Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மடிந்து பலன் கொடுக்க! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலத்தின் நான்காம் வெள்ளி
புனித அருளானந்தர் திருவிழா
I: 1 கொரி: 9: 19-23
II: தி.பா: 67: 2-3, 5, 7-8
III: யோவா: 12: 20-32
மறைசாட்சியர் சிந்திய இரத்தம் பலரின் மனமாற்றத்திற்கு வித்தாக இருக்கிறது. கிறிஸ்தவ நம்பிக்கை என்பது 2000 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்த்துடிப்போடு இருக்கின்றதென்றால், அதற்கு காரணம் மறைசாட்சியரின் தியாக வாழ்வும் அவர்கள் சிந்திய இரத்தமுமாகும். இன்றைய காலகட்டத்தில் வாழும் மக்கள் பலர் பெறுவதில்தான் இன்பம் இருக்கின்றது என நினைக்கின்றனர். ஆனால் பெறுவதில் உண்மையான இன்பம் அல்ல ; மாறாக, தருவதில் தான் உண்மையான இன்பம் பொதிந்திருக்கிறது.இன்றைய நாளில் விழா கொண்டாடும் புனித அருளானந்தர் ஓரியூர் மண்ணில் மறைசாட்சியாக மரித்து, இறைநம்பிக்கையை விதைத்தார். அவர் விதைத்த அந்த விதைதான் இன்றளவும் தென் தமிழக மக்களை இறை நம்பிக்கையுள்ள மக்களாக வாழ வழிகாட்டி வருகிறது.
புனித அருளானந்தர் நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கின்றார். இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகர தன்னையே முழுவதுமாக கையளித்தார். அதன் வெளிப்பாடுதான் இயேசுவின் இறையாட்சி போதனையை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இடையூறுகளுக்கு மத்தியிலும் பறைசாற்றினார். "கோதுமை மணி மண்ணில் விழுந்து முடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (யோவா: 12: 24 என்ற வசனம் புனித அருளானந்தருக்கு பொருந்தும்.
கோதுமை மணி எவ்வாறு மடிந்து பலன் தருகிறதோ அதேபோல புனித அருளானந்தர் தன் வாழ்நாள் முழுவதும் நற்செய்தி எனும் கோதுமை மணியை தன் உள்ளத்தில் இருத்தி அதை வாழ்வாக்கினார். தான் அனுபவித்த இறைநம்பிக்கையை பிறருக்கு வல்லமையோடு அறிவித்தார். தன் உயிரையே தியாகம் செய்யும் அளவுக்கு தன்னுடைய நற்செய்தி பணியை செய்தார்.
புனித அருளானந்தர் வாழ்வை புனித திருமுழுக்கு யோவானின் வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கலாம். புனித திருமுழுக்கு யோவான் மனம் மாறி நற்செய்தியை நம்பிட அறைகூவல் விடுத்தார். அதே போலதான் புனித அருளானந்தரும் நற்செய்திப் பணியின் வழியாக மனமாற்ற வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! "என்ற வார்த்தைகளை நாம் அறிவது போல, புனித திருமுழுக்கு யோவான் தீய வாழ்வை வாழ்ந்த ஏரோது அரசனை வன்மையாகக் கண்டித்தார். தவற்றை தவறு என சுட்டிக்காட்டினார். அதிகாரத்தோடு அவர் அரசரின் தவற்றை சுட்டிக்காட்டினார். அதிகாரத்தோடு தவற்றை சுட்டிக்காட்ட வேண்டுமெனில் தன்னுடைய வாழ்வில் நீதி, நேர்மை, உண்மை, தூய்மை உள்ளவராக இருக்க வேண்டும். அப்படி உள்ளவர்கள் மட்டுமே அதிகாரத்தோடு நற்செய்தி மதிப்பீடுகளை போதிக்க முடியும்.
அதே போலதான் புனித அருளானந்தர் தடிய தேவர் என்னும் அரசர் படைத்தளபதி நோயினால் அவதிப்பட்டார். இவர் மறவ நாட்டு அரசரின் உறவினர். சேதுபதி மன்னர்மறவ நாட்டை ஆட்சி செய்தார். அப்பொழுது தடியதேவர் நோயினால் பாதிக்கப்பட்டு புனித அருளானந்தரின் பரிந்துரையில் ஆண்டவர் இயேசுவின் வழிநடத்தலில் அவருக்கு குணம் அளித்தார். இதன் நன்றியாக தடியதேவன் கிறிஸ்தவராக மாற இருக்கிறார். ஆனால் இவருக்கு கிறிஸ்தவராக மாற தடை இருந்தது. காரணம் இவருக்கு 5 மனைவிகள். ஐந்தாவது மனைவிதான் மன்னர் சேதுபதிக்கு நெருக்கமான உறவினர். கிறிஸ்தவராக மாற வேண்டுமெனில் "ஒருவருக்கு ஒருத்திதான் "இந்தக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். எனவே தடியதேவன் நான்கு மனைவியை விலக்கிவிட்டு முதல் மனைவியோடு திருமுழுக்கு பெற முன்வந்தார். இதனால் கோபமடைந்த தடிய தேவனின் ஐந்தாவது மனைவி புனித அருளானந்தரை ஒழித்துக் கட்ட வேண்டும் என முடிவெடுத்தார். இருந்தபோதிலும் பயப்படாமல் புனித அருளானந்தர் உண்மைக்கு சான்று பகர்ந்தார்.
புனித திருமுழுக்கு யோவான் எவ்வாறு சாதாரண உடை அணிந்து நற்செய்திப் பணி செய்தாரோ, அதேபோல 1678 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள கோவாவில் ஜான் பிரிட்டோ வந்து இறங்கிய போது மக்களின் சூழலை பார்த்தார். ஓர் இந்து சந்நியாசியை போல உடையணிந்தார். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு மதுரை மிஷன் செயல்பட்டு வந்தது. எனவே தென்னிந்திய பகுதியிலுள்ள தென்தமிழகத்தில் பணி செய்வதற்காக புனித அருளானந்தர் ஆர்வத்தோடு வந்தார். புனித அருளானந்தர் தன்னுடைய இயற்பெயரான ஜான் டி பிரிட்டோ என்ற பெயரை அருளானந்தர் என மாற்றிக் கொண்டார். இது மக்கள் மீது கொண்ட அன்பையும் நமது பண்பாட்டின் மீது கொண்ட பற்றையும் முழு அர்ப்பணத்தையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.
திருமுழுக்கு யோவான் எல்லா மக்களுக்கும் நற்செய்தி வேறுபாடு காட்டாமல் நற்செய்தியை அறிவித்தது போல, புனித அருளானந்தரும் எந்தவொரு வேறுபாடும் காட்டாமல் சிறப்பான பணியை செய்தார். அவருடைய நற்செய்தி அறிவிப்பைக் கேட்ட மக்களில் எண்ணற்றவர்கள் மனமாறினார்கள். கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக் கொண்டார்கள்.
திருமுழுக்கு யோவான் உண்மைக்கும் நேர்மைக்கும் மன உறுதியோடு சான்று பகிர்ந்ததைப் போல புனித அருளானந்தரும் உண்மைக்கும் நேர்மைக்கும் மனஉறுதியோடு சான்று பகர்ந்தார். திருமுழுக்கு யோவான் ஏரோது அரசனால் சிறையில் அடைக்கப்பட்டு தன் தலை வெட்டுண்டு மறைசாட்சியாய் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர்ந்ததைக் போல, புனித அருளானந்தரும் உண்மைக்கும் நேர்மைக்கும் சான்று பகர்ந்து நற்செய்திப் பணி செய்ததால் குறுநில மன்னர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். நற்செய்தியை அறிவிக்க வேண்டாம் என எச்சரித்த போதும் அவர் தன்னுடைய இறையாட்சி இலக்கில் சற்றும் பின்வாங்காமல் மனவுறுதியோடு தடியதேவனின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்தினார். ஒரு மனைவியோடு வாழ்வது தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பதை தெளிவுபடுத்தினார். இத்தகைய உண்மைக்குச் சான்று பகரும் மனநிலையின் பொருட்டு, மறவ நாட்டு அரசன் சேதுபதி அவரின் தலையை வெட்டி ஓரியூரில் கொல்ல ஆணையிட்டார். தன்னுடைய இரத்தத்தை சிந்தி இன்று தமிழக மக்களை சிறந்த இறை நம்பிக்கையாளர்களாக உருவாக்க மிகச் சிறந்த கருவியாக உருவானார். "மறைசாட்சிகளின் இரத்தம் விசுவாசத்தின் வித்து " என்ற உண்மை நிலைக்கு திருமுழுக்கு யோவானை போல, புனித அருளானந்தரும் சான்று பகிர்ந்துள்ளார்.
மறவ நாட்டு மாணிக்கம் என அன்போடு அழைக்கப்படும் புனித அருளானந்தரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து ஒரு சில வாழ்வியல் பாடத்தைக் கற்றுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். நற்செய்திக்காக உயிர் துறத்தல், உண்மைக்கும் நேர்மைக்கும் சான்று பகரும் திடமான மனநிலை, துன்பத்தில் மத்தியிலும் நற்செய்தி வாழ்வுக்கு சான்று பகர்தல், நாம் பணி செய்யும் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றை உள்வாங்கி பணி செய்தல், கோதுமை மணி மடிந்து பலன் தருவது போல, மடிந்து பலன் தரும் தியாக மனநிலை, தூய்மையான வாழ்வு போன்ற நற்பண்புகளை நமதாக்கி நாமும் நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகர்ந்து மடிந்து பலன் கொடுக்க தேவையான அருளை இன்றைய விழா நாயகர் புனித அருளானந்தரின் வழியாக வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! புனித திருமுழுக்கு யோவான் மற்றும் புனித அருளானந்தர் உமது நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் இரத்தம் சிந்தி இறையாட்சி மதிப்பீடுகளுக்குச் சான்று பகர்ந்தைப் போல் நாங்களும் சான்று பகரத் தேவையான அருளை வேண்டுவோம். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment