ஆதாயம் தேடுபவர்களா நாம்? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


புனிதவாரம் புதன்; I: எசாயா 50:4-9; II: தி.பா 69: 7-9. 20-21. 30,32-33; III :மத் 26: 14-25

வீட்டிலே விளையாடிக்கொண்டிருந்த தன் மகனிடம் அம்மா கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வரச் சொல்லி கையில் பணம் கொடுக்கிறார். பையனோ விளையாட்டு ஆர்வத்தில் போக மாட்டேன் என அடம் பிடிக்கிறான். உடனே அந்தத் தாய் அவன் கையில் மீண்டும் ஐந்து ரூபாய் கொடுத்து உனக்கு ஏதாவது வாங்கிக் கொள் எனக் கூறினார்.உடனே சிறு புன்னகையுடன் அந்தப் பையன் கடைக்குச் சென்றான். கடைக்கு அனுப்ப காசு தர வேண்டியிருக்கிறது என்று எண்ணிக்கொண்டே அந்தத்தாய் தன் வேலைகளைத் தொடர்ந்தார். 

எல்லாவற்றிலும் ஆதாயம் தேடும் உலகில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் கைமாறு எதிர்பார்க்கும் மனிதர்களாய் நாம் மாறிக்கொண்டிருக்கிறோம். அரசு அலுவலகங்களில் நமது தேவைக்காக அதிகாரிகளை அணுகும் போது அவர்கள் நம்மிடம் ஆதாயம் எதிர்பார்க்கிறார்கள். பள்ளியிலோ கல்லூரியிலோ ஒரு இடம் வாங்க அந்த நிறுவனத்திற்கோ அல்லது ஏஜெண்டுகளுக்கோ நாம் எதாவது கொடுக்க வேண்டியிருக்கிறது. கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு அதிக விலைவைத்து லாபம் என்ற பெயரில் முதலாளிகள் ஆதாயம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஏன் ஓட்டு போடுவதற்கு கூட ஆதாயம் எதிர்பார்க்கிறோம் அல்லவா? ஒருவருக்கு நாம் உதவி செய்வதே நமக்குத் தேவைப்படும் போது அவர்கள் உதவி செய்யவேண்டும் என்ற ஆதாய எதிர்ப்பில் தானே.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க காசு எனும் ஆதாயத்திற்காக இரக்கமில்லாமல் கொலை செய்யும் கூலிப்படைகளும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன. காசுக்காகவும் பதிவிக்காகவும் குற்றங்களை செய்பவர்களையும், அதே காசுக்காக செய்யாத தவறை செய்ததாகச் சொல்லி குற்றம் சுமப்பவர்களையும் நாம் காண்கிறோம். கையூட்டு, ஊழல், கொள்ளை இவையெல்லாம் ஆதாயத்தின் மறு பெயர்களே.

இன்றைய நற்செய்தியில் "இயேசுவைக் காட்டிக் கொடுப்பதால் எனக்கென்ன ஆதாயம்" என யூதாசு யூதர்களிடம் கேட்க அவர்கள் முப்பது வெள்ளிக்காசுகளை அவனுக்குக் கொடுத்ததாக நாம் வாசிக்கிறோம். மூன்று ஆண்டுகளாய் ஒன்றாக வாழ்ந்து ,இயேசுவுடைய போதனைகளைக் கேட்டு,புதுமைகளைக் கண்டு சீடராய் வலம் வந்த யூதாசின் கண்களை செல்வம் மறைத்தது. ஆதாயம் தேடுகிறான். பணத்துக்காக இயேசுவைக் காட்டிக் கொடுக்கத் துணிகிறான்.

துயரப்படும் இயேசுவோடு ஒன்றிக்க ஆசிக்கும் நாம் இன்று நம்மையே ஆய்வு செய்வோம். நாம் ஆதாயம் தேடுபவர்களா? பலனையும் கைமாறையும் எதிர்பார்த்து செயல்படுகிறோமா?  ஆதாயத்திற்காக தீமையைக் கூட செய்யத் துணிகிறோமா? சிந்திப்போம்.  மனம் வருந்தி இம்மனநிலையை மாற்ற வரம் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா! ஆதாயம் தேடாமல் நன்மையை மட்டும் செய்பவர்களாக எங்களை உருவாக்கும் ஆமென்.

Comments

Get rid of expectations.

Add new comment

5 + 5 =