அம்மா உம் நம்பிக்கை பெரிது | குழந்தைஇயேசு பாபு


Faith

இன்றைய வாசகங்கள் (05.08.2020) - பொதுக்காலத்தின் 18 ஆம் புதன் - I. எரே. 31:1-7; II. திபா. 31:10,11-12,13; III. மத். 15:21-28 

ஒரு அருட்சகோதரி என்னிடம் பகிர்ந்து கொண்டது. நான் மனவளர்ச்சி குன்றியோர்கான சிறப்பு பள்ளியில் பணிபுரிகிறேன். எங்கள் பள்ளியில் பயிலும் ஒரு மாணவன் புற உலக சிந்தனை இல்லாமை எனப்படும் ஆட்டிசம் என்னும் நிலையினால் பாதிக்கப்பட்டவன். அதீத சுறுசுறுப்புத்தன்மையினால் ஓரிடத்தில் அமராமல் ஒருவித ஒலி எழுப்பிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருப்பான். அவனை ஒரு இடத்தில் அமைதியாக அமரவைத்து பயிற்சியளிப்பது மிக கடினமாக இருக்கும். ஒருநாள் அவன் தாய் என்னிடம் ஓரிரு நாட்கள் விடுப்பு வேண்டுமென கேட்டார். காரணத்தைக் கேட்டபோது ஜெபக்கூட்டத்திற்கு செல்வதாகக் கூறினார். இவனை எப்படி சமாளிக்க போகிறீர்கள் என்று கேட்டபோது அந்த தாய் கண்ணீர் மல்க கடவுள் பார்த்துக்கொள்வார் என்று கூறியதோடு என் மகன் விரைவில் குணமடைவான் என்றும் அவனை இறைஊழியம் புரியும் ஒரு குருவானவராக மாற ஊக்கப்படுத்துவேன் என்றும் கூறினார்.

அறிவியல் உண்மையின்படி மனவளர்ச்சி குறைபாடு குணப்படுத்த முடியாத நிலை என்று அறிந்திருந்தும் அந்தத் தாய் கடவுள் அறிவியலையும் கடந்தவர் என்ற அசைக்க முடியா நம்பிக்கை வைத்திருந்தார். இப்பொழுது அம்மாணவனினன் வயது இருபது. அவன் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆயினும் அவன் தாயின் நம்பிக்கை எள்ளளவும் குறையவில்லை. அவர் நம்பிக்கையை கண்டு வியந்து போன நானும் இன்று அந்த தாயின் நம்பிக்கை நிஜமாக ஜெபிக்க ஆரம்பித்து விட்டேன்" என என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

இன்றைய நற்செய்தியில் நாம் காணும் கானானியப் பெண் ஆண்டவர் இயேசுவையே வியக்க வைக்கும் அளவுக்கு மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதைக் காண்கின்றோம். இயேசுவிடம் நம்பிக்கை கொண்டால் தன் மகள் நிச்சயம் குணமடைவாள் என்ற நம்பிக்கைதான் அவருடைய மகளை குணமாக்கியது. பிள்ளைகளுக்கு அளிக்கும் உணவை நாய்களுக்கு போடுவது முறையல்ல என்று கூறி அப்பெண் இஸ்ரயேலர் அல்லாதவர் , ஒரு நாய்க்கு சமமானவர் அவருக்கு உதவிசெய்ய முடியாது என்று இயேசு அவரை சோதித்த போதும் கீழே விழும் துண்டுகளை நாய்கள் தின்னுமே என்று கூறி தன் விடாப்பிடியான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். 

இன்று நம் நம்பிக்கையின் நிலை என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்ற கடவுள் காலம் தாழ்த்தி நம்மை சோதிக்கும் போதும் அதனால் நாம் வேதனைக்குள்ளாகும் போதும் தான் நாம் சோர்ந்து போகாமல் நம் நம்பிக்கையை இன்னும் ஆழமாக்க வேண்டும். அப்போது கடவுள் நம்மையும் நோக்கி உன் நம்பிக்கை பெரிது என்று வியந்து பாராட்டுவார். 

இயேசு செய்த வல்ல செயல்கள் அனைத்தும் நம்பிக்கை உள்ள இடத்தில் மட்டும் தான் செய்யப்பட்டது. நம்பிக்கை தான் நம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாக இருக்கின்றது. நம்முடைய சோதனையிலும் வேதனைகளிலும் இடையூறுகளிலும் மனம் தளராமல் கடவுளிடம் நம்பிக்கை கொள்ளும் பொழுது, நிச்சயமாக ஒருநாள் கடவுளின் வல்ல செயல்களை நம் வாழ்வின் அனுபவிக்க முடியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம், முதலாவதாக நம்பிக்கையின் தந்தை என அழைக்கப்படும் ஆபிரகாம். இரண்டாவது, துன்பத்திலும் இறைநம்பிக்கையில் திடமாய் இருந்த யோபு. மூன்றாவதாக, நம்பிக்கையோடு கடவுளின் திருவுளத்தை ஏற்ற அன்னைமரியா. இவர்கள் மூவரும் நம்பிக்கை வாழ்வுக்கு மிகச்சிறந்த உதாரணமாக கருதப்படுகின்றனர். இவர்கள் நம்பிக்கை வாழ்வின் வழியாக கடவுளின் ஆசீரை நிறைவாகப் பெற்றவர்கள். நம்பிக்கை வாழ்வின் வழியாக கிறிஸ்தவ நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகரும் அருளை தொடர்ந்து வேண்டுவோம். 

இறைவேண்டல் 

நம்பிக்கையின் நாயகனே இறைவா! நலன்களை அருள்பவரே சோதனை வேளைகளில் சோர்ந்து போகாமல் நம்பிக்கையில் வேரூன்றி நிற்கும் வரம் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு 

சிலாமேகநாடு பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 11 =