உத்திரப் பிரதேச அரசின் மதமாற்ற குற்றச்சாட்டுக் கைதுக்கு தடை | வேரித்தாஸ் செய்திகள்


மதமாற்றம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்படவிருந்த இரு கிறிஸ்தவ கல்வியாளர்களைக் கைதுச் செய்ய தடை விதித்துள்ளது இந்திய உச்ச நீதிமன்றம்.

மக்களை பெருமளவில் மதமாற்றம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்படவிருந்த இரு கிறிஸ்தவ கல்வியாளர்களுக்கு உத்திரபிரதேச மாநில உயர் நீதிமன்றம் பிணைய விடுதலை வழங்க மறுத்த நிலையில், அவர்களைக் கைது செய்ய தற்காலிக தடை விதித்துள்ளது இந்திய உச்ச நீதிமன்றம்.

உத்தரபிரதேசத்தின் சாம் ஹிக்கின்போட்டோம் (Sam ஹிக்கின்போட்டோம்) வேளாண், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திர பிஹாரி லால்  , அவர் சகோதரரும் அப்பல்கலைக்கழக இயக்குனருமான வினோத் பிஹாரி லால் ஆகிய இருவரும் கிறிஸ்தவர்களை பெருமளவில் கிறிஸ்தவத்திற்கு மனம் திருப்பினார்கள் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இவ்வழக்கை இம்மாதம் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன் அவர்கள் கைது செய்யப்படவும் தடைவிதித்துள்ளது உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு.

மதமாற்றம் குறித்த காவல்துறை முதல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டபோது இவ்விருவரின் பெயர்கள் இல்லையென்றும், அதற்கும் எட்டு மாதங்களுக்குப்பின்னரே காவல்துறையின் விசாரணைக்கு இவர்கள் அழைக்கப்பட்டார்கள் என்ற கூற்றை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இது குறித்த விளக்கம் கேட்டு உத்திரபிரதேச அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகக் குழுவில் அங்கத்தினராக இருந்துகொண்டே தலைமையுடன் மோதிக்கொண்டிருந்த ஐசக் பிராங்க் என்பவரும், உடன்மாணவரை பாலினவகையில் துன்புறுத்தியதற்காக பலகலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தினேஷ் ஷுக்லா  என்பவரும் இணைந்து, மதமாற்றம் குறித்த புகாரை காவல் நிலையத்தில் துணைவேந்தர் மற்றும் இயக்குனருக்கு எதிராக பதிவுச்செய்துள்ளனர்.

1910ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டைச்சேர்ந்த Sam Higginbottom என்பவரால் உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் தற்போது இந்தியாவின் 14 கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளால் நடத்தப்படுகிறது. 

- அருள்பணி வி. ஜான்சன்

(Source from Vatican  News )

Add new comment

1 + 15 =