இதயத்தின் ஞானம் பற்றி திருத்தந்தை 


Vatican News

புனித மரிய மதலேனா அவர்களின் திருவிழாவையொட்டி, அப்புனிதையின் பரிந்துரையை வேண்டும்வண்ணம், இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 'வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவுடன் இடம்பெறும் சந்திப்பிலிருந்து பிறப்பது சாட்சிய வாழ்வு. நம்பிக்கையின் திருத்தூதராம் புனித மரிய மதலேனாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்', என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன. மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தி, இஞ்ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தி வாசகத்தை மையம் கொண்டதாக அமைந்திருந்தது.

'தியானத்தையும் செயலையும் எவ்விதம் ஒன்றிணைப்பது என்பதை தெரிந்துகொள்வது, இதயத்தின் ஞானத்தில் உள்ளது என்பதை இந்நாளின் நற்செய்தி வாசகம் நினைவூட்டுகிறது. புனித மார்த்தாவின் கரங்களாலும், புனித மரியாவின் இதயத்தாலும், இறைவனையும் நம் சகோதர சகோதரிகளையும் அன்புகூரவும், அவர்களுக்கு பணிபுரியவும் தேவைப்படும் அருளுக்காக இறைஞ்சுவோம்' என்ற டுவிட்டர் செய்தியை திருத்தந்தை இஞ்ஞாயிறன்று வெளியிட்டார்.

இதற்கிடையே, சிரியா நாட்டின் இன்றைய துன்ப நிலைகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, சிரியா அதிபர் பஷார் ஹபிஸ் அல்-அசாத் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் கடிதத்தை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், சிரியாவிலுள்ள திருப்பீடப் பிரதிநிதி, கர்தினால் மரியோ  ஸினாரி அவர்களுடன் இணைந்துச் சென்று, அரசுத் தலைவர் அசாத்  அவர்களிடம் ஒப்படைத்தார்.

(நன்றி: வத்திக்கான் நியூஸ்)

Add new comment

7 + 11 =