Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
புத்தமத முதுபெரும் தந்தையுடன் திருத்தந்தை பிரான்சிஸ்
நவம்பர் 21, இவ்வியாழன், உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு, பாங்காக், அரசு மாளிகையிலிருந்து, 3.2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, Wat Ratchabophit Sathit Maha Simaram புத்தமத ஆலயத்தில், புத்தமத முதுபெரும்தந்தை 9ம் Ariyavongsagatanana (Somdej Phra Maha Muneewong) அவர்களைச் சந்திக்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த புத்தமத ஆலயம், 1869ம் ஆண்டில், அரசர் 5ம் ராமா அவர்களால் எழுப்பப்பட்டது.
இந்த ஆலயத்தில் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றிய புத்தமத முதுபெரும்தந்தை அவர்கள், 35 ஆண்டுகளுக்குமுன், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க தாய்லாந்து திருத்தூதுப் பயணத்தையும், தாய்லாந்து அரசர்கள், 1897ம் ஆண்டில், திருத்தந்தை 13ம் லியோ, 1934ம் ஆண்டில் திருத்தந்தை 9ம் பயஸ், 1960ம் ஆண்டில் புனித திருத்தந்தை 23ம் யோவான் ஆகியோரை, சந்தித்துள்ளதையும் மகிழ்வோடு நினைவுகூர்ந்தார். உண்மையான புரிந்துணர்வு மற்றும், சமத்துவ உணர்வில், திருத்தந்தையருக்கும், தாய்லாந்து அரசர்களுக்கும் இடையே நிலவிய ஆழமான மற்றும், நீடித்த நட்புறவையும், புத்தமத முதுபெரும்தந்தை குறிப்பிட்டார்.
தாய்லாந்து புத்தமத துறவிகளுள் ஒருவர், புத்தமத முதுபெரும்தந்தையாக, அரசரால் நியமிக்கப்படுகிறார். Somdej Phra Maga Muneewong அவர்கள், 2017ம் ஆண்டில் தாய்லாந்தின் 20வது புத்தமத முதுபெரும்தந்தையாக நியமிக்கப்பட்டார். வத்திக்கான் பெருங்கோவில் பதிக்கப்பட்ட ஓர் அழகிய படத்தை, முதுபெரும்தந்தைக்கு திருத்தந்தை பரிசாக வழங்கினார். ஏறத்தாழ 35 புத்த மதத் துறவியர், திருத்தந்தையுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அந்த துறவு இல்லத்தின் விருந்தினர் புத்தகத்திலும் திருத்தந்தை கையெழுத்திட்டார்.
புத்தமத ஆலயத்தில் திருத்தந்தையும் உரையாற்றினார். உண்மையே நம் மறைப்பணி. இதில் எம்மோடு இணையுங்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, “கிறிஸ்தவர்களும், புத்த மதத்தினரும் தங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகள் மத்தியில், ஒருவரையொருவர் போற்றி, மதிக்கையில், பிரிவினைகளால் புண்பட்டுள்ள மக்களை ஊக்குவித்து ஆதரவளிக்கும் நம்பிக்கை வார்த்தையை இவ்வுலகுக்கு வழங்க முடியும்” என்ற சொற்களை, இந்நிகழ்வையொட்டி, ஹாஸ்டாக் (#ApostolicJourney) குடன் திருத்தந்தை இவ்வியழனன்று, தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்.
நன்றி: வத்திக்கான் செய்திகள்
Add new comment