தாய்லாந்து மக்களுக்கு திருத்தந்தையின்  காணொளி செய்தி 

நவம்பர் 20, வருகிற புதன் முதல், நவம்பர் 23, சனிக்கிழமை வரை, தாய்லாந்திற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு, அந்நாட்டினருக்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்லாந்து கத்தோலிக்கர், அந்நாட்டினர் என்பதால், அவர்கள், தங்கள் தாய்நாட்டிற்காகப் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

பல்சமய உரையாடல், ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்தல், உடன்பிறந்த உணர்வில் ஒத்துழைப்பு, குறிப்பாக, ஏழைகள் மற்றும், தேவையில் உள்ளவர்களுக்கும், அமைதிக்கும் பணியாற்றுவதிலும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, தாய்லாந்து திருத்தூதுப் பயணம் உதவும் என்ற நம்பிக்கையையும், திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து நாடு, வளமையான ஆன்மீக மற்றும், கலாச்சார மரபுகளுடன், பல்வேறு இனங்களைக் கொண்ட நாடு என்பதையும், இந்நாட்டினர் தங்களுக்குள் மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசியா முழுவதும், அமைதியான நல்லிணக்க வாழ்வை ஊக்குவிப்பதற்கு கடுமையாய் உழைத்துள்ளவர்கள் என்பதையும் தான் அறிந்திருப்பதாக திருத்தந்தை அச்செய்தியில் பாராட்டியுள்ளார்.

பிணக்குகள், பிரிவினைகள், மற்றும், புறக்கணிப்புகள் எதிர்கொள்ளப்படும் இன்றைய உலகில், ஒவ்வொரு மனிதரின் மாண்பை மதிக்கும் பண்பு, நம் மனிதக் குடும்பத்தின் உண்மையான வளர்ச்சியை வளர்ப்பதற்குத் தூண்டுதலாக இருக்கும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

தோழமை, நீதி மற்றும், அமைதியில் வாழ்தல் ஆகியவற்றில், மனித குடும்பத்தின் உண்மையான வளர்ச்சி இடம்பெற வேண்டுமென்று கூறியுள்ள திருத்தந்தை, இந்த திருத்தூதுப் பயணத்திற்குத் தயாரிக்கும் எல்லாருக்கும், தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டினருக்காகத் தான் இறைவனிடம் மன்றாடுவதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, தனக்காகச் செபிப்பதை நிறுத்திவிட வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாய்லாந்து மக்கள் தொகையில் ஏறத்தாழ 93 விழுக்காட்டினர் புத்த மதத்தினர்.

நன்றி : வத்திக்கான் நியூஸ் 

Add new comment

14 + 5 =