Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
முத்துநகரம் தூத்துக்குடி மறைமாவட்டம் அதன் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடியது. | வேரித்தாஸ் செய்திகள்
தூத்துக்குடி மறைமாவட்டம் அதன் நூற்றாண்டு விழாவை ஜூன் 10-11 தேதிகளில் கொண்டாடியது.
தூத்துக்குடி தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.
நூற்றாண்டு விழா சிறப்புத்திருப்பலியில் தலைமை விருந்தினராக இந்தியா மற்றும் நேபாளத்துக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் லியோபோல்டோ கிரெல்லி, தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலத்தின் திருஅவை தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் மற்றும் ஹைதராபாத் பேராயர் கர்தினால் அந்தோணி பூலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மறைமாவட்டம் தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பகுதியையும், நெல்லை மாவட்டத்தின் கிட்டத்தட்ட பாதிப் பகுதியையும், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சிறிய பகுதியையும் கொண்டுள்ளது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள், இயேசு சபை துறவி புனித பிரான்சிஸ் சேவியரின் நற்செய்தி பணி வழியாக திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாகினர். அவர் தனது பணிவாழ்வின் பெரும்பகுதியை இந்த பகுதியில் நற்செய்தி பணியாற்றவே செலவழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 12, 1923 அன்று திருத்தந்தை XI பயஸ் அவர்களால் திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்திலிருந்து தூத்துக்குடியை பிரித்து ஒரு புதிய மறைமாவட்டமாக அமைக்கப்பட்டு மறைமாவட்ட குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தூத்துக்குடி மறைமாவட்டத்தின் முதல் ஆயராக யேசுசபை ஆயர் பிரான்சிஸ் திபுர்டியஸ் ரோச் அவர்கள் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
புதிய மறைமாவட்டத்தில் அந்த நேரத்தில் 18 பங்குகளும் 23 மறைமாவட்ட குருக்களும் இருந்தனர். மறைமாவட்டம் 6440 சதுர மைல்களை உள்ளடக்கியது.
புனித பிரான்சிஸ் சேவியர் மற்றும் குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆகியோர் மறைமாவட்டத்தின் பாதுகாவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,
மறைமாவட்டத்திற்காக அயராது உழைத்த ஆயர்களில் பிரான்சிஸ் திபுர்டியஸ் ரோச், எஸ்.ஜே, தோமஸ் பெர்னாண்டோ, அம்புரோஸ் மதளைமுத்து, சிலுவைமது தெரேசநாதன் அமல்நாதர், பீட்டர் பெர்னாண்டோ, இவோன் அம்புரோஸ் ஆகியோர் இந்த மறைமாவட்டத்திற்கு ஆற்றிய பணிகள் ஏராளம். அவர்களின் தியாகமும், மறைப்பணியுமே இந்த மறைமாவட்டம் இன்று வரை சிறப்புற காரணம் என்பது இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
தற்போதைய ஆயர் ஸ்டீபன் ஆண்டனி பிள்ளை 2019 முதல்:
இன்று, இந்த மறைமாவட்டத்தில் 119 பங்குகள் , 300 க்கும் மேற்பட்ட கிளை பங்குகள் , 5 மறைவட்டங்கள் மற்றும் சுமார் 5,00,000 கத்தோலிக்கர்கள் உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
தூத்துக்குடி மறைமாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மறைமாவட்டமாகவும், இந்தியாவின் மூன்றாவது பெரிய மறைமாவட்டமாகவும் உள்ளது.
247 மறைமாவட்ட குருக்கள் , சுமார் 60 துறவற குருக்கள் , சுமார் 40 துறவற சகோதரர்கள் மற்றும் 770க்கும் மேற்பட்ட அருள்சகோதரிகள் மறைமாவட்டத்தில் தங்கள் சேவையை கடவுளுக்கும் இறைவார்த்தைக்கும் பணிந்து ஆற்றி வருகின்றனர்.
