Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அறிவா? ஆன்மாவா? | குழந்தைஇயேசு பாபு
இன்றைய வாசகங்கள் (26.07.2020) - பொதுக்காலத்தின் 17 ஆம் ஞாயிறு - I. 1 அர. 3:5,7-12; II. திபா. 119: 57,72,76-77,127-128,129-130; III. உரோ. 8:28-30 IV. மத். 13:44-52
"எனக்கு எல்லாம் தெரியுமென்று நினைத்திருந்தேன். ஆனால் அதிகம் படிக்க படிக்க எனக்கு தெரிந்தது 'கொஞ்சம்' என்பதை உணர்ந்து கொண்டேன். " என்று உலக தத்துவ மேதை சாக்ரடீஸ் கூறியுள்ளார். இதுதான் ஞானத்தின் வெளிப்பாடு. நாம் வாழ்கின்ற இந்த உலகத்திலே பலவற்றைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். ஆனால் தேடல் இவ்வுலகம் சார்ந்த தேடலாக இல்லாமல் ஆன்மா சார்ந்த தேடலாக இருக்க வேண்டும். ஞானத்திற்கு முன்னால் அறிவு குறையுள்ளதேயாகும். எனவே அறிவார்ந்த சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஞானத்தைப் பெற்றுக்கொள்ள நாம் தேடலைத் தொடங்க முயற்சி செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். அப்பொழுதுதான் இறைவன் நமக்குத் தரும் ஞானத்தைப் பெறமுடியும்.
தனக்கு ஒன்றும் தெரியாது என்று எப்பொழுது உணர்ந்துகொண்டு ஒன்றைக் கற்றுக்கொள்ள நினைக்கிறோமோ, அப்பொழுது நாம் ஞானத்தை நோக்கிய தேடலைத் தொடங்கி விட்டோம் என்று அர்த்தம். அறிவிற்கும் ஞானத்திற்கும் இடையே உள்ளவேறுபாட்டைப் புரிந்து ஞானமுள்ளவர்களாகவாழ அழைக்கப்பட்டுள்ளோம். ஞானத்திற்கும் அறிவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்துக் கொண்டு ஞானமுள்ளவர்களாக மாற இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
அறிவுக்கும் ஞானத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை பின்வரும் நிகழ்வு நமக்கு விளக்குகின்றது. ஒரு குருவிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றி ஐயம் இருந்தது. அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? என்று குருவிடம் கேட்டனர். அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாட்கள் பாடமெடுத்தும் அவர்கள் மூவருக்கும் விளங்கவில்லை.
குரு மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன் "என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார்.
பின்பு குரு மாற்று அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அவரின் அருகில் வந்தமர்ந்தார். முதல் மாணவனைப் பார்த்து, "நான் போய் வந்த அறையினுள் மூன்று தம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு தம்ளர் பாலை பருகிவிட்டு வா" என்றார். அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்ளர்களில் பால் இருந்தது. தங்க தம்ளரில் இருந்த பாலை எடுத்து மிகுந்த மகிழ்ச்சியோடு பருகினான். பிறகு வெளியே வந்தான்.
அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில் பால் இல்லாததை பார்த்த அவன் அதிலிருந்து பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கமுற்றான். ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட வெள்ளி தம்ளரில் இருந்த பாலை எடுத்து குடித்துவிட்டு ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான்.
மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்க, வெள்ளி தம்ளர்களைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. எனக்கு வெண்கலத் தம்பளர் பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு கேவலமானவனா ? எந்த விதத்தில் நான் தாழ்ந்தவன் ஆகிவிட்டேன்? என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின. ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்பதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு குடித்து விட்டு வெளியே வந்தான். அவர் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.
குரு மூவரையும் பார்த்து, "பாலைக் குடித்தீர்களா?" என்றார். முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன், "தங்கத் தம்பளரில் பால் குடித்தேன். நான் மிகவும் பாக்கியசாலி, குருவே!" என்றான்.
இரண்டாவது மாணவன், "எனக்கு தங்கத் தம்பளரில் பால் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் வெள்ளி தம்பளரிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது, குருஜி" என்றான். மூன்றாம் மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்துவிட்டது. பின்பு அவன் "இந்த மூன்று பேர்களை நான்தான் சிறப்பு இல்லாதவன். எனக்கு வெண்கலத் தம்பளரில் தான் பால் கிடைத்தது" என்றான்.
குரு அமைதியாக எல்லாவற்றையும் கேட்டார். அதன்பின்பு பேச ஆரம்பித்தார். "மாணவர்களே! தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்பளர்களிலும் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து சுண்டக் காய்ச்சிய சுவையான பசும்பால் தான் ஒரே அளவில் இருந்தது. அதில் எந்தவொரு வேறுபாடும் இல்லை.
பாலை பருகப் போகிற மூவருக்குமே அதில் இருந்து ஒரே மாதிரியான சுவையும், சத்துவ குணமும் தான் கிடைக்கப்போகிறது. அதிலும் வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் மூவருமே நினைத்தது வேறு.
பால் ஊற்றி வைத்திருக்கும் தம்பளர்களின் மதிப்பை பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம், சுவை, ருசி ஆகிய அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை. ஆகவே நீங்கள் பண்டத்தை விட்டுவிட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள்!
பாத்திரத்தைப் பார்த்து மகிழ்ச்சிப்படுவது அறிவு. அதிலுள்ள பண்டத்தைப் பார்த்து மகிழ்ச்சிப்படுவது ஞானம். ஞானிகள் பண்டத்தை பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள். பாத்திரங்களுக்கு மதிப்புத் தரமாட்டார்கள். மண் சட்டியில் ஊற்றிக் கொடுத்தால்கூட ஆனந்தமாக பருகிச் செல்வார்கள்.
"நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல் ஞானம் கொண்டு பார்த்திருந்தால் மூவருமே ஒரே மாதிரியான மனோநிலையை எட்டி இருப்பீர்கள்". குரு சொல்லி முடித்ததும் மூன்று மாணவர்களும் அறிவிற்கும் ஞானத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாகப் புரிந்து கொண்டனர். எனவே அவர்கள் அறிவார்ந்த சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆழமான ஆன்மா சார்ந்த ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர்.
இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசர் கடவுளிடம் ஞானத்தைப் பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி தரப்பட்டுள்ளது. ஞானம் என்பது தூய ஆவியின் உயரிய கொடை. ஞானமுள்ள எவரும், நன்மை தீமையை உணர்ந்து நன்மைக்கான வழிகளைத் தேர்ந்தெடுத்து, உலகம் சார்ந்த அற்பக் காரியங்களுக்கு இடம் தராமல், ஆன்மா சார்ந்த உயரிய காரியங்களில் மனதை செலுத்துவார்கள் என்பதை விவிலியத்திலும் சரி, நம் வாழ்க்கை அனுபவங்களிலும் சரி, பல்வேறு மனிதர்கள் மூலமாகவும், அவர்களின் வாழ்க்கையை அனுபவப் பகிர்வுகள் மூலமாகவும் நாம் அறிந்திருப்போம்.
இந்த ஞானத்தை நாம் எப்படிப் பெற்றுக் கொள்வது? "ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம்" (சீரா. 1:14). ஆண்டவரிடம் கொள்ள வேண்டிய அச்சம் என்பது பயத்தை குறிப்பதல்ல. மாறாக, ஆண்டவரிடம் கொண்டிருக்க வேண்டிய உயர்ந்த அன்பு, அவர் நமக்கு தந்த நன்மைகளுக்காக நன்றி உணர்வு, அவரோடு உடனிருக்க வேண்டும் என்ற ஆர்வம், அவர் குரலைக் கேட்க வேண்டும் என்ற தேடல், எல்லாவற்றிற்கும் மேலாக படைத்தவர் முன்னிலையில் நான் வெறும் படைப்பு பொருளே என்று தாழ்ச்சி. அதுதான் உண்மையான தெய்வ பயம். அதுதான் ஞானத்தின் தொடக்கம். சாலமோன் அரசரிடம் இவை அனைத்தும் இருந்ததால்தான் அவர் ஞானத்தை வரமாகக் கேட்டார்.
இன்றைய நற்செய்தியும் விண்ணரசு (அ) இறையாட்சி என்னும் ஞானத்தை புதையலுக்கும், விலையுயர்ந்த முத்துக்கும் ஒப்புமைப்படுத்தி, அவற்றை அடைய உலகம் சார்ந்த எல்லாவற்றையும் இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறது.
புனித பவுலும் கிறிஸ்துவைப் பற்றிய அறிவை ஒப்பிடும் பொழுது இந்த உலக அறிவை நான் குப்பை என கருதுகிறேன் என கூறுவார். நாம் சிந்தித்து பார்ப்போம். எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம்? உலக அறிவிற்கும் செல்வத்திற்குமா?அல்லது ஞானம் என்ற ஆவியாரின் கொடைக்கா? சாலமோன் அரசரைப் போல ஞானத்தை விரும்பினோம் என்றால் மற்ற எல்லாமே நமக்கு தானாக வந்து சேரும் என்பதையும் நாம் தெரிந்து கொள்வோம்.
கடவுள் தம் மக்களை ஞானம் மிகுந்தவர்களாக, புதையலைப் போன்றவர்களாக, விலையுயர்ந்த முத்துக்களைப் போல அனைவராலும் வேண்டி விரும்பி தேடப்படுபவர்களாகவேவாழ, நம்மை முன்குறித்து வைத்துள்ளார். நம்மை அழைத்துள்ளார். நம்மை ஏற்புடையவர்களாக்கவும் காத்திருக்கிறார். நாம் நம்மை அச்சத்தோடு கடவுளுடன் ஒப்படைத்தால் தன் தூய ஆவியாரால் நம்மை திடப்படுத்துவார். எனவே அவரிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து ஞானத்திற்காய் வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவனே, ஞானத்தின் ஊற்றே! உமக்கு என்றும் அஞ்சி, இவ்வுலகம் சார்ந்த அற்ப அறிவை தேடுவதை விட்டுவிட்டு ஞானத்தின் மீது தாகம் கொண்டவர்களாய் வாழவும், உமக்கும் ஏற்புடையவர்களாய் வாழ்ந்து , விண்ணரசின் முத்துக்களாய் திகழவும் தூய ஆவியாரின் கொடையை தாரும். ஆமென்.
அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment