Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்னையின் மக்களாய் கரம்கோர்த்து விண்ணேறுவோம் | Taken up to Heaven with Mary
கடவுளோடு நடத்தல் என்பது அவருடைய திருவுளத்திற்கு ஏற்றவாறு வாழ்வது. அவர் திருவுளத்திற்கு ஏற்ப வாழ்வது என்பது, மற்றவர்களையும் அவருடைய திருவுளத்திற்குள் வாழக் கொண்டுவருவது. அது எப்படிப்பட்ட வாழ்வு நம்மை பிறருக்குக் கொடுக்கும் வாழ்வு.
ஒரு விளக்கக் கதை சொல்வார்கள். கடவுள் ஒருமுறை ஞானிகள் மூவரை அழைத்து, என்னுடைய திருமுகத்தை மனிதர் பார்வையில் ஒளித்து வைக்கப்போகின்றேன். அதுவும் மனிதர்கள் கண்டுபிடிக்கமுடியாத இடத்தில் வைக்கவேண்டும் என்று சொன்னார்.
ஒருவர் சொன்னார் உயர்ந்த மலையின் உச்சியில் வைக்கலாம் என்று – வானலாவிய கேமராக்கள் உண்டு, அது கடவுளுக்கு ஏற்றதாக இல்லை. இரண்டாவது சொன்னார், கடலின் ஆழத்தில் வைக்கலாம் என்றார் அதுவும் கடவுளுக்கு ஏற்றதாக இல்லை – நீர்மூழ்கிக் கப்பல் உண்டு. மற்றவர் சொன்னார் வானத்தில் வைக்கலாம் - சாட்டிலைட்டுகள் உண்டு, அதுவும் அவருக்கு ஏற்றதாக இல்லை.
கடைசியில் கடவுள் நினைத்தார், தன் திருமுகத்தினை மனிதனின் இதயத்தில் வைப்பது என்று. அந்த இடம்தான் அவன் அதிகமாக பார்க்காத பயன்படுத்தாத இடம் என்று முடிவுசெய்தார். கடவுள் தம்முடைய திருமுகத்தை நம்முள் மறைத்து வைத்துள்ளார். அதைக் கண்டுபிடித்து, வாழ, பிறரில் இருக்கும் இறைவனைக் கண்டுபிடிக்கச் செய்வதுதான் நம் விண்ணேற்றத்தின் முதல்படி, அதைத்தான் அன்னை மரியா செய்தார்.
நீதிமொழிகள் நூல் 8:17 கூறுகிறது - எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்பு காட்டுவேன்; என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
அன்னையின் விண்ணேற்பு பெருவிழாவின் நற்செய்தி நமக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். அன்னை மரியா எலிசபெத்தை சந்திக்கும் அந்த நிகழ்வு. ஏன் இந்த பகுதியை கொடுத்திருக்கிறார்கள் என்று அதிகம் யோசித்தது உண்டு. காரணம் விண்ணேற்பின் அடித்தளம் அங்குதான் இருக்கின்றது. அன்னை மரியா எலிசபெத்தினை சந்தித்தபோது, எலிசபெத் சொன்னார் என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் எனக் கத்துகிறார்.
ஆக, கருவுற்று இருக்கும் எலிசபெத்தினைச் சந்திக்க, அவருக்கு உதவிசெய்ய, அவரில் இருக்கும் கடவுளை காண்பித்துக்கொடுக்க அன்னை மலைகடந்து செல்கிறார். அன்னையில் இருக்கும் இறைவனைக் கடவுள் காண்கிறார்.
அதேபோலதான் கானாவூரில் திருமணத்தில், வெட்கட்கத்திற்குள்ளாக இருக்கும் அந்த குடும்பத்திற்கு தன்னிடம் இருக்கும் நம்பிக்கை தன் மகன் வழியாகப் பகிர்கிறார். திருமணத்தின் சிறப்பிற்கான அளவுகோள் உணவு. அப்படிபட்ட சூழ்நிலையில் நம்மை நினைத்துப் பார்ப்போம். அவர்களும் அன்னையின் வழியாக கடவுளைக் கண்டடைகிறார்கள். அனைவரும் எங்கிருந்து வந்தது என்று திகைக்கின்றனர்.
சிலுவையின் அடியில் அந்த வேதனையையும் தாங்கிக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தார். நின்றார். நிற்றல் என்பது விவிலியத்தில் தைரியத்தையும் சக்தியையும் குறித்துக்காட்டுகின்றது.
திகைத்திருந்த சீடர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். இயேசுவின் வாக்குறுதிகளை நினைவூட்டியிருப்பார். அவர்களை மீண்டும் மபெரும் மீட்புப் பணிக்கு தயாரித்திருப்பார். கடவுளின் உடனிருப்பை உறுதிசெய்திருப்பார். நம்மைப்போல எல்லாச் சூழ்நிலையிலும் இருந்தார் ஆனால் சூழ்நிலையின் கைதியாக இல்லை. தான் கடவுளோடு நடக்கின்றேன் என்பதனை வாழ்ந்து காட்டினார்.
சில வேளைகளில் நாம் ஒரு மனிதனின் வியத்தகு செயல்களைப் பார்த்தால் அது யாருடைய பிள்ளை என்பதனைப் பார்ப்போம். இவ்வளவு தைரியமாக இருக்கின்றானே இவன் பின்னால் யார் இருக்கிறார் என்று யோசிக்க வைக்கும். அதே கேள்வியை பலமுறைக் கேட்போம். நம்முடைய நம்பிக்கை வாழ்வையும் பார்த்து அப்படியொரு கேள்வி மற்றவர்களுக்கும் எழுந்தது என்றால், நாம் வாழ ஆரம்பித்திருக்கின்றோம் என்று அர்த்தம். விண்ணேற்றத்திற்குள் நுழைந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.
ஒவ்வொரு மனிதனும் விண்ணேற்றத்திற்கு தகுதியானவன் என்பதனை அன்னையின் வாழ்வின் வழியாகக் காணலாம்.
1. இளம் வயதில் தூய ஆவியானவரால் கருவுறுற்று அதனால் வருகின்ற அவமானங்களையும் துன்பங்களையும் ஏற்கத் துணிந்தார்.
2. இயேசுவைத் தன்னுடைய உதிரத்தில் பத்து மாதங்கள் சுமந்து பெற்றார்.
3. அவரைப் பெற்றெடுப்பதற்காக பல மைல் தொலைவு பயணம் செய்தார்.
4. தன்னுடைய குடும்பத்தை புனித யோசேப்புடன் இணைந்து வழிநடத்தினார்.
5. கணவனை இழந்து, ஒரு கைம்பெண்ணாக இயேசுவை வளர்த்தெடுத்தார்.
6. இயேசுவை இறைத்திட்டத்திற்கு ஏற்ப பயிற்றுவித்தார்.
7. சிலுவையில் தன்னுடைய மகனை கையளித்து, அதன் வேதனையை அனுபவித்தார்.
8. பயந்துபோயிருந்த சீடர்களுடன் உடன்பயணித்துத் திடம் அளித்தார்.
வாழ்வு என்பது நம்முடைய துன்பத்தில் வேதனையில் நிறைவுறுவது இல்லை என்பதனை அறிந்து, கடவுளோடு நாம் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையில் பிறருடைய வாழ்வையும் வளப்படுத்திக் கொண்டே செல்லவேண்டும். எலிசபெத் அன்னை மரியாவைப் பார்த்து சொன்னது எப்பொழுதும் நம் நினைவில் இருக்கட்டும் “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்.” இதுதான் விண்ணேற்றத்தின் அச்சாணி, ஆண்டவர் சொன்னவை நிறைவேறும் என்று நம்பி வாழுங்கள், பிறரையும் அவ்வாறு வாழ வழிகாட்டுங்கள். விண்ணேற்பு அனைவருக்கும் சாத்தியம். அனைவரும் அன்னையோடு கரம்கோர்த்துச் செல்வோம்.
Add new comment