Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சிலுவையில் அறையப்படும் பெண்கள் - இவர்கள் வியாபாரப் பொருட்களா: திருத்தந்தை பிரான்சிஸ்
வியாபாரப் பொருட்களாக விற்கப்படும் மக்களின் வேதனைக் குரல்கள் குறித்து தனி மனிதர்களோ, நிறுவனங்களோ பாராமுகமாக இருக்க முடியாது என கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ‘பெண்கள் சிலுவையில் அறையப்பட்டுள்ளார்கள். மனித வர்த்தகப் பாதை சொல்லும் வெட்கக்கேடு’ என்ற தலைப்பில் புனித திருத்தந்தை 23ம் ஜான் குழுமத்தினர் வெளியிட்டுள்ள ஒரு நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள திருத்தந்தை, அதில் இவ்வாறு கூறியுள்ளார்.
பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படும் பெண்களை மீட்டு, அவர்களுக்கு புது வாழ்வு வழங்க உழைத்துவரும் இக்குழுவின் அருள்பணியாளர் ஆல்டோ புவனையூட்ட அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முன்னுரையில், இரக்கத்தின் ஜூபிலி ஆண்டின்போது, தான் இந்த குழுமத்தின் இல்லத்தை சந்தித்ததாகவும், அங்கு உதவி பெறும் பெண்களின் சோகக் கதைகளை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றதாகவும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பல வழிகளில் துன்புற்று, தாழ்மைப்படுத்தப்பட்டு, இப்பெண்கள் உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டுள்ளார்கள் என தன் முன்னுரையில் கூறும் திருத்தந்தை, அவர்களுடன் உரையாடியபோது, அவர்கள் அனுபவித்த துன்பங்களை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, மற்றும், அடக்குமுறைகளின் விளைவுகளை தன்னால் உணரமுடிந்தது என எழுதியுள்ளார்.
எந்த ஒரு மனிதரும் விலைபொருளாக நடத்தப்பட முடியாது என்ற உயர் கொள்கையுடன் செயல்படும் புனித திருத்தந்தை 23ம் ஜான் குழுமம், ஆதிக்க வர்க்கத்தின், மற்றும், சுரண்டல்காரர்களின் பல்வேறு மிரட்டல்களுக்கு உட்படும் நிலைகளை சந்தித்தாலும், தொடர்ந்து சேவையாற்றிவருவது குறித்து மகிழ்வதாகத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நன்னெறிச் சீரழிவு என்ற நோயிலிருந்து விடுதலைப் பெற வேண்டுமெனில், தனிமனிதரில் விழிப்புணர்வை நாம் ஒன்றிணைந்து ஏற்படுத்தவேண்டியது அவசியம் எனவும், பாலியல் தொழில், பெண்களை அடிமைத் தனத்திற்கு அழைத்துச் செல்வதாகும் எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை.
வியாபாரப் பொருட்களாக மக்கள் கடத்தப்படுவதை எதிர்க்கும் உலக நாள், ஜூலை 30, இச்செவ்வாய்க்கிழமையன்று சிறப்பிக்கப்படுகின்றது.
(நன்றி: வத்திக்கான் நியூஸ்)
Add new comment