அனைவருக்கும் மதிப்பளிக்கும் மனம் உண்டா என்னிடம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் -நான்காம் வாரம் சனி
I : எரேமியா 11: 18-20
II :  திபா  7: 1-2. 8bc-9. 10-11
III : யோவான்:   7: 40-53

பேருந்து ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த இருவர் மெதுவாக தங்களுக்குள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர். அப்போது ஒருவர் மற்றவரிடம் அவருடைய பெயர், படிப்பு, வேலை போன்றவற்றை பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். பதிலளிப்பவரின் பேச்சும் திறமையும் கேள்விகேட்டவரை மெதுவாக ஈர்க்க ஆரம்பித்தது. அப்போது திடீரென அவருடைய ஊரைப் பற்றி கேட்டார். மற்றவரும் தனது ஊர், ஊர்மக்களைப் பற்றி எடுத்துக்கூறிக்கொண்டிருந்த போதே கேட்டவரின் முகம் மெல்ல மாறியது. ஏனெனில் அவ்வூரையும் அங்குள்ள மக்களைப் பற்றிய தவறான சிந்தனை அங்கே பரவலாகக் காணப்பட்டது. அதன்பின் இருவருக்கும் இடையேயான உரையாடலில் தொய்வு ஏற்பட்டது. அத்தோடு தவறான எண்ணம் கொண்ட மனிதர் மெதுவாக தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து வேறு இருக்கையில் அமர்ந்தார். இந்நிகழ்வு மற்றவ ரை பெரிதும் பாதித்தது. எனவே அவர் இறங்கும் போது அம்மனிதரைப் பார்த்து "இன்னும் எத்தனை காலம் இவ்வாறு எங்களை அவமதிக்கப் போகிறீர்கள்? " என வருத்தத்தோடு கேட்டுவிட்டு இறங்கிச் சென்றார்.

இன்றும் இத்தகைய நிகழ்வுகள் நம் சமூகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. "இந்த ஊர் காரனா அவன் இப்படிப்பட்டவன்" "அந்த குடும்பத்தில் உள்ளவர்களா அவர்களிடமிருந்து தள்ளி நில்லுங்கள்" "இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களா அவர்கள் சண்டைக்காரர்கள் " என இன்றும் நாம் கேட்பதுண்டு. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற மனநிலை அது.ஆனால் எப்போதும் ஒரே நிலை இருப்பதில்லை. காலங்கள் மாறுகின்றன. பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. தலைமுறைகள் மாற மாற மனிதன் அறிவிலும் குணத்திலும் பலவாறு வேறுபட்டு வளர்ச்சியடைகிறான் என்பதை நாம் எப்போது ஏற்றுக்கொள்ளப்போகிறோம்? எல்லாரும் அவரவருடைய திறமைக்கும் குணத்திற்கும் அறிவிற்கும் செயல்பாடுகளுக்கும் ஏற்றாற்போல மதிக்கப்பட வேண்டுமல்லவா!

இன்றைய நற்செய்தி வாசகம் இக்கருத்தையே நமக்கு மிக ஆழமாகச் சுட்டிக்காட்டுகின்றது.இயேசுவின் போதனைகளும் வல்ல செயல்களும்  இறைவாக்கினராகவும் வரவிருந்த மெசியாவாகவும் அவர் இருக்கலாம் என பலரை சிந்திக்க வைத்தது. ஆனால் அவர்களால் அதை நம்பி இயேசுவுக்கு அதற்குரிய மதிப்பைக் கொடுக்க முடியவில்லை.காரணம் அவர் கலிலேயாவிலிருந்து வந்ததே. அதிலும் ஒருசிலர் இயேசுவைப் பற்றி யாராவது சற்று நேர்மறையாகப் பேசினால் அவர்களையும் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். எத்தகைய கடின உள்ளம்!

அன்புக்குரியவர்களே நாம் இத்தகைய மனநிலையைக் கொண்டிருக்கிறோமா?  சாதி ,ஊர்,வசதி,தொழில் ,போன்றவற்றை கருத்தில் கொண்டுபிறரை அவமதிக்கும் எண்ணம் நம்மிடம் உண்டா? அல்லது நாகரிகம் கொண்ட மனிதர்களாய் அனைவரையும் மதிக்கவும் அவர்களை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கவும் கற்றுக்கொண்டுள்ளோமா? சிந்திப்போம். பிறரைப் பற்றிய நல்ல நேர்மறை எண்ணங்களை வளர்ப்போம். இதனால் நாம் முட்டாள்கள், சபிக்கப்பட்டவர்கள் என பிறர் கூறினாலும் பரவாயில்லை. ஏனெனில் நம் ஆண்டவர் இயேசு அனைவரையும் மதித்தார். மீனவர்களும், படிக்காதவர்களும், தீவிரவாதிகளும் கூட அவருக்கு சீடர்களாய் இருந்தனர். எனவே பிறருக்கு மதிப்பளிப்பவர்களாய் வாழ முயற்சிப்போம்.

 இறைவேண்டல் 
எம்மை மாண்போடு படைத்தவரே இறைவா! அனைவரையும் மதித்து ஏற்றுக்கொண்டு அங்கீகரித்து வாழும் மக்களாக எம்மை மாற்றும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 6 =