மேலும் இதுவரை 137 அருள்பணியாளர்கள் பல ஆண்டுகளாக மறைமாவட்டத்தில் தங்கள் தன்னலமற்ற சேவையை ஆற்றி இன்று இறைவனில் இளைப்பாற்றி கொண்டு இருக்கின்றனர் அவர்களின் சேவையை நமது மறைமாவட்டம் நினைவு கூறுகின்றது என்று ஆயர் ஸ்டீபன் நெகிழ்ச்சியோடு கூறினார்.
தூத்துக்குடி மறைமாவட்டத்தில் ஏழு நவசந்நியாச இல்லங்கள் , குருமடஙகள், மற்றும் ஐந்து தியான மையங்கள் இயங்கி வருகின்றன.
துறவற சபைகளின் பங்களிப்பு:
மறைமாவட்டம் தொடங்குவதற்கு முன்பே கல்வியில் கவனம் செலுத்தப்பட்டது. 1905 இல் பெண்களுக்கான புனித அலோசியஸ் ஆரம்பப் பள்ளி செயல்படத் தொடங்கியது. இது 1925 இல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக மலர்ந்தது.
1942 ஆம் ஆண்டில், திருச்சிலுவை அருள்சகோதரிகள் தூத்துக்குடியில் ஆங்கிலோ-இந்தியன் பள்ளியை நிறுவினர், அது இன்றும் பெருமையுடன் பிரகாசிக்கிறது.
தூத்துக்குடி மறைமாவட்டம் யேசுசபையினர் கப்புச்சின்ஸ் சபையினர் , ரோசரியன்ஸ், சலேசிய குருக்கள் , டி லா சாலே மற்றும் தூய இருதய சகோதரர்களின் சிறந்த சேவைகளால் பயனடைந்துள்ளது. ஆயர் அவர்களின் கூற்றுப்படி, மறைமாவட்டத்தில் அவர்களின் அற்புதமான சேவை நம்பமுடியாத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கல்வி, மருத்துவமனை மற்றும் பிற தொண்டு நடவடிக்கைகளில் செர்வைட்ஸ், பான் செகோர்ஸ் மற்றும் மேரியின் பிரான்சிஸ்கன் மறைபரப்பு பணியில் சகோதரிகளின் அயராத சேவையை மறைமாவட்டம் மறக்க முடியாது.
தொழுநோயாளிகள் மத்தியில் FMM சகோதரிகள் பணியாற்றினர். அவர்களுக்கு நன்றி, தொழுநோய், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, ஒழிக்கப்பட்டது. சேர்வைட்களால் நடத்தப்படும் புனித மேரி கல்லூரி இளம் பெண்களின் வளர்ச்சிக்காக அற்புதங்களைச் செய்துள்ளது.
புனித அன்னாள் சபையின் சகோதரிகள் புனித இதய மருத்துவமனை மற்றும் பள்ளிகளை நடத்துகிறார்கள், மேலும் ஏழைகளின் சகோதரிகள் 100 க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு இடமளித்து, அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் அவர்களைப் பராமரிக்கின்றனர். அவர்களின் தியாக சேவை ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது என்று கூறிய ஆயர் துறவற சபைகளின் தன்னலமற்ற சேவையை பாராட்டி அவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.
கல்வி:
கல்வி வழங்கியதில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் என்றும் முன்னோடியாக இருக்கிறாரக்ள் என்பதில் எப்போதும் பெருமை கொள்கின்றோம் என்று ஆயர் அவர்கள் தனது கருத்தை வெளிப்படுத்தினர்.
வடக்கங்குளத்தில் உள்ள புனித தெரசா பள்ளி, மணப்பாடு புனித ஜோசப் பள்ளி, திசையன்விளையில் உள்ள புனித மீட்பர் பள்ளி ஆகியவை பொதுவான பள்ளிகளாக இருந்தன.
