அழைப்புக்கேற்ப வாழ்வோமா! | குழந்தைஇயேசு பாபு


bloom where planted

பொதுக்காலத்தின் 29 ஆம் வெள்ளி - I. எபே: 4:1-6; II. திபா 24:1-2.3-4b.5-6; III. லூக்: 12:54-59

ஒரு பள்ளியில் புதிதாக கணித ஆசிரியர் ஒருவர் பொறுப்பேற்றிருந்தார்.  அவர் முதல் நாள் வகுப்புக்குள் நுழைந்தவுடனே வகுப்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதை உணர்ந்தார். சுவர்கள் மிகமோசமாகவும், கரும்பலகை பயன்படுத்த முடியாத நிலையிலும், மேசை நாற்காலிகள் அசுத்தமாகவும் இருந்ததைக் கண்டார். தன்னை மாணவர்களிடம் அறிமுகப்படுத்திய பிறகு தம் வகுப்பறையின் நிலையை மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார்.பின் அனைவரையும் தம்முடன் சேர்ந்து வகுப்பறை சீர்தீருத்தப் பணிகள் செய்ய அழைத்தார். மாணவர்களும் உற்சாகமாக ஒத்துழைத்து தங்கள் வகுப்பறையை புதிதாக்கினர். இதைக்கண்ட தலைமை ஆசிரியரும் பிற ஆசிரியர்களும் கணித ஆசிரியரையும் அவ்வகுப்பு மாணவர்களையும் பாராட்டினர். மற்ற வகுப்பு  மாணவர்களையும் உற்சாகப்படுத்தி பொதுப்பணிகள் செய்யத் தூண்டுமாறு கேட்டுக்கொண்டனர். அந்த கணித ஆசிரியரும் மகிழ்வுடன் சம்மதித்தார். நாட்கள் கடந்தன. பள்ளியே புதிதானது. சிறந்த முறையில் உழைத்த கணித ஆசிரியரை அனைவரும் பாராட்டினர். 

சில தினங்களில் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடைபெற்றன. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்போது தலைமையாசிரியரிடம் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற கணித ஆசிரியர் எந்தெந்த வகுப்புகளுக்கெல்லாம் கற்றுத்தருகிறாரோ அவ்வகுப்புகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அப்போது தலைமையாசிரியர் கணித ஆசிரியரை அழைத்து பேசினார். "சீர்திருத்தப்பணிகள் தேவைதான். அதைவிட முக்கியமானது கற்றுக்கொடுப்பது. கற்றுக்கொடுக்கவே பொறுப்பேற்றீர்கள். ஆனால் அதை நிறைவேற்ற மறந்து விட்டீர்கள்" என்று கூறி ஆசிரியரின் முதன்மைப் பணி என்ன என்பதை உணரவைத்தார். தன் தவறை உணர்ந்த ஆசிரியர் தன்  கற்பித்தல் பணியை செய்யத் தொடங்கினார்.

"நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ப வாழுங்கள்" என்று முதல் வாசகத்தின் மூலம் கூறுகிறார் புனித பவுல். மண்ணுலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருமே காரணத்தோடு படைக்கப்பட்டுள்ளது.  இயற்கைப் படைப்புகள் ஒவ்வோன்றும் தாம் படைக்கப்பட்டதன் நோக்கத்திலிருந்து சற்றும் விலகாமல் வாழ்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆனால் படைப்புக்களின் மணிமுடியாய் விளங்கும் நாம், நம்முடைய அழைப்பை உணர்ந்து வாழ்கிறோமா? 

இறைச்சாயலில் மனிதர்களாக பிறந்த நாம் சிறப்பு அழைப்புப் பெற்றவர்கள். அன்பு, பொறுமை, அமைதி, கனிவு போன்றவற்றை நம்மகத்தே கொண்டு மற்றவரையும் மதித்து அன்புடன் வாழவே நாம் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய அழைப்பினை உணர்ந்து அதை நோக்கி வாழ நாம் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்கும் வழிகள் மாறுபடலாம். சிலர் இல்லறத்தை நாடலாம். மற்றும் சிலர் துறவறத்தை விரும்பலாம். சிலர் மருத்துவராக பணிபுரியலாம். வேறுசிலர் ஆசிரியப்பணியோ அல்லது சமூகப்பணியோ தேர்ந்தெடுக்கலாம்.
அழைப்பு எதுவானாலும் நாம் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழ முழுமனதுடனும் இறைநம்பிக்கையுடனும்  செயல்படும்போது ஆண்டவர் நமக்குள் இருந்து செயல்படுவார் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை. ஆனால் நம்முடைய அழைப்பின் மேன்மையை உணராமல் மற்ற காரியங்களில் கவனம் செலுத்தும் போது  நாம், நம் வாழ்வின் அர்த்தத்தை இழக்கிறோம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யூதர்களை இயேசு கடிந்துகொள்கிறார். காரணம் யூதர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்ப்பட்ட இனம். கடவுள் நீதிக்கும் நேர்மைக்கும் குரல் கொடுப்பவர். அவர் தாம் தேர்ந்தெடுத்த மக்களையும் நேர்மையாளர்களாய் வாழ அழைக்கிறார்.நேர்மையாளர்கள் என்பவர்கள் கடவுளை அன்பு செய்து அவரின் கட்டளைபடி நடப்பவர்கள். அப்படிப்பட்ட தங்கள் அழைப்பு வாழ்விலிருந்து தவறி நேர்மையானவற்றை அறிய மறுத்தார்கள் யூதர்கள்.

நேர்மையாளர்கள் துன்பங்கள் பல அனுபவிக்க நேர்ந்தாலும் இறுதியில் கடவுளின் துணையோடு வெற்றிபெறுவதை நாம் விவிலியத்தில்  காண்கிறோம். யோபு அதற்கு ஒரு சிறந்த மாதிரி. இன்றும் நாம் நேர்மையாளர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். அவ்வாறு வாழும் போது தடைகள் வரினும் அதைத் தகர்த்தெறிய கடவுள் பலம் தருவார். கடவுளின் பிள்ளைகள் நாம். நம் அழைப்பை உணர்ந்து அதற்கேற்ப நம் வாழ்வை அமைப்போம். நேர்மையானவற்றை அறிந்து அதன்படி நடக்க இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

எங்களை பெயர் சொல்லி அழைத்த இறைவா! நாங்கள் எங்களை நீர் எதற்காக அழைத்திருக்கிறீர் என்பதை உணர உமது தூய ஆவியைத் தாரும். நாங்கள் எங்கள் அழைப்புக்கேற்ப வாழவும் நேர்மையானவற்றைத் தேடவும் அதனால் இடர்கள் வந்தாலும் அழைத்தல் பாதையிலிருந்து வழுவாது வாழவும் சக்தி தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

4 + 13 =