ஆண்டவரின்அன்பைத்தேடிவர…. | பணி. திலக ராஜா சி. | Daily Reflection | Ash Wednesday


வழிபாட்டு ஆண்டின்படி இன்றையநாளில் தவக்காலத்தை தொடங்குகிறோம். வழிபாட்டு ஆண்டிலே இது உன்னதமான காலம். புனிதமானகாலம். நமது மீட்பின் பாதையைச்சுட்டும் காலம். சாம்பல் பூசி இன்றிலிருந்து 40 நாட்கள் அனுசரிக்கப்போகிறோம். 40 என்பது விவிலியத்தில்  மிக முக்கியமான எண்களில் ஒன்று. தொடக்கநூல் முதல் திருவெளிப்பாடுவரை பார்க்கையில் நாற்பதுஎன்பது முழுமையின் அடையாளம். பழைய ஏற்பாட்டில் விடுதலைப்பயணத்தில் வரும் 40 ஆண்டுகள்பாலைவனப்பயணமும், புதிய ஏற்பாட்டில் இயேசுவின் திருமுழுக்குப்பின் பொதுப்பணிக்குமுன் சென்ற 40 நாற்பது நாட்கள் பாலைவன அனுபவமும் மிக முக்கியமானது. 

இந்த இரண்டும் 1. இறைவனின் அன்பை புரிந்துகொள்ள உதவியது; 2. இறைவன் அன்பை பிறருக்கு கொடுக்கத் தன்னை தயாரித்தது. இன்றும் இதே 40 நாற்கள் நம்மையும் ஆண்டவரின் அன்பைத்தேடி வர அழைப்புவிடுக்கின்றது. முதலாவதாக சாம்பல் உணர்த்தவது என்ன? - நாம் அனைவரும் மண்ணிலிருந்து படைக்கப்பட்டதால் அனைவரும் மண்ணுக்கு சமம் என்பதை உணர்த்தியும், எனவே இறைவா எங்கள்மீது இரக்கம் கொண்டு உமது பேரன்பைக் காட்டும் என்பதை நமக்கு நினைவுப்படுத்திக்கூறுவது.  

இந்த புனித நாட்களில் இறைவன் நமக்கு விடுக்கும்அழைப்பு “உங்கள்முழு இதயத்தோடு திரும்பி வாருங்கள்”அதாவது என் அன்பில் நிலைத்திருக்க வாருங்கள் என்பதே. நாம் தவறுசெய்தாலும், துரோகங்கள் செய்தாலும் நம்மைத் தேடிவருவது இறைவனின் அன்பு. விபசாரிகளாக இறைவனுடைய அன்பிலிருந்து விலகிப்போன இஸ்ராயேல் மக்களுக்கு ஊதாரிமைந்தன் உவமை, காணாமல் போன ஆடு உவமை போன்றவைகள் வழியாக தனது அன்பின் தன்மையைப் பற்றி எடுத்துரைக்கிறார். இந்த ஆண்டவரின் அன்பில் நிலைத்திருப்பதால் நாம் எப்படிப்பட்ட பயன்களை அடையப்போகிறோம்? 

ஆண்டவன் அன்பு சக்திதரும், சித்திதரும், புத்திதரும், முக்திதரும், புகழ்அளிக்கும், மகிழ்வுஅளிக்கும், சீர்பரவும், நேர்பரவும், குணம்பெறலாம், மணம்பெறலாம், சத்தியமே, நித்தியமே… இந்த பலன்களைப்பெற நாம் ஆண்டவரின் அன்பில் நிலைத்திருக்கவேண்டும்.. நம் இதயத்தை கிழிக்காமல் இதயத்தோடு வருவோம். அண்டவரின் அன்பில் நிலைத்திருக்க உதவுவதுதான் இன்றைய நற்செய்திவாசகம் சொல்லும் செபம், நோன்பு, அறச்செயல்கள். 

இவை போன்றவை இன்று பொருளற்று போய்விட்டது. பெரும்பாலும் வாழ்வுக்கு உதவாமல் சடங்காகிவிட்டது. நான் திருச்சியில் இறையியல் படித்துக்கொண்டிருந்தகாலம். வார இறுதிகளப் பணிக்காக செல்லுமிடங்களில் எல்லா மதத்தவர்களும் இருப்பார்கள். அதில் ஒரு இளைஞர் மாலை அணிந்து 40 நாட்கள் விரதம் இருந்து தன்னுடைய புனித கடமைகளை நிறைவேற்றிவிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் இல்லம் திரும்பினார். இல்லம் திரும்பிய இரண்டாம் நாளில் மது அருந்தியதால் சாலை விபத்தில் சிக்குகிறார் 4-ம் நாளில் மரணிக்கிறார். நாமும்பல நிலைகளில் இப்படித்தான் இருக்கிறோம். நமது செயல்கள் நமது வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரமுடியவில்லையெனில் அது வீண் பெருமைக்குதானே. நமது செயல்களில் நம்மை மையப்படுத்தாமல் பிறரை மையப்படுத்தி அதன்மூலம் ஆண்டவன் அன்பை பெறவேண்டும் என எசாயா அழைக்கிறார்.
எசாயவின் இறைவாக்கின்படி, நோன்பு – இந்த நோன்பு என்பதுபிறருக்குகாட்டுவதுஅல்ல. அறச்செயல்கள் வழி நம்மை வருத்துவது நாம் சேர்த்துவைக்க அல்ல: அது பிறருக்கு உதவவே. எசாயா 58:7-ன் படி பசித்தோருக்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லாவறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோருக்கு உடைகொடுப்பதும்தான் கடவுள்விரும்பும் நோன்பு. பிறருக்கு உதவாத, உள்ளத்தை உருத்தாத நோன்பு என்ன நோன்பு. இயேசுவும் நமக்காகத்தானே சிலுவையில் தன்னையே வருத்தினார். நமக்காகஒருவர் உயிரைக்கொடுக்கும்போது அந்த அன்பில் நிலைத்திருக்க நம்மோடு இருப்பவனுக்காக நம் உடலைகொஞ்சம் வருத்தக்கூடமுடியாதா? 

செபம் - இரவிந்திரநாத் தாகூர் சொல்லுவார் -  செபம் என்பதுநான் என்பதிலிருந்து நாம்என்பதற்கு அதாவது குறுகியதிலிருந்து பெரியதற்கு கடந்துபோவது.நமது செபங்களில்பிறரை முன்னிலைப்படுத்தவேண்டும். அதற்காக நான் உனக்காக செபிக்கிறேன் என சொல்லிக்கொண்டே இருக்கவும் கூடாது, நடிக்கவும் கூடாது. நமது செபம் பிறருக்கு உதவும்போது, இறைவனின் அன்புநம்மைத் தேடிவருகிறது. இயேசுவின் புனித குழந்தை தெரசாள்தான் செய்யும் அனைத்து வேலைகளையும் செபங்களாக மாற்றி பாவிகள் மனந்திரும்ப உதவினார். நமது செபங்களும் பிறருக்கு உதவுவதன்வழி இறைவனின் அன்பும் நம்மைத்தேடிவரும். இந்த செபம், நோன்பு, அறச்செயல்கள் இவற்றைத்தொகுத்து ஒரு சில செயல்களையாவது நாம்செய்தால் இறைவனின் அன்பைத்தேடிச்செல்ல வாய்ப்புகிடைக்கும் என்பதே என் நம்பிக்கை.

Add new comment

4 + 15 =