அன்புத்தீ மூட்டுவோம்! | குழந்தைஇயேசு பாபு


Fire of Love

பொதுக்காலத்தின்  29 ஆம் வியாழன் - I. எபே: 3:14-21; II. திபா 33:1-2.4-5.11-12.18-19; III. லூக்: 12:49-53

ஒரு குடும்பத்தில் தாயானவள் தன் மகனிடம் சில நாட்களாய் பேசாமலேயே இருந்தாள். காரணம் தன் மகன் செய்த தவறைச் சுட்டிக்காட்டி தண்டித்தார். அவர்கள் இருவரும் பேசாததால் வீடு பிளவுற்றது போன்ற ஒர் உணர்வு அனைவருக்குள்ளும் ஏற்பட்டது. கலகலவென்று பேசி மகிழ்ந்தவர்கள் பேசாமல் மௌனம் காத்தனர். வீடு அமைதியாக இருந்ததே தவிர வீட்டிலுள்ளோரின் மனங்கள் அமைதியிழந்து இருந்தன. நாட்கள் செல்லச்செல்ல தன் தாய் எதற்காகத் தன்னைக் கடிந்து கொண்டாள் என்ற உண்மையை உணர்ந்தான் மகன். தன் தாயின் அன்பின் ஆழத்தை உணர்ந்தான். பிளவு நீங்கியது.

"அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும், அடித்தளமுமாய் அமைவதாக" (எபே3:17). 'அன்பு' என்ற சொல்லைப்பற்றி பலமுறை தியானித்திருக்கிறோம். 'இறைவனையும், சக மனிதர்களையும் அன்பு செய்வதே அனைத்திலும் உயரிய கட்டளை' என்றும், 'நம்மிடம் எல்லாம் இருந்தாலும் அன்பு இல்லாவிட்டால் அனைத்தும் குப்பைக்கு சமம்' என்றும் விவிலியத்தில் வாசிக்கிறோம். ஆம். அன்பே அனைத்து உயிர்களுக்கும், உறவுகளுக்குமான தொடக்கம். அன்பு அனைவரையும் ஒரே மனதாய், ஒரே குடும்பமாய் இணைக்கும் வல்லமைக் கொண்டது. அப்படிப்பட்ட அன்பைப் போதித்து வாழ்ந்து காட்டிய இயேசு, 'நான் தீ மூட்டவந்தேன், பிளவு உண்டாக்கவே வந்தேன்' என்று கூறுவது நமக்கெல்லாம் சற்று வியப்பையும், எதிர்மறை உணர்வுகளையும் நமக்குள் ஏற்படுத்தலாம், ஆனால் இவ்வார்த்தைகள் மூலம் இயேசு நமக்குக் கூறும் உண்மையான செய்தி என்ன?

கிறிஸ்து பிளவு உண்டாக்கவே வந்தார். ஆம், அப்பிளவானது நன்மைக்கும், தீமைக்கும், இருளுக்கும் ஒளிக்கும், பொய்மைக்கும் உண்மைக்கும் இடையேயான பிளவாக இருக்கும்.
அன்புடையவர் எவரும் நன்மைக்கும் தீமைக்கும் துணை போவதில்லை. பொய்மையை உண்மையைப் போல மதிப்பதில்லை. ஒளியை நாடுவது போல் இருளை நாடுவதில்லை. இதுதான் இயேசு கொண்டுவந்த பிளவு. அன்பை நம் வாழ்வின் அடித்தளமாக மாற்றும் போது இயேசுவைப் போல, நாமும் சமூகத்திலே நல்லனவற்றோடு கலந்து கிடக்கும் தீமையை வேர்பிரித்து அறிந்து, நன்மைக்கும் தீமைக்கும் இடையே பிளவு உண்டாக்கும் கருவிகளாக வாழமுடியும் என்பதில் ஐயமில்லை.

இன்றைய முதல் வாசகத்தின் மூலம் கிறிஸ்துவுடைய அன்பின் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை அறிய நமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. பகைவரை மன்னித்து, எளியவருக்கு இரக்கம் காட்டி, நோயாளிகளைக் குணமாக்கி, பாவிகளை அரவணைத்து, அநீதிகளை எதிர்த்த இயேசுவின், அன்பின் ஆழத்தை நாம் அறிய வேண்டுமென்றால் அவரைப் போலவே நாமும் பகைவரை மன்னிக்கவும், எளியவருக்கு இரக்கம் காட்டவும், நோயுற்றோருக்கு ஆறுதலளிக்கவும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும் முயலவேண்டும். இயேசு அன்று மூட்டிய அன்புத் தீ இன்று நம் வழியாய் பற்றி எரிய வேண்டும். இச்செயல்களை நம்மிலிருந்தும், நம்முடைய குடும்பங்களிலிருந்து தொடங்க, இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இயேசுவே நீர் மூட்டிய அன்புத் தீ எம்மில் பற்றி எரியட்டும். உமது அன்பின் ஆழத்தை உணர்ந்தவர்களாய் நன்மை தீமையை வேர்பிரித்து அறியவும், உமது உண்மையான அன்பை உலகில் பரப்பவும் வரம் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 13 =