இப்போது, ஏழு மழலையர் பள்ளிகள், 134 தொடக்கப் பள்ளிகள், 60 நடுநிலைப் பள்ளிகள், 20 உயர்நிலைப் பள்ளிகள், 30 மேல்நிலைப் பள்ளிகள், 20 ஆங்கில வழிப் பள்ளிகள், ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பத்து தொழில் பயிற்சி நிறுவனங்கள், 1 பி.எட். கல்லூரி மற்றும் ஐந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மறைமாவட்டத்தில் (மறைமாவட்டம் மற்றும் துறவற சபைகளால் நடத்தப்படுகிறது) தனது கல்வி சேவையை தொடர்ந்து ஆற்றி வருகிறது.
மாநில மற்றும் மத்திய அரசு பணிகளில் சேர விரும்பும் மாணவ மாணவிகளுக்கு முக்தியுடையான் நடுவத்தில் பயிற்சி மையத்தையும் தொடங்கி அதிலும் சிறப்பாக பல அரசு அதிகாரிகளை ஊக்குவித்து வருகிறது நமது தூத்துக்குடி மறைமாவட்டம்.
மேலும், கூத்தன்குளியில், இளைஞர்களுக்காக, குறிப்பாக கடல் துறையில் சிறந்து விளங்க விரும்புபவர்களுக்காக, கடல்சார் அகாடமியைத் திறப்பதற்கான அடித்தளத்தை மறைமாவட்டம் ஏற்கனவே அமைத்துள்ளது.
மேலும் மதுவிற்கு அடிமையாகிய ஆண்களுக்கு அவர்களை மதுவின் பிடியிலிருந்து விடுவிக்க போதை மறுவாழ்வு மையத்திற்கு அடித்தளம் அமைத்து அவர்களுக்கும் ஒரு புது வாழ்வு தர முயற்சி எடுத்து வருகிறது. விரைவில் தென் மண்டலம் அதன் மேய்ப்பு பணி மையத்தை மக்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கி அதன் மூலம் பலரது வாழ்வில் ஒளியேற்றி அது பிரகாசமான எதிர்காலத்தை கொடுத்திட வேண்டும் என்று தொடர்ந்து முயன்று வருகிறது.
சமூக செயல்பாடுகள்:
புனித ஜோசப் அறக்கட்டளை என அழைக்கப்படும் நினைவுச்சின்னம் மற்றும் வரலாற்று நிறுவனம் 1854 இல் ஆலந்தலையில் நிறுவப்பட்டது, பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அது அடைக்கலாபுரத்திற்கு மாற்றப்பட்டது. இது 170 ஆண்டுகளுக்கும் மேலாக மறைமாவட்டத்தின் கிரீடமாகவும் இதயமாகவும் உள்ளது. இது அனைத்து வகையான ஏழைகளுக்கும் சேவை செய்கிறது. மறைமாவட்டம் ஏழைகளுக்கும் இந்த சமுதாயத்திற்கும் இடைவிடாது தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. மறைமாவட்டம் துறவற சபைகளுடன் இணைந்து பல சமூக மற்றும் தொண்டு நிறுவனங்களை நடத்துகிறது.
இறை மக்களின் ஈடுபாடு:
மறைமாவட்டத்தில் இறைமக்கள் பெரும் பங்கு வகிக்க இறைமக்களுக்கு இயக்கங்களும் உதவியுள்ளன. மரியாளின் சேனை , வின்சென்ட் தி பால், அமலோற்பவமாதா சபை , போதை மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் பிற மறைமாவட்டப் பணியில் இறைமக்கள் தீவிரமாக ஈடுபட உதவியது. இறை மக்கள் மையம், நற்செய்தி மையம், கல்லாமொழி மீனவர் நல மையம் ஆகியவை இறை மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்தன. மறைமாவட்டம் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு கல்வி மையம் ஒன்றைத் தொடங்கி சிறப்பு கவனம் செலுத்தி வருவது பாராட்டத்தக்க பணிகள் ஆகும்.
முன்னோடிகள்:
1938 இல் சிறுமலர் இளங்குருமடம் வடக்கன்குளத்தில் இயங்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது பின்னர் அந்த இளங்குருமடம் 1946ல் தூத்துக்குடி இன்னாசியர்புரத்திற்கு மாற்றப்பட்டது. 1970 ஆம் ஆண்டில், மறைமாவட்டம் தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக மேய்ப்பு பணி மையத்தை நிறுவியது.
1978 இல் தந்தை ஆண்டனி பார்வையற்றோர் மற்றும் பிற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான புனித லூசியா நிறுவனத்தை நிறுவினார். இது குறைந்த வருமானம் உள்ள மக்களுக்கு சேவையை வழங்குகிறது. பல நல்ல உள்ளம் கொண்ட உள்ளங்கள் அவர்களுக்கு மனமுவந்து உதவி செய்து வருகிறார்கள்.
இந்த மேய்ப்புமையம் பணி தினசரி செபங்கள் அடங்கிய புத்தகங்கள், திருப்பலி புத்தகங்கள், சங்கீத புத்தகங்கள், மாலை வேளை செபங்கள் பற்றிய புத்தகங்கள் மற்றும் இறுதி சடங்குகளுக்கான பிரார்த்தனை புத்தகங்களை தயாரித்தது.
மணப்பாட்டைச் சேர்ந்த தந்தை லாரன்ஸ் சேவியர் எஃப்டோ இந்தியாவின் முதல் குருவாகவும் (1894), மற்றும் ஆயர் திபர்டியஸ் ரோச் இந்தியாவின் முதல் ஆயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டவர்கள் என்பது மிகப்பெரிய ஆசீர்வாதமாக இன்று வரை இருப்பது நம் அனைவருக்கும் பெருமை ஆகும்.
தூத்துக்குடி மறைமாவட்டம்தான் கோடை விடுமுறையின் போது இளம் மாணவர்களுக்காக முதல் முதலில் விடுமுறை விவிலிய பள்ளியை VBS அறிமுகப்படுத்தியது. இந்த தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது அதனால் அனைத்து மறைமாவட்டங்களிலும் இந்த விடுமுறை விவிலிய பள்ளி தொடங்கப்பட்டு இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
மேலும் சிறப்பாக நமது மறைமாவட்டத்தின் முதல் கத்தோலிக்க சட்டமன்ற உறுப்பினரான திருமதி ஜெயமணி மாசிலா மணி கிறிஸ்தவர்களின் அரசியல் செயல்பாட்டில் பங்கேற்று சட்டமன்ற உறுப்பினர் நிலைக்கு சென்றார் என்பதும் நமக்கு பெருமையே.
திரு.யாகப்ப பிள்ளை (வடக்கன்குளம்), திருமதி பிச்சைகாரியம்மாள் பெர்னாண்டோ (மணப்பாடு), திரு.வியாகுலம் மிரண்டா (மணப்பாடு), திரு.ஆண்டனி மைக்கேல் பெர்னாண்டோ (இடிந்தகரை), திரு.தம்பையா பிள்ளை (வேம்பார்) இவர்கள் அனைவரும் திருத்தந்தையிடமிருந்து இருந்து பெனிமரேந்தி விருதுகள் பெற்றுள்ளனர் என்பது பதிவு செய்யப்படவேண்டியது. மேலும் திரு. பெரிரா, திரு. கிறிஸ்டியன் கோம்ஸ், திரு. ஜே.எல்.பி. ரோச், சி.ஐ.ஆர். மச்சாடோ மற்றும் திரு. டி.ஆர். பின்ஹீரா ஆகியோருக்கு செவாலியர் என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அருட்தந்தை ஆண்டனி சூசைநாதர் மற்றும் அகஸ்டின் பெரேரா, பீட்டர் பரதேசி, சகோ. அட்ரியன் காசன்னல், புனித தேவசகாயம், புனித ஜான் தி பிரிட்டோ என்ற பெயர்கொண்ட வீரமாமுனிவர் ஆகியோர் தூத்துக்குடி மறைமாவட்டத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் எனபது எம் மறைமாவட்டத்திற்கு மாபெரும் பெருமை தரும் செய்தி ஆகும்.,
மறைசாட்சிகளின் இரத்தம்
முத்து நகர மக்கள் 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிறிஸ்தவர்களாக மாறினர், இதனால் இவர்கள் பலவிதமான துன்பங்களுக்கும், சொல்லொணாத் துயரங்களுக்கும் ஆளாகினர். அதனால் எம் மறைமாவதின் வரலாறு வலிகள் நிறைந்த வரலாற்றைக் கொண்டது என்பதை நினைவு கூறும்பொழுது யேசுவின் சிலுவை சாவினை நம் கண் முன் கொண்டு வருகிறார்கள் மறைசாட்சிகள்.
எதிரிகள் அவர்கள் மீது கற்பனை செய்ய முடியாத அழிவையும் பேரழிவையும் ஏற்படுத்தினார்கள். இதன் விளைவாக, அவர்கள் போர்த்துகீசியர்களின் உதவியை நாடி, கிறிஸ்தவர்களாக திருமுழுக்கு பெற்றார்கள்.
இந்த காலகட்டத்தில் புனித பிரான்சிஸ் சேவியர் என்ற மிகப்பெரிய மறைபரப்பு பணியாளர் அவர்களின் காலடி இந்த மண்ணில் பதிந்தது. அவர்தான் அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தினார். கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரையிலான கடலோர கிராமங்களில் வாழ்ந்த பலரை கிறிஸ்தவர்களாக மாற்றினார்.
இந்த மக்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்த பெருமை அருளப்பணியாளர் ஹென்ரிசிக்ஸ் அவர்களையே சேரும். இவர்தான் பல் பங்குகளை உருவாக்கினார். புன்னைக்காயலில், முதல் கல்லூரி, முதல் மருந்தகம், முதல் அச்சகம், குறிப்பாக அனைத்து செபங்களையும் தமிழில் அச்சடித்த முதல் கல்லூரியைத் தொடங்கி குருமடத்தை தொடங்கினார்.
வலுவான மறைபரப்பு பொருள்பணியாளர்களால் பயிற்றுவிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் எதிரிகளால் ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறை காலங்களில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
20 வயதில் தந்தை ஆண்டனி கிரிமினாலி தமிழகம் வந்து தமிழ் கற்றார். கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள அனைத்து கடற்கரை கிராமங்களையும் பார்வையிட்டார். இந்த நேரத்தில், போர் வெடித்தது. விஜயநகர மன்னர் கிறிஸ்தவர்களைத் தாக்கி அவர்களில் சிலரைக் கொன்றார். மக்களும் தங்கள் நம்பிக்கைக்காக தங்கள் இரத்தத்தை சிந்தி மறைசாட்சிகளாக மரித்தார்கள். அப்பொழுது தந்தை கிரிமினாலி ஒரு ஈட்டியால் கொல்லப்பட வேண்டும், ஆனால் லூயிஸ் அல்போன்ஸ் அதை தனது உடலில் தாங்கிக்கொண்டு இறந்து உண்மையான மறைசாட்சியாக மாறினார். இருப்பினும் தந்தை கிரிமினாலி பின்னர் தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சியாக தனது உயிரை கடவுளுக்காகவும், மறைபரப்பு பணிக்காகவும் தனது உயிரை துறந்தார்.
மேலும் இந்த மறைமாவட்டம் மறைசாட்சிகளின் பூமி ஐந்து கத்தோலிக்கர்கள் தங்கள் நம்பிக்கைக்காக தலை துண்டிக்கப்பட்டு உயிர் நீத்துள்ளனர். வரலாற்று சிறப்புமிகுந்த இந்த மறைமாவட்டம் மறைசாட்சிகளின் இரத்தத்தில் வளர்ந்துள்ளது. இப்படிப்பட்ட மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடுவதில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது இன்னும் அதிகமாக எத்தனை அடக்குமுறைகளை கண்டாலும் இன்னும் விருட்சமாக வளரும் ஆலமரம் கிறிஸ்தவம். ஏனெனில் கிறிஸ்துவே நம் அனைவரின் மீட்பர். அவரில் இந்த உலகம் வாழும் என்று மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் கூறினார்.
_அருள்பணி வி.ஜான்சன் SdC
(News Source from RVA English News)
Add new comment