாராட்டி இந்த அனுபவம் விண்ணகத்திலிருந்து அருளப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இயேசு செய்த எல்லா வல்ல செயல்களும் அவரை தன் சொந்த அனுபவத்தால் அறிந்து நம்பிக்கை கொண்டோருக்கே சென்றடைந்தது.
நம் அன்றாட வாழ்வில் ஆவிக்குரியவர்களாய் வாழ்ந்து இறைவனை உணர்கிறோமா? அல்லது கற்றுக்கொடுக்கப்பட்ட ஆன்மீகத்திலேயே இன்னும் இறைவனை அறியாமல் வாழ்கிறோமா? சிந்திப்போம்.
இறைவேண்டல்
ஆன்மீக ஆனுபவமே இறைவா! பல வேளைகளில் உலக அறிவினால் உம்மை அறிந்து கொள்ளலாம் என்ற நினைவில் எங்களுக்குள் செயலாற்றும் தூய ஆவியானவரை மறந்து விடுகிறோம். அந்த தூய ஆவியாராலேயே உம்மை முழுவதுமாக நாங்கள் உணர முடியும் என்பதை இன்று நாங்கள் உணர்கிறோம்.அந்த ஆவியாரின் ஆற்றலால் உம்மை உள்ளத்தால் உணரவும், உலகிற்கு பறைசாற்றவும் உம் அருளை தